ரூபாய் நோட்டுகளில் எழுதுவது குற்றமா?

Rupee notes
Rupee notesImg Credit: Dreamstime
Published on

நம் அன்றாட வாழ்வில் முக்கிய பயன்பாடாக இருக்கும் இந்த ரூபாய் நோட்டு எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்பதை பதிவில் காணலாம்.

நான் பயன்படுத்தும் அனைத்து பேப்பர்களும்  மிக எளிதில் கிழியும் மற்றும் மக்கும் தன்மை உடையது. ஆனால் ரூபாய் நோட்டு மட்டும் அவ்வளவு எளிதில் தண்ணீர் பட்டாலோ அல்லது மடக்கி வைத்தாலோ கிழிந்து விடாது. சில நேரம் தவறுதலாக துவைக்கும் போது கூட  தண்ணீரில் நனைந்து போன ரூபாய் நோட்டுகளை வெயிலில் காய வைத்தால் மீண்டும் அதன்  பழைய நிலைக்கு வந்து விடும்.

ரூபாய் நோட்டு பேப்பரில் இருந்து தயாரிக்கப்படுவதில்லை. மாறாக அது பருத்தியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. பொதுவாக நாம் பருத்தியிலிருந்து நூலை உருவாக்கி அதிலிருந்து ஆடைகளை உருவாக்குகிறோம். பருத்தி என்றாலே அது ஆடைகள் தயாரிக்க பயன்படுகிறது என்பதுதான் நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அந்த பருத்தியை பயன்படுத்தி தான் நம் அன்றாட பயன்பாட்டில் உள்ள ரூபாய் நோட்டு தயாரிக்கப்படுகிறது.

பருத்தி மற்றும் லினென் ஆகியவற்றுடன் ஜெலட்டின் எனும் பிசின் கரைசல் சேர்க்கப்பட்டு ரூபாய் நோட்டு தயாரிக்கப்படுகிறது. பேப்பரை விட பருத்தி மிகவும் வலுவானது, எளிதில் கிழியாது, நீண்ட நாள் நீடித்து உழைக்கும் என்பதால் ரூபாய் நோட்டு தயாரிப்பில் பருத்தி முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

பொதுவாக நாம் பயன்படுத்தும் அனைத்து ரூபாய் நோட்டுகளும் ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்படுகின்றன. அனைத்து ரூபாய் நோட்டுகளிலும் ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பம் இருக்கும். நாணயங்கள் மட்டும் இந்திய அரசால் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகின்றன.

பார்வையற்றவர்களும் ரூபாய் நோட்டுக்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் ரூபாய் நோட்டில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. இதன் மூலமே பார்வையற்றவர்கள் ரூபாய் நோட்டுகளை அடையாளம் கண்டு கொள்கிறார்கள். ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவதற்கு தனித்தன்மை வாய்ந்த மை பயன்படுத்தப்படுகிறது. இதனால் தண்ணீர், வியர்வை, வாசனை திரவியம் போன்றவை ரூபாய் நோட்டில் பட்டாலும் எளிதில் அழியாத வண்ணம் தயாரிக்கப்படுகிறது.

இந்திய அரசால் வெளியிடப்படும் பத்து ரூபாய் நாணயம் மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்று. உலகில் வேறு எந்த நாட்டிலும் இந்த மாதிரியான வடிவமைப்பு இல்லை. பத்து ரூபாய் நாணயத்தின் மையத்தில் செம்பு மற்றும் நிக்கல் உலோக கலவை பயன்படுத்தப்படுகிறது. நாணயத்தின் வெளிவட்டத்தில் அலுமினியம் மற்றும் பித்தளை உலோக கலவை பயன்படுத்தப்பட்டு தயாரிக்கப்படுகிறது. ஒரு 10 ரூபாய் நாணயம் தயாரிப்பதற்கு அரசுக்கு தோராயமாக 6  ரூபாய் வரை செலவாகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள ஐந்து ரூபாய் நாணயங்கள் முதன்முதலாக 1985 ஆம் ஆண்டு தான் வெளியிடப்பட்டது.

இதையும் படியுங்கள்:
சாமான்ய மனிதனுக்கான பேருந்து வேண்டும்!
Rupee notes

இந்தியாவில் உள்ள ரூபாய் நோட்டுகள் அனைத்தும் ஒவ்வொரு தனிச்சிறப்பு வாய்ந்தவை. அனைத்து நோட்டுகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ரூபாய் நோட்டின் ஒவ்வொரு மதிப்பிலும்  நம் நாட்டின் வரலாற்றையும், இயற்கை அமைப்பையும்  குறிக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. 5 ரூபாய் நோட்டில் விவசாயத்தின் பெருமையை வலியுறுத்தும் வகையிலும், 10 ரூபாய் நோட்டில் விலங்குகளின் இன்றியமையை வலியுறுத்தும் வகையில்  யானை, புலி முதலான விலங்குகளின் உருவங்களும், 20 ரூபாய் நோட்டில் கோவளம் கடற்கரையும், எல்லோரா குகைகளும்,  50 ரூபாய் நோட்டில் ஹம்பியின்  வரைபடமும், 100 ரூபாய் நோட்டில் உலகப் புகழ்பெற்ற குஜராத்தில் உள்ள ராணி கி வாவ் என்று அழைக்கப்படும் படிக்கிணறுகளும், 200 ரூபாய் நோட்டில் யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமான சாஞ்சி ஸ்தூபியின் வரைபடமும், 500 டெல்லி செங்கோட்டையின் வரைபடமும் அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த ரூபாய் நோட்டுகளை புற ஊதாக்கதிர்கள் இடையே காட்டும்போது அதன் மதிப்பு ஒளிரும் தன்மை வாய்ந்தது.

நாம்  புழக்கத்தில் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள் இந்திய நாட்டின் பல்வேறு இடங்களில் அச்சடிக்கப்படுகின்றன. இந்திய ரூபாய் நோட்டுகள் அனைத்தும் நாசிக், மத்திய பிரதேசத்தில் உள்ள தேவாஸ், கர்நாடகத்தில் உள்ள மைசூர், மேற்கு வங்கத்தில் உள்ள சல்போனி போன்ற இடங்களில் அச்சடிக்கப்படுகின்றது.

இந்திய அரசால் வெளியிடப்படும் நாணயங்கள் மகாராஷ்டிராவில் உள்ள மும்பை, கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர், உத்திரபிரதேசத்தில் உள்ள நோய்டா போன்ற இடங்களில் அச்சடிக்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
கலா சாதனாலயா நாட்டியப்பள்ளியின் 'பாவார்ப்பணம்' நிகழ்ச்சி!
Rupee notes

இவ்வாறு பல வரலாறுகளை கடந்து நம் கைக்கு வரும் ரூபாய் நோட்டுகளில் எழுதுவதும், தேவையில்லாதவற்றைக் கிறுக்கி வைப்பதும்  சட்டப்படி குற்றமாக பார்க்கப்படுகிறது. அது நம்முடைய தாய் நாட்டை அவமதிப்பதாக கருதுவதால் தான் ரூபாய் நோட்டுகளில் எழுதுவதை தவிர்க்க வேண்டும் என்பது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com