வரம் தரும் அன்னையே வணங்கினோம் உன்னையே!

வரம் தரும் அன்னையே வணங்கினோம் உன்னையே!

-ரேவதி பாலு

பாண்டிச்சேரி அன்னை என்று பலராலும் போற்றப்படும் ஶ்ரீஅன்னைக்கு இன்று பிறந்த தினம்.

ஸ்ரீ அன்னை 1878ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாள் பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் பிறந்தார். பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் மிர்ரா அல்ஃபாஸா என்பதாகும்! இளமையிலேயே ஆன்மீக நாட்டம் கொண்ட ஸ்ரீ அன்னை  தினந்தோறும் தியானத்தில் ஆழ்வதும் இறை ஒளியை தரிசிப்பதும் வழக்கமாக இருந்தது. அவருக்கு தினந்தோறும் ஒரு கனவு வரும். அதில் அவர் தன் உடலை விட்டு வெளியேறி சூட்சும உருவத்தில் மேலே மேலே சென்று மேகக்கூட்டங்களிடையே சஞ்சரிப்பது போல உணர்வார். அவருடைய ஒளி வீசும் உடலை ஒளிமயமான ஒரு ஆடை தழுவி நிற்கும்.  அவரை நோக்கி உலகின் எல்லா பக்கங்களிலிருந்தும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், நோயாளிகளும், வந்து, அவருடைய ஒளிமயமான உடையை தொட்டவுடன் அவர்களின் பிணியும் துயரமும் தீரும்.

அதே போல, ஸ்ரீ அன்னை கனவில் ஒளி வீசும் கண்களுடன் நீண்ட தாடியுடன் ஒரு மனிதர் அடிக்கடி வந்தார். அவர் இந்தியத் தத்துவங்கள், வேத உபநிஷத்துகள் பற்றி மிர்ராவுக்கு எடுத்துரைத்தார். பிற்காலத்தில் பாண்டிச்சேரியில் ஸ்ரீ அரவிந்தரை தரிசித்தபோது, அவரே தனக்கு கனவில் வந்து உபதேசித்தவர், அவரே தனது குரு என்று கண்டு கொண்டார்.

கடவுள் நீ விரும்பியதெல்லாம் கொடுத்து விடுவது இல்லை. எதை அடைய உனக்கு தகுதி இருக்கிறதோ அதை மட்டுமே கொடுக்கிறார் என்பார் ஸ்ரீ அன்னை. எல்லா பிரார்த்தனைகளும் பலிக்கும். ஆனால், இறைவனின் நோக்கத்திற்கு எதிரான பிரார்த்தனைகள் பலிக்காது என்பார் ஸ்ரீ அன்னை. அதேநேரம் மனிதன் வாழ்வில் ஏற்படும் எத்தகைய சிக்கலையும் தீர்க்க வல்லது இடைவிடாத பிரார்த்தனை என்றும் ஸ்ரீ அன்னை உபதேசித்திருக்கிறார். மேலும் ஒரு குறிக்கோளின் மீது செலுத்தப்படும் ஒரு முகமான கவனம் அந்த குறிக்கோளை அடைதற்கு உதவியாக இருக்கிறது என்றும் பயிற்சி வழியாக நாம் அடைய விரும்பும் லட்சியத்தை நோக்கி மனது ஒருமைப்படும்போது அந்த லட்சியம் எளிதாகிறது என்றும் கூறுகிறார். இந்த ஒருமுகப்பட்ட பயிற்சி மனிதன் ஞானம் அடைவதற்கும் வழிகோலுகிறது.

ஸ்ரீ அன்னையின் கருணை அளப்பரியது.  மனிதர்கள் மீது மட்டும் அவர் கருணை காட்டவில்லை. விலங்குகள், மரங்கள் போன்றவற்றின் மீதும் கருணையோடு அருள் புரிந்தார். பாண்டிச்சேரியில் ஆசிரமத்தில் வயதான மாமரம் ஒன்று இருந்தது. அது மிகவும் பரந்து இடத்தை அடைத்துக் கொண்டிருந்ததால் அருகே மற்ற மரம், செடி கொடிகள் வளர முடியவில்லை. அதனால் அதை வெட்டி விட வேண்டுமென்று ஆசிரம காப்பாளர் நினைத்தார்.

மறுநாள் ஸ்ரீ அன்னையிடம் இதற்கு உத்திரவு வாங்க சென்றபோது ஸ்ரீ அன்னை அவரை அந்த மரத்தை வெட்ட விடாமல் தடுத்து விட்டார். மரத்தில் வாழ்ந்து வந்த ஒரு தேவதை அந்த மரத்தை வெட்ட வேண்டாமென்று நேற்றிரவு தன்னிடம் கேட்டுக் கொண்டபடியால் அதை வெட்ட வேண்டாமென்று கூறினார். அந்த அளவுக்குக் கருணை உள்ளம் ஸ்ரீ அன்னைக்கு.

ஒருமுறை ஸ்ரீ அன்னை ஆசிரமத்தில் சாதகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.  அப்போது திடீரென சமாதியில் ஆழ்ந்தார். வெகு நேரம் கழித்தே கண்களைத் திறந்தார். சாதகர்கள் இதைப் பற்றி ஸ்ரீ அன்னையிடம் வினவியபோது, கிரீஸ் நாட்டில் பலர் தன் உதவியை மானசீகமாக வேண்டி அழைத்ததால் சூட்சும ரூபத்தில் அங்கு சென்று உதவி விட்டு வந்ததாகக் குறிப்பிட்டார்.

ஸ்ரீ அன்னையை வழிபட, அர்ச்சனையோ மந்திரங்களோ தேவையில்லை. ஆற்றல் மிக்க வண்ண வண்ண மலர்களை கொண்டு வழிபாடு செய்தாலே போதும். மென்மைக்கு உதாரணமாக மலர்களைச் சொல்வோம். மலரினும் மென்மையானவர் அன்னை. ஸ்ரீ அன்னையின் பூத உடல் சமாதியில் அடக்கம் செய்யப்பட்டு விட்டபோதிலும், இன்றும் சூட்சும ரூபத்தில், சமாதியிலும் ஆசிரமத்திலும் புதுவையைச் சுற்றி வெளியிலும், பக்தர்கள் உள்ளத்திலும், வாழ்விலும் நிரந்தரமாகச் செயல் புரிந்து கொண்டிருக்கிறார். அன்னையை மானசீகமாக அழைத்தால் அவரே  நாம் இருக்குமிடம் தேடி வருவார். வரம் தருவார். அருள்புரிவார்.

ஸ்ரீ அன்னையின் பிறந்தநாளான இன்று அவரை வேண்டி வணங்கி, அருள் பெறுவோம்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com