ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள் – 2022

ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள் – 2022

கணிப்பு : ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்தி ஸ்ரீப்லவ வருஷம் தக்ஷிணாயம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 16ம் நாள் பின்னிரவு 17ம் நாள் முன்னிரவு அன்றைய தினம் தினசுத்தி அறிவது கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி வெள்ளிக்கிழமை பின்னிரவு சனிக்கிழமை முன்னிரவு கேட்டை நக்ஷத்ரம் சித்தயோகம் கன்னியா லக்னம் வ்ருச்சிக சந்திரா லக்னம் ரிஷப நவாம்சம் கும்ப சந்திர நவாம்சமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நள்ளிரவு 12.00 மணிக்கு 2022ம் ஆண்டு பிறக்கிறது.

ராசி நிலை பாதசார விபரம்:

லக்னம் ஹஸ்தம் 2ம் பாதம் சந்திரன் சாரம்
சூரியன் பூராடம் 1ம் பாதம் சுக்கிரன் சாரம்
சந்திரன் கேட்டை 2ம் பாதம் புதன் சாரம்
செவ்வாய் கேட்டை 2ம் பாதம் புதன் சாரம்
புதன் உத்திராடம் 2ம் பாதம் சூர்யன் சாரம்
குரு சதயம் 1ம் பாதம் ராகு சாரம்
சுக்கிரன்() – உத்திராடம் 3ம் பாதம் புதன் சாரம்
சனி திருவோணம் 1ம் பாதம் சந்திரன் சாரம்
ராகு க்ருத்திகை 3ம் பாதம் சூர்யன் சாரம்
கேது அனுஷம் 1ம் பாதம் சனி சாரம்

சுக்ரனின் ஆதிக்கம் பெற்ற எண்: 2022
இந்த வருடத்தின் கூட்டு எண்: 2 + 0 + 2 + 2 = 6.

று என்பது சுக்ரனின் ஆதிக்கம் பெற்ற எண். மஹாவிஷ்ணுவிற்கும் மஹாலக்ஷ்மிக்கும் உகந்த எண் ஆறாகும். ஆண்டு பிறக்கும் நேரத்தில் லக்னாதிபதி புதன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மிகப் பெரிய கூட்டணியுடன் அமர்ந்திருக்கிறார். லக்னாதிபதி புதன் ஐந்தாமிடத்தில் சூர்யன் சாரம் பெற்றிருக்கிறார். லக்ன தொழில் அதிபதி புதன் குடும்பாதிபதி பாக்கியாதிபதி சுக்கிரன் பஞ்சம ரண ருணாதிபதி சனி ஆகியோர் சேர்க்கை பெற்றிருக்கிறார்கள். குருவின் சஞ்சாரத்தால் கன்னியர்களுக்கு தகுந்த மணமாகும். மாலை வாய்ப்புகளும் மழலை பாக்கியமும் வேலைவாய்ப்புகளும் வியக்கும் விதத்தில் இருக்கும். பத்திரிகைத்துறை எழுத்துத்துறை ஆசிரியர் துறை கணிதம் ரசாயணம் ஆன்மிகம் சோதிடம் வழக்கறிஞர் துறை புத்தகத்துறை போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சுக்ரன் தனது சஞ்சாரத்தை யோக ஸ்தானத்தில் இருப்பதால் கலைத்துறை செழிக்கும். சுக்ரன் சஞ்சாரத்தால் கலைஞர்கள் கௌரவப்படுத்தப்படுவார். வண்ணத்திரை, சின்னத்திரை இரண்டுமே மக்களுக்கு பயனளிக்கும். உணவிற்கு எந்த விதமான பங்கமும் இராது. உணவு உற்பத்தியாளர்களுக்கு தகுந்த விலை நிர்ணயமாகும். மக்களுக்கு பொருளாதார நிலை உயரும். பணத்துக்கு பஞ்சம் இருக்காது. பெட்ரோல் டீசல் கச்சா எண்ணை சமையல் எண்ணை விலை அதிகமாக உயரும். புத்தாண்டு பிறக்கும்போது உள்ள புதனின் இருப்பால் இந்திய ரூபாயின் மதிப்பில் சலனம் இருக்கும். தங்கம் வெள்ளி விலையும் உயரும்.

நிறைய சிவாலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். அரசாங்கத்தில் சிறு சிறு ஊசல்கள் இருக்கும். மழை பொழிவு நன்றாக இருக்கும். சராசரி வெயில் அளவை இந்த வருடம் வெப்பம் அதிகரிக்கும். அண்டார்டிகா அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் சுமத்ரா தீவு ஜப்பான் போன்ற இடங்களில் பூகம்பம் வர வாய்ப்புள்ளது. யாராலும் சரியான முறையில் வானிலையை கணித்து கூற முடியாத நிலை ஏற்படலாம். அணு ஆயுதத்தால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். தண்ணீர் தேவை அதிகமாகும். காடுகளை அழிப்பது அதிகமாகும். கடவுளுக்கு எதிராக பேசும் நபர்கள் அதிகமாவார்கள்.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே! இவ்வாண்டில் எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் ஆற்றல் வந்து சேரும். பல நற்செயல்கள் செய்து உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சமுதாயத்தில் பெயரும் புகழும் அடைவீர்கள். பொருளாதார வரவுகளும், ஆடை, ஆபரண சேர்க்கைகளும் அபரிமிதமாக இருக்கும். இளைய சகோதர, சகோதரிகளால் சற்று மனக்கசப்பு ஏற்படலாம். அவர்களுடன் அனுசரித்துச் செல்லுங்கள். அவர்களால் சிறிது செலவும் உண்டாகலாம். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் மட்டுமின்றி; வெளியில் செல்லும்போதும் சுகாதார வசதியை உருவாக்கிக் கொண்டால் ஆரோக்கியமான உடல்நலம் கிடைக்கும். குலதெய்வத்தின் அருள் நிறையவே இருக்கிறது. குழந்தைகள் வகையிலும் பூர்வ சொத்துக்களாலும் வருமானம் உண்டு.

பூமி, மனை, நிலங்கள் தொடர்பானவற்றில் இருந்த எதிர்ப்புகள் மாறி அனுகூலமான பலன் கிட்டும். தொழில் ரீதியாக எதிரிகள் முடங்கிப் போவார்கள். நண்பர்கள் வகையில் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் ஜாமீன் கையெழுத்து போடுவது போன்ற காரியங்களில் ஈடுபடவேண்டாம். அவர்களை விட்டு சற்று ஒதுங்கியே நில்லுங்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்துடன் தெய்வ வழிபாடு நடத்தும் வாய்ப்புகள் உருவாகும். உடலில் சில நோய்க்கிருமிகள் பரவும் வாய்ப்புள்ளதால் உண்ணும் உணவிலும், உபயோகப்படுத்தும் பொருளிலும் கவனம் செலுத்த வேண்டும். தந்தை வழி உறவினர்களால் அனுகூல பலன் கிட்டும். இவ்வாண்டு முழுவதும் சந்தோஷ அனுபவங்கள் ஏற்படும். ஆதாயமாக வரும் பணம் முழுவதையும் சேமிக்கும் வாய்ப்பு கிட்டும்.

புத்திர வகையில் புகழும் பெருமையும் உண்டாகும். வீட்டை புதுப்பிக்கும் நிலை ஏற்படும். அழகு சாதன பொருள் உற்பத்தி செய்வோர் மேன்மை பெறுவர். விஷப்பிராணிகளிடமிருந்து விலகியிருக்க வேண்டும். கால்வலி, முதுகுவலி உடையவர்கள் சிகிச்சையை தொடர வேண்டி வரும். போக்குவரத்தின் போது விழிப்புடன் செயல்பட வேண்டும். தொழிலில் கிடைக்கும் ஆதாயம், தொழில் வளர்ச்சிக்கே பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு கிட்டும். புத்திரர்கள் வகையில் சுபச் செலவுகள் உண்டாகும்.

அரசுத்துறை ஊழியர்கள் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். பணியில் மிகுந்த கவனம் செலுத்தி நற்பெயர் பெறுவார்கள்.

தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் வளம் காண்பார்கள். வாகன தயாரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் தொழில் செய்பவர்களுக்கு கூடுதல் ஆர்டர் கிடைக்கும்.

மாணவர்கள் தனக்குப் போகத்தான் தானம் என்ற எண்ணம் மனதில் குடிகொண்டிருந்தாலும் மற்றவர்களுக்கு சேவை செய்யும் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

தனியார் மற்றும் அரசுத்துறையில் பணிபுரியும் பெண்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நலன் தரும்.

சினிமா, நடகக் கலைஞர்களுக்கு பொருளாதார வசதி அதிகமாகும்.

அரசியல்வாதிகள் பாரம்பரிய குணங்களால் சிரமமின்றி தப்பிவிடலாம்.

பரிகாரம்: முடிந்த வரை செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! நீங்கள் இந்த வருடம் எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும். புதிய நபர்களின் நட்பு உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். உடல் ஆரோக்யத்தில் சிறு சிறு சங்கடங்கள் வரலாம். கவனமுடன் இருந்தால் பயம் இல்லை. சந்தோஷத்தை தருவதாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்களது சிறப்பான செயல்கள் மற்றவர்களின் பாராட்டை பெற்றுத் தரும்.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும். புதிய சிக்கல்கள் உருவாகலாம். கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

பெண்களுக்கு மனதில் வீண்குழப்பம் உண்டாகும். உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சரியான நேரத்தில் மருந்துகளை உட்கொள்வது நன்மை தரும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.

கலைத்துறையினருக்கு வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது. மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.

அரசியல் துறையினருக்கு அரசு விவகாரங்களை கவனமாக கையாளவும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை ஆலோசித்து செய்யுங்கள். தீர்க்கமாக முடிவெடுப்பதை தள்ளிப்போடுங்கள்.

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கி வர, பணவரத்தில் இருந்த தடைநீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! இந்த வருடம் எதிர்பாராத செலவு ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். பணவரவு இருக்கும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்கள் இந்த வருடம் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். நினைத்த வசதிகள் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். மனதெம்பு உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும். வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். ஆன்மிக எண்ணம் உண்டாகும்.

தொழில், வியாபாரத்தில் இருந்த மெத்தனப் போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன் தரும். தொழிலுக்காக கேட்ட இடத்தில் கடன் வசதிகள் கிடைக்கும். அதை வைத்து தொழில் சார்ந்த பிரச்னைகளை சமாளித்து விடுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

பெண்களுக்கு எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். முக்கியமான வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்னைகளை கண்டால் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். உடன் இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.

பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வர காரிய அனுகூலம் உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும்.

கடகம்

டக ராசி அன்பர்களே! இந்த வருடம் சுப காரியங்களில் இருந்த தடங்கல்கள் நீங்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரும். மனக்கவலை நீங்கி தெளிவு உண்டாகும். குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்னைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை நீண்ட நாட்களாக பட்ட கஷ்டங்கள் மறைந்து ஆரோக்கியம் மேம்படும்.

தொழில், வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்தரும். புதிய தொழில் அபிவிருத்தி அடையும். தொழில் வருமானம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

பெண்களுக்கு பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். சக மாணவர்களின் நட்பும் கிடைக்கும்.

கலைத் துறையினருக்கு அதிக வாய்ப்புகள் வந்து குவியும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். உன்னத வாய்ப்புகளை கண்டு மனம் மகிழ்ச்சியில் திளைக்கும்.

அரசியல்துறையினருக்கு வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். எந்த சூழ்நிலையிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது. எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை அந்த காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக் கவலை இருக்கும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் மஹாலக்ஷ்மியை மல்லிகைப் பூவால் அர்ச்சனை செய்து வணங்க காரிய வெற்றி உண்டாகும்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! எடுத்துக்கொண்ட இந்த வருடம் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டி வரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சின்ன சின்ன கருத்து வேற்றுமைகள் வரும். பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆறுதலைத் தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை அலர்ஜி சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் மனதுக்கு திருப்தி தரும். பெரியோர் உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.

தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆர்டர் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பழைய பாக்கிகள் வசூலாவது மனதிருப்தியை தரும். தொழிலாளர்கள் அவ்வப்போது பிரச்னை எழுப்பலாம். வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள்.

பெண்களுக்கு வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். மற்றவர்கள் பிரச்னை தீர பாடுபடுவீர்கள். காரிய தடை, தாமதம் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியை தரும்.

கலைத்துறையினருக்கு முன்பு கிடைத்ததை விட அதிக பாராட்டுகளும் பரிசுகளும் கிடைக்கும். லாபம் அதிகமாகும். வெளியூர் பயணங்கள் திருப்தி அளிக்கும்.

அரசியல்துறையினருக்கு மேலிடத்தை அனுசரித்து செல்வது நன்மை தரும். வேலைப் பளு ஏற்பட்டாலும், எப்படியாவது செய்து முடித்து விடுவீர்கள். நண்பர்களிடம் ஒத்துழைப்பும் இருக்கும்.

பரிகாரம்: சிவபுராணம் சொல்லி சிவனை வணங்கி வர குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். உத்தியோகம் நிலைக்கும்.

கன்னி

ன்னி ராசி அன்பர்களே! இந்த வருடம் பணவரத்து இருக்கும். நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை நீண்ட நாட்களுக்குப் பிறகு முன்னேற்றத்தை சந்திப்பீர்கள். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். வீண் செலவு ஏற்படலாம்.

தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் கூடும். பாக்கிகள் வசூலாகும். கேட்ட வங்கிக் கடன்கள் கை கூடும். சிறு தொழில் நிறுவனங்கள் நல்ல லாபத்தைக் காணலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிசுமையால் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நிலுவையில் உள்ள தொகைகள் வந்து சேரலாம். தொலைதூர செய்திகள் மனதிற்கு நிம்மதி அளிக்கும்.

பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு பாடங்களை நன்கு படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும்.

கலைத்துறையினருக்கு ஏதாவது ஒரு வகையில் வாக்குவாதம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடும்போது ஆவணங்களை சரியாக பார்க்கவும். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.

அரசியல் துறையினருக்கு எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். முக்கியமான பணிகள் திட்டமிட்டபடி நடக்கும்.

பரிகாரம்: ராஜராஜேஸ்வரியை தீபம் ஏற்றி வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.

துலாம்

துலா ராசி அன்பர்களே! இந்த வருடம் எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். வழக்குகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். எடுத்துக் கொண்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான பிரச்னைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். காரிய அனுகூலங்களும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்க்கவும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்தபடி நிதி நிலை உயரும். வாடிக்கையாளர்கள் திருப்தி அடைவார்கள். புதிய முதலீடுகள் செய்ய எண்ணம் மேலோங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் நல்ல லாபத்தை தரும். வீணாக யாரிடமும் பெச வேண்டாம்.

பெண்களுக்கு வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சுபநிகழ்ச்சிகள் நன்றாக நடைபெறும்.

மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி மேற்கொள்வீர்கள்.

கலைத்துறையினருக்கு மூத்த கலைஞர்களின் ஆதரவும், நட்பும் கிடைக்கும். மனம் மகிழும் படியான சம்பவங்கள் நடைபெறும்.

அரசியல் துறையினருக்கு வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். அனைவரையும் அனுசரித்து செல்வதன் மூலம் காரியங்கள் நடந்து முடியும். திறமையுடன் செயல்பட்டு மேலிடத்தால் பாராட்டு கிடைக்கப் பெறுவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீராமருக்கு பானகம் நிவேதனம் செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வருடம் பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனகவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும்.

குடும்பத்தில் சில்லறை சண்டைகளும், பூசல்களும் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகும். உறவினர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது. மனோ தைரியம் அதிகரிக்கும். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும். எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடும் மனநிலை உண்டாகும். எதிர்பாராத திருப்பங்களால் சிலரது வாழ்க்கை தரம் உயரும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் சிறக்க கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். தந்தை வழி தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடையலாம். புது நிறுவனங்கள் தொடங்க ஆவல் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நல்லவிதமாக நடந்து முடியும்.

பெண்களுக்கு எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதூரியமான பேச்சு வெற்றிக்கு உதவும்.

மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.

கலைத்துறையினர் வேலைகளை துரிதமாக செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது,

அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். உடன் இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.

பரிகாரம்: முருகனுக்கு பாலபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து வணங்க மன அமைதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.

தனுசு

னுசு ராசி அன்பர்களே! இந்த வருடம் திடீர் மனத் தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து திருப்தி தரும். சின்ன சின்ன பிரச்னைகள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

குடும்பத்தில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷமான நிலை காணப்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மூலம் அலுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை அதிக காரத்தை தவிர்ப்பது நன்மை தரும். கண் சம்பந்தமான உபாதைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்க்கவும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். மேலிடத்துடன் இணக்கத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும்.

பெண்களுக்கு எதிர்பாராத பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

மாணவர்களுக்கு தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற நன்கு படிக்க வேண்டி இருக்கும். ஆசிரியர்கள் சக மாணவர்களின் ஆதரவும் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு மிகவும் நன்மை பயக்கும் காலமாக இது அமையும். தொடர் பணிகளால் களைப்படைவீர்கள். வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு முக்கியமானவர்களின் நட்பு கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். சமூகத்தில் முக்கியஸ்தர் என்று பெயரெடுப்பீர்கள். கட்சிப் பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். கட்சியில் முக்கிய பொறுப்புகளையும் ஏற்பீர்கள். நண்பர்களாலும் தொண்டர்களாலும் ஏற்றம் பெறுவீர்கள்.

பரிகாரம்: சிவனை வில்வ இலையால் அர்ச்சனை செய்து வணங்க காரிய தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும்.

மகரம்

கர ராசி அன்பர்களே! இந்த வருடம் எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியாமல் காரிய தாமதம் உண்டாகலாம். வாகன யோகத்தை தரும். பெரியோர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தியை தரும். உறவினர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெரியோர் உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.

தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. தொழிலுக்கு தேவையான உபகரணங்கள் வாங்க முயற்சி எடுங்கள் அது பலிதமாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளால் டென்ஷன் அடைவார்கள். எதிர்பார்த்தபடி சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது நாட்கள் தள்ளிப் போடுவது நல்லது.

பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை உண்டாகும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். உடல் ஆரோக்கியத்தை அதிக கவனம் எடுத்துக் கொள்வது அவசியம். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும்.

மாணவர்களுக்கு உயர்கல்வி கற்க தேவையான பணவசதி கிடைக்கும். கூடுதலாக கவனம் செலுத்தி படிப்பது வெற்றிக்கு உதவும்.

கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலமிது. வாய்ப்புகள் குவியும். புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு.

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள். அதேசமயம் புதிய பொறுப்புகளை கவனத்துடன் கையாளவும். தொண்டர்கள் ஆதரவாக இருப்பார்கள். யோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

பரிகாரம்: விநாயகருக்கு சனிக்கிழமையில் தீபம் ஏற்றி வழிபட, குடும்பத்தில் அமைதி உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! இந்த வருடம் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை வண்டி, வாகனங்கள், இயந்திரங்கள் ஆகியவற்றை பயன்படுத்தும்போது கவனம் தேவை. மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். நீங்கள் நிதானமானவர்கள் அதே வேளையில் பொருளாதார விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். வெளிநாட்டு தொடர்புகளில் ஆதரவு நீடிக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணி தொடர்பாக அலைய நேரிடலாம். பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். எதிர்பார்க்கும் பணி இட மாற்றம், பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள்.

பெண்களுக்கு எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் அதுபற்றி ஒருமுறைக்கு பலமுறை யோசித்தபின் ஈடுபடுவது நல்லது. துணிச்சல் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். கவனமாக பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

கலைத்துறையினருக்கு பணவரவு ஏற்ற இறக்கமாக இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும்.

அரசியல்வாதிகள் எதிரிகளுக்குத் தக்க பதிலடி கொடுப்பர். வழக்குகளிலும் சாதகமான தீர்ப்பு வரும். கட்சியில் புதிய பணிகளைச் சாதுர்யமாகச் செய்து முடிப்பீர்கள். செல்வாக்கு உயரும். சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். தொண்டர்களையும் அனுசரித்துச் செல்லவும்.

பரிகாரம்: ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு பாயசம் நிவேதனம் செய்து வணங்கி வர, எதிர்ப்புகள் அகலும்.

மீனம்

மீன ராசி அன்பர்களே! இந்த வருடம் காரியத் தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம். கெட்ட கனவுகள் வரலாம். திடீர் கோபம் ஏற்படும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாக பழகுவது அவசியம். குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இடைவெளி காணப்படும். பிள்ளைகள் புத்திசாதூர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை தரும். வயிறு கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும். எதிர் பாலினத்தாரின் நட்பு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். சாதூரியமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும். தொழிலாளர்கள் நல்ல ஆதரவு தருவார்கள். நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த வியாபாரம் நல்ல சூடு பிடிக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு பெறுவார்கள். உடனிருப்பவர்களுடன் கவனமாக பழகவும்.

பெண்களுக்கு எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பெரியோர் ஆலோசனை கை கொடுக்கும்.

மாணவர்களுக்கு கவனத்தை சிதற விடாமல் வகுப்பை கவனிப்பது அவசியம். கூடுதலாக பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.

கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் வந்து சேரும்.

அரசியல் துறையினருக்கு கடின உழைப்புக்குபின் முன்னேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் வந்து சேரும். மேலிடத்தை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். தொண்டர்களின் பாராட்டை பெறுவீர்கள்.

பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் உடல் நலம் சீராகும். பொருளாதார சூழ்நிலை நன்றாக இருக்கும்.

Other Articles

No stories found.