உலககோப்பை தொடரிலிருந்து இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவிப்பு.
பங்களாதேஷிற்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் ஹார்திக் பாண்டியாவிற்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது.போட்டி முடிந்ததும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தார்கள். அந்த ஸ்கேனில் அவருக்கு எலும்பு முறிவு எதுவும் இல்லை, வீக்கம் மட்டும் குறையாமல் இருந்ததால் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட வேண்டாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.
அதன்படி அடுத்த இரண்டு போட்டிகளில் ஹார்திக் பாண்டியா விளையாடவில்லை. காயம் முழுவதுமாக குணமடையும் வரை பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமியில் ஓய்வெடுத்து வந்தார். கடந்த தென்னாப்பிரிக்காவுடன் போட்டியில் பங்குபெறப் பயிற்சியில் ஈடுபட்டார். கணுக்கால் காயம் என்பதால் பந்துவீசுவது மிகவும் கடினம். அதனால் அவர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்.
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் துணைக் கேப்டனாக இருந்த ஹார்திக் பாண்டியா இதுவரை நடந்த போட்டிகளில் அவ்வளவாக பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. பந்துவீச்சில் அணியின் மூன்றாவது நபராக இறங்கி விக்கெட்டுகள் எடுத்துக் கலக்கி வந்தார். இதையடுத்து அணியின் மிகப் பெரிய பலமாக இருந்து வந்த இவர் அரையிறுதி போட்டிக்கு முன்னர் முழுவதுமாக குணமடைந்து அரையிறுதி போட்டியில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தநிலையில் தான் பிசிசிஐ ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறது. அதாவது ஹார்திக் பாண்டியாவின் கணுக்கால் காயத்தை விளையாட்டாக எடுத்துக்கொள்ள முடியாது. இதனால் உலககோப்பையில் இனி வரும் எந்த போட்டிகளிலும் ஹார்திக் பாண்டியா விளையாடமாட்டார் எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அவருக்குப் பதிலாக அணியின் மாற்று வீரராக இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இவர் 19 வயதுக்குட்பட்ட போட்டிகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர். இந்திய அணியின் மாற்றுவீராக விளையாடுவதற்கு ஒரு இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுத்தது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.