
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் திங்கள்கிழமை புனேயில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், இலங்கை அணிக்கு அதிர்ச்சித் தோல்வி தந்தது. நாங்கள் சாதாரணமானவர்கள் அல்ல, எதையும் சந்திக்கும் துணிவுள்ளவர்கள் என்பதை ஆப்கானிஸ்தான் இந்த வெற்றியின் மூலம் உலகுக்கு தெளிவுபடுத்தியுள்ளது. போட்டி அட்டவணையில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
முதலில் விளையாடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் எடுத்தது. பின்னர் 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆட்டத்தை தொடங்கிய ஆப்கானிஸ்தான், 45.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 142 ரன்களை எடுத்து வெற்றியை கைப்பிடித்தது. உலக கோப்பை போட்டியில் ஆப்கானுக்கு இது மூன்றாவது வெற்றியாகும். ஏற்கெனவே ஆப்கானிஸ்தான் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானை வென்றது குறிப்பிடத்தக்கது. இனி ஆப்கானிஸ்தான் அடுத்து நெதர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்த போட்டிகள் நவ.3, 7 மற்றும் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. முதலில்
இலங்கை அணி களத்தில் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆப்கான் பந்துவீச்சை சமாளிக்க தடுமாறினர். பதும் நிசங்கா மட்டும் ஓரளவு நின்று ஆடி 46 ரன்கள் சேர்த்தார். எனினும் ஓமர்ஸாய் பந்துவீச்சில் குர்பாஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். குசும் மெண்டிஸ் 39 ரன்களும் சமரவிக்ரம 36 ரன்களும் எடுத்தனர். ஆனாலும் அவர்கள் களத்தில் நின்று ஆடவோ அல்லது அடித்து ஆடவோ முடியவில்லை.
ஆப்கான் பந்துவீச்சாளர் பரூக்கி சிறப்பாக பந்துவீசி 34 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். முஜீப் 2 விக்கெட்டுகளையும் ஓமர்ஸாய், ரஷீத் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
இறுதியில் இலங்கை அணி 49.3 ஓவர்களில் 241 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் அணி களம் இறங்கியது. அந்த அணி உற்சாகத்துடன் தொடங்கினாலும் ரஹ்மானுல்லா ரன் ஏதும் எடுக்காமலேயே அவுட்டானார். எனினும் அடுத்து களம் இறங்கிய இப்ராகிம் ஜர்தான் மற்றும் ரஹ்மத் ஷா இருவரும் சேர்ந்து 2-வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்தனர். ஆனாலும் ஜர்தான் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மதுசங்காவின் பந்து வீச்சில் கருணரத்னேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஓரளவு நின்று ஆடிய ரஹ்மத், 62 ரன்கள் எடுத்த நிலையில் 28-வது ஓவரில் ரஜிதா பந்துவீச்சில் கருண ரத்னேவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
அதன் பிறகு ஆட்டத்தில் சூடுபிடித்தது. கேப்டன் ஹஷ்மத்துல்லாவும் அஸ்மத்துல்லா ஓமர்ஸாயும் இணைந்து ஆடி 150 ரன்கள் சேர்த்தனர். இலங்கை பந்துவீச்சாளர்களால் இவர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. ஹஷ்மத்துல்லா கடைசிவரை நின்று ஆடி 58 ரன்கள் எடுத்தார். இதேபோல அஸ்மதுல்லாவும் கடைசி வரை அவுட்டாகாமல் நின்று ஆடி 73 ரன்கள் குவித்தார்.
இறுதியில் 45.3 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 242 ரன்களை எட்டி வெற்றியை கைப்பிடித்தனர். இந்த போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்தது என்பதைவிட ஆப்கானிஸ்தான் வீர்களின் மன உறுதியுடன் விளையாடி வென்றனர் என்றுதான் சொல்ல வேண்டும்.