உலக கோப்பை போட்டித் தொடரில் 38-வது போட்டியாக இன்று தலைநகர் தில்லியில் உள்ள அருண் ஜோட்லி மைதானத்தில் இலங்கை அணியும், வங்கதேச அணியும் மோதுகின்றன.
ஒரு நாள் போட்டித் தொடரில் இதுவரை இலங்கை இரண்டு போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்துக்கு எதிரான போட்டிகளில் இலங்கை வெற்றிபெற்றது. கடைசியாக மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை 55 ரன்களில் சுருண்டது. இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது.
வங்கதேச அணி தொடக்க ஆட்டத்தில் வெற்றிபெற்றதே தவிர மற்ற 6 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது. வங்கேத அணியின் ஆட்டம் எதிர்பார்த்த அளவு இல்லை என்றே சொல்ல வேண்டும். தற்போதைய நிலையில் இரு அணிகளும் 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் போட்டிக்கு தகுதி பெறுவதில்தான் கவனம் செலுத்த வேண்டும்.
இலங்கை அணியை பொருத்தவரை விக்கெட் கீப்பர் சமரவிக்ரமதான் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களில் நம்பிக்கை அளிப்பவராக இருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 108 ரன்களும், நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 91 ரன்களும் எடுத்துள்ளார். மேலும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 65 ரன்கள் அடித்துள்ளார்.
ஒவ்வொரு அணியிலும் சில ஆட்டக்காரர்கள் முக்கியமான தருணத்தில் கை கொடுப்பார்கள். அந்த வகையில் வங்கதேச அணியின் முக்கியமான ஆட்டக்காரர் மஹமுதுல்லா. உலக கோப்பை போட்டிகளில் அவர் 20 இன்னிஸ்ங்ஸில் 890 ரன்கள் எடுத்துள்ளார். அதாவது சராசரி 55.6 ரன்கள் எடுத்துள்ளார். இந்த உலக கோப்பை போட்டியில் அவர் 5 இன்னிஸ்ங்ஸில் 41 (நாட் அவுட்), 46, 111, 20 மற்றும் 56 ரன்கள் எடுத்துள்ளார்.
உலக கோப்பை போட்டித் தொடரில் இலங்கை அணி ஏமாற்றத்தை அளித்தாலும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுசங்கா நம்பிக்கை அளிக்கிறார். அவர் இதுவரை நடந்துள்ள போட்டிகளில் மொத்தம் 18 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கடைசியாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர் 80 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இலங்கை, வங்கதேசம் ஆகிய இரு அணிகளுக்கும் இது 8-வது போட்டியாகும். வங்கதேச அணி 2 புள்ளிகளுடன் பதக்கப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இலங்கை அணி 4 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.
கடந்த அக். 7 ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் வங்கதேச அணி, ஆப்கானிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 2-வது போட்டியில் இங்கிலாந்திடம் 137 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அடுத்து நியூஸிலாந்து அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. நான்காவது போட்டியில் இந்தியாவிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. ஐந்தாவது மற்றும் ஆறாவது போட்டிகளில் முறையே தென்னாப்பிரிக்கா (149 ரன்கள் வித்தியாசத்தில்) மற்றும் நெதர்லாந்திடம் (87 ரன்கள் வித்தியாசத்தில்) தோல்வி அடைந்தது. 7-வது போட்டியில் பாகிஸ்தானிடமும் (7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இலங்கை அணி முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் 102 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 2-வது போட்டியில் பாகிஸ்தானிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நான்காவது போட்டியில் இலங்கை அணி, நெதர்லாந்தையும், ஐந்தாவது போட்டியில் இங்கிலாந்தையும் வென்றது. 6-வது போட்டியில் இலங்கை ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. 7-வது போட்டியில் இந்தியாவிடம் 55 ரன்களுக்கு சுருண்டது.