நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெறவிருக்கும் இறுதி போட்டிக்கான கோலாகல ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஐசிசி உலக கோப்பை தொடரில் புள்ளி பட்டியலில் இந்தியா நியூசிலாந்து தென்ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முதல் நான்கு இடத்தை பிடித்து அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல் தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியாஇடையேநடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி மூன்று விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுஇறுதி போட்டிக்குள் நுழைந்தது.
இதையடுத்து ஆஸ்திரேலியா இந்தியா ஆகிய இரு பலம் வாய்ந்த அணிகள் நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில்மோதவுள்ளனர்.
போட்டி ஆரம்பிக்கும் முன்னர், அதாவது டாஸ் செய்த பிறகு, 1.30 pm முதல் 1.50 pm வரை வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு விமான சாகசம் நிகழ்த்தப்பட உள்ளது. இதற்கான ஒத்திகையை நேற்றும் இன்றும் இந்திய விமானப்படை மேற்கொண்டது. கிரிக்கெட் ரசிகர்களுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் இந்திய விமானப்படை கொடுக்கும் இது சர்ப்ரைஸ் என்றே கூற வேண்டும்.
முதல் இன்னிங்ஸ் ட்ரிங்க்ஸ் இடைவெளியில் “khalasi” என்ற ஹிட்பாடலை பாடிய ஆதித்யா காத்வியின் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதேபோல் இன்னிங்ஸ் இடைவெளியில் பிரபல பாடல்கள் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
‘Kesariya', ‘Hawayein' போன்ற பாடல்களை பாடிய பிரிதம், ‘the break up song',’sau tarah ke' போன்ற ஹிட் பாடல்களை கொடுத்த ஜோனிதா காந்தி, ‘jabra fan',’slow motion' பாடல்களைப் பாடிய நா காஷ்ஆஸிஸ், அமித்மிஷ்ரா, ஆகா சாசிங் மற்றும் தூஷ்ரா ஜோஷி ஆகியோர் இந்த கலைநிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
அதேபோல் இரண்டாவது இன்னிங்ஸ் ட்ரிங்க் இடைவேளையில் கண்கவர் லேசர் நிகழ்ச்சி நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இந்த கலை நிகழ்ச்சி ஏற்பாடுகளை தவிர்த்து இதுவரை உலக கோப்பை வென்ற அனைத்து கேப்டன்களும் போட்டியின் விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்களும் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சொந்த மண்ணில் எப்படியாவது இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று முழுமூச்சுடன் பயிற்சியில் இறங்கி உள்ளனர்.
ஒரு சில காரணங்களால் இந்த ஆண்டு ஐசிசி உலககோப்பை தொடரின் தொடக்க விழா ரத்தானது. அதை ஈடுக்கட்டும் விதமாக இந்த ஏற்பாடுகள் ரசிகர்களை திருப்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஏற்பாடுகளையும் போட்டியையும் காண அகமதாபாத்திற்கு படையெடுக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி தரும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இது தான் சாக்கு என்று அகமதாபாத் நகரின் ஹோட்டல்களில் புக்கிங் விலை ஒரு லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது. மேலும் அவ்வளவு விலை கொடுக்க முடியாத ரசிகர்களும் போலி சர்டிபிக்கேட் மூலம் ஹாஸ்பிட்டல்களில் காய்ச்சல் என்று சொல்லி தங்கி நாளைய போட்டியை காண சில தில்லு முல்லு வேலையில் ஈடுபடுவதாகவும் தகவல் வந்துள்ளது.