உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய பேட்ஸ்மென்களும், பந்துவீச்சாளர்களும் கலக்கி வருகின்றனர். புதன்கிழமை மும்பையில் நடைபெற்ற அரையிறுதியில் இந்தியா, நியூஸிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
இந்திய அணியின் விராட் கோலி, நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். ஒருநாள் சர்வதேச போட்டியில் 50-வது சதத்தை அடித்து ச்ச்சின் டெண்டுல்கர் சாதனையை (49 சதங்கள்) முறியடித்துள்ளார். டெண்டுல்கரின் அதிக ரன்கள் சாதனையையும் (673 ரன்கள்-2003) கோலி முறியடித்துள்ளார். அதாவது 711 ரன்கள் குவித்துள்ளார். உலக கோப்பை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் நாக்அவுட் போட்டியில் சதம் அடித்த மூன்றாவது இந்திய வீர்ர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன் செளரவ் கங்குலி மற்றும் ரோகித் சர்மா இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த போட்டித் தொடரில் விராட் கோலி மட்டும் அதிக ரன்குவிக்கவில்லை. ரோகித் சர்மா 550, ஸ்ரேயாஸ் ஐயர் 526, கே.எல்.ராகுல் மற்றும் சுப்மன் கில் முறையே 386 மற்றும் 350 ரன்கள் எடுத்துள்ளனர்.
இந்திய அணியின் பந்து வீச்சாளர்கல் சாதனை படைக்க தவறவில்லை. ஐந்து முன்னிலை பந்துவீச்சாளர்களும் குறைந்த்து 13 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். முகமது ஷமி இந்த பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். அவர் 6 போட்டிகளில் பங்கேற்று 23 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ஒருநாள் சர்வதேச போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முகமது ஷமி 7 விக்கெட்டுகளை சாய்த்து சாதனை படைத்துள்ளார். உலக கோப்பை போட்டி வரலாற்றில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர்களில் அவருக்கு ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது.
இந்த உலக கோப்பை போட்டித் தொடரில் முகமது ஷமி தவிர, பும்ரா 10 போட்டிகளில் 18 விக்கெட்டுகளையும், ஜடேஜா 16, குல்தீப் 15, சிராஜ் 13 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
அரையிறுதியில் நியூஸிலாந்து அணியை வென்றதன் மூலம் இந்தியா, ஆமதாபாதில் நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் இன்று நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் வெல்லும் அணியுடன் இந்தியா இறுதிப் போட்டியை சந்திக்கவிருக்கிறது.