
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா ஏடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை 243 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை இந்தியா உறுதி செய்துள்ளது.
இந்த போட்டியின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் தமது பிறந்தநாளில் விராட் கோலி ஒருநாள் போட்டியில் 49 -வது சதத்தை அடித்ததுடன், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார். இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
உலக கோப்பை போட்டியில் இந்தியா எட்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தை உறுதிசெய்துள்ளது. இதற்கு முன்னர், அதாவது 20 ஆண்டுகளுக்கு முன்னர், 2003 ஆம் ஆண்டில் உலக கோப்பை ஒருநாள் போட்டியில் இந்தியா 8 போட்டிகளில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்களை எடுத்தது. அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணியின் பந்துவீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 83 ரன்களில் சுருண்டது.
327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி, இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் ஒன்றன் பின் ஒருவராக வீழ்ந்தனர். தொடக்க ஆட்டக்காரரும் சிறந்த பேட்ஸ்மெனுமான குயின்டன் டீ காக் 5 ரன்கள் எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். ராஸி வான்டர் டஸ்ஸன் 12 ரன்களிலும் அய்டன் மார்கரம் 9 ரன்களிலும் ஷமி பந்துவீச்சில் அவுட்டானார்கள். ஜான்சென், நாக்டி ஆகிய இருவரின் விக்கெட்டையும் குல்தீப் வீழ்த்தினார். ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்துவீசி 33 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது இன்றைய ஆட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.
இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 27.3 ஓவர்களில் 83 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை சந்தித்தது.
முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓரளவு நின்று ஆடி 40 ரன்கள் எடுத்தார். விராட் கோலி கடைசி வரை அவுட்டாகமல் நின்று ஆடி சதம் எடுத்தார். அவர் எடுத்த 101 ரன்களில் 10 பவுண்டரிகள் அடங்கும். ஸ்ரேயாஸ் ஐயர், கோலிக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஆடி 77 ரன்கள் குவித்தார். இருவரும் சேர்ந்து கூட்டாக 134 ரன்கள் சேர்த்தனர். கே.எல்.ராகுல் (8), சுப்மன்கில் (23), சூரியகுமார் யாதவ் (22) ஆகியோர் எதிர்பார்த்த அளவு ஆடவில்லை. ரவீந்திர ஜடேஜா 29 ரன்கள் எடுத்து கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார்.
இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் எடுத்தது.