உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் வியாழக்கிழமை பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி இலங்கையை எளிதில் வீழ்த்தி அரையிறுதியை நோக்கி முன்னேறியது. 21 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு நியூலாந்து ஐந்தாவது வெற்றியைப் பெற்றுள்ளது.
மழையால் ஆட்டம் பாதிக்கப்படலாம் என்ற அச்சுறுத்தல் இருந்தபோதிலும் நல்லவேளையாக மழை பெய்யவில்லை. ஆனால், நியூஸிலாந்து அணியினர் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வெற்றியை கைப்பிடித்தனர்.
டாஸ் ஜெயித்த நியூஸிலாந்து அணி முதலில் இலங்கையை பேட் செய்ய வைத்தது. முதலில் ஆடிய இலங்கை அணி 46.4 ஓவர்களில் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூஸிலாந்து பந்து வீசசாளர்களில் டிரென்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும், பெர்குஸன், சான்ட்னர் ரவீந்திரா தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். செளத்தீ 1 விக்கெட் எடுத்தார்.
பின்னர் விளையாடிய நியூஸிலாந்து அணி, 23.2 ஓவர்களிலேயே ஐந்து விக்கெட்டுகளை மட்டும் இழந்து 172 ரன்களை குவித்து வெற்றிபெற்றது. இலங்கை பந்துவீச்சாளர்களில் மாத்யூஸ் 2, தீக்ஷணா, சமீரா தலை ஒரு விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
இலங்கை அணி 171 ரன்களில் ஆட்டமிழக்க நியூஸிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சே காரணமாகும். இலங்கை அணியில் அதிகபட்சமாக குசால் பெரைரா 51 ரன்களும், மகேஷ் தீக்ஷணா 38 (நாட்அவுட்) ரன்களும் எடுத்தனர்.
நியூஸிலாந்து அணியில் தொடக்கமே உற்சாகமாக இருந்தது. தேவன் கான்வே மற்றும் ரவீந்திர இருவரும் 12.2 ஓவர்களில் 86 ரன்கள் குவித்தனர். எனினும் கான்வே 45 ரன்களிலும், ரவீந்திரா 42 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர்.
டேரி மிட்சல் அதிரடியாக ஆடி 31 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். அவர் எடுத்த 43 ரன்களில் 2 சிக்ஸர்களும் 5 பவுண்டரிகளும் அடங்கும். கானே வில்லியம் தட்டுத்தடுமாறி 14 ரன்கள் எடுத்தார். மார்க் சாப்மன் 7 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். கிளென் பிலிப்ஸ் 17 ரன்களுடனும், டாம் லாதம் 2 ரன்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இறுதியில் நியூஸிலாந்து அணி 23.2 ஓவர்களிலேயே 172 ரன்களை குவித்து இலங்கை அணியை வென்றது. இதன் மூலம் அரையிறுதிக்கான 4 வது அணியாக நியூஸிவாந்து முன்னேறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளும் ஏற்கெனவே அரையிறுதியை உறுதிசெய்துள்ளன. நான்காவது இடத்தை பிடிக்கப் போவது யார் என்பதுதான் இப்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. நியூஸிலாந்து அணி 10 புள்ளிகளுடனும், ரன் விகிதத்திலும் முன்னேறியுள்ளது.
பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் 8 புள்ளிகள் எடுத்துள்ளன. எனினும் நியூஸிலாந்து வெற்றியை அடுத்து அந்த இரு அணிகளும் அரையிறுதியில் நுழைவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. எனினும் வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தான் தென்னாப்பிரிக்காவையும், சனிக்கிழமை பாகிஸ்தான் இங்கிலாந்தையும் எதிர்கொள்கிறது. இந்த இரு போட்டிகளுக்குப் பின்னர்தான் அரையிறுதியில் நான்காவது இடம் யாருக்கு என்பது உறுதியாக தெரியவரும்.