
உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் கொல்கத்தாவில் ஏடன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வென்றது பாகிஸ்தான். இந்த தோல்வியை அடுத்து வங்கேதசம் அரையிறுதியில் நுழைய முடியாமல் வெளியேறியது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
முதலில் விளையாடிய வங்கதேச அணி 45.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்கள் எடுத்த்து. அடுத்து விளையாடிய பாகிஸ்தான் 32.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 205 ரன்கள் குவித்து வெற்றிபெற்றது.
பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ஃபக்கார் ஜமான் மற்றும் ஷபீக் அப்துல்லா இருவரும் அதிரடியாக ஆடி அரை சதம் எடுத்தனர். இதனால் பாகிஸ்தான் இலக்கை எட்டுவது எளிதாக இருந்தது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்தனர். அப்துல்லா 68 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மெஹிதி பந்துவீச்சில் எல்பிடபிள்யூவாகி அவுட்டானார். அவர் எடுத்த 68 ரன்களில் 9 பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். ஃபக்கார் ஜமான் அதிரடியாக ஆடி 81 ரன்கள் எடுத்தார். மெஹிதி வீசிய பந்தில் ஹிரிதோயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் எடுத்த 81 ரன்களில் 3 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் அடங்கும். அடுத்து ஆடவந்த கேப்டன் பாபர் ஆஸம் 9 ரன்களில் அவுட்டானார்.
இறுதியில் பாகிஸ்தான் வெற்றிக்கான இலக்கை எளிதில் எட்டியது. மூன்று விக்கெட்டுகளையும் வங்கதேச பந்துவீச்சாளர் மெஹ்தியே கைப்பற்றினார்.
முன்னதாக வங்கதேச அணி களத்தில் இறங்கியது. தொடக்கமே அந்த அணிக்கு தடுமாற்றமாக அமைந்தது. 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்தது. டான்ஜித் ஹஸன் ரன் ஏதும் எடுக்காமலேயே எல்.பி.டபிள்யூவாகி அவுட்டானார். நஜ்முல் சான்டோ 4 ரன்களில் வெளியேறினார். அதேபோல முஷ்பிகுர் ரஹீம் 5 ரன்களில் ரவூப் பந்துவீச்சில் ரிஸ்வானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
லிட்டன் தாஸ் 45 ரன்களும், மகமுதுல்லா 56 ரன்களுக்கு சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் நின்று ஆடி 89 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தனர். கேப்டன் சாகிப் அல் ஹஸன் தன்பங்குக்கு 43 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 204 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் பந்துவீச்சாளர் அஃப்ரிடி, வாஸிம் இருவரும் தலா 3 மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். இஃப்திகார், ரவூப், உஸாமா தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர்.
பாகிஸ்தான் நவம்பர் 4 ஆம் தேதி பெங்களூர் சின்னசுவாமி ஸ்டேடியத்தில் நியூஸிலாந்து அணியுடன் மோதுகிறது. நவ. 5 இல் வங்கதேசம் தில்லியில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது.