
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று பாகிஸ்தான்- வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. அரையிறுதிப் போட்டியிலிருந்து ஏறத்தாழ வெளியேறிவிட்ட நிலையில் பாகிஸ்தானுக்கு இதுவே கடைசிவாய்ப்பாகும். இந்த போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தால் அரையிறுதிக்கான கதவுகள் அடைக்கப்படும்.
ஒருவேளை இன்றைய போட்டி உள்ளிட்ட மூன்று போட்டிகளில் பாகிஸ்தான வெற்றிபெற்றாலும், (அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும்) இதர ஆட்டங்களின் முடிவும் அந்த அணிக்கு சாதகமாக இருந்தால்தான் இது சாத்தியம். ஆனால் புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இந்தியா உள்ளிட்ட நான்கு அணிகள் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள நிலையில் இது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.
தற்போதைய நிலையில் தொடர் தோல்விகளிலிருந்து மீள்வதே பாகிஸ்தானுக்கு முக்கியமாக இருக்கும். பாகிஸ்தான் அணியின் பேட்டிங் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. மேலும் பீல்டிங்கும் சுமார்தான். பந்துவீச்சாளர்களை நம்பியே அந்த அணி இருக்கிறது.
பந்துவீச்சில் முகமது வாசிம் ஜூனியர் நம்பிக்கை அளிக்கிறார். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதமாக இருக்கும் கொல்கத்தா மைதானத்தில் ஷாஹீன் அஃப்ரிடி அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார் என எதிர்பார்க்கலாம்.
அதேநேரத்தில் வங்கேதசம் ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றிபெற்று மற்ற ஆட்டங்களில் தோற்று அரையிறுதி வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்டது. தொடர் தோல்வியிலிருந்து மீளும் முனைப்பிலேயே அந்த அணி கவனம் செலுத்தும். வங்கதேச அணியில் பேட்ஸ்மென்கள், பந்துவீச்சாளர்கள் இருதரப்பினருமே அதிகம் சோபிக்கவில்லை.
மொத்தத்தில் இரு அணியினருமே தடுமாற்றத்தில் உள்ளனர். ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான்-வங்கதேசம் இரு அணிகளும் இதுவரை 38 ஆட்டங்களில் மோதியுள்ளன. இவற்றில் பாகிஸ்தான் 33 முறையும், வங்கதேசம் 5 முறையும் வென்றுள்ளது. உலகக் கோப்பை போட்டியில் இரு அணிகளும் இரண்டு முறை மோதியுள்ளன. இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது.