
இதுவரையில் விளையாடிய 8 மேட்சுகளிலும் வெற்றி அடைந்த ஒரே டீம் என்ற பெருமை இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைத்துள்ளது. அது மட்டும் அல்லாமல் அரையிறுதி போட்டிக்கு சென்ற முதல் அணியும் நம்ப இந்திய கிரிக்கெட் அணிதான். இன்னும் இரண்டு முக்கிய மேட்சுகளை வென்றால் இந்தாண்டுக்கான உலக கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு வாய்ப்புள்ளது. ஆனால், அதற்கு முன்பு இந்திய அணியின் பலம், பலவீனங்களை பற்றிய அலசல்தான் இந்த தொகுப்பு..
இந்திய அணியினரின் தன்னம்பிகை, இந்த போட்டியில் தேவையான உத்வேகத்தை அளித்துள்ளது. விளையாட்டு வீரர்கள் ஒரு குழுவாக ஒருங்கிணைந்து விளையாடி வருகின்றனர்.
ரோஹித் சர்மா:
இந்திய அணியின் கேப்டனாக உள்ள ரோஹித் சர்மா சிறப்பாக செயல்படுகிறார். ஆங்கிலத்தில் கூறுவதுபோல ரோஹித் சர்மா இது வரையிலும், Lead by Example..க்கு உதாரணமாகத் திகழ்கிறார். துவக்க ஆட்டக்காரராக நன்றாக விளையாடி, அடுத்து வரும் பேட்ஸ்மன்கள் மற்றும் அணிக்கு பெரும் நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளித்து வருகிறார்.
அவரது பேட்டிங் அனுபவமும், கேப்டனாக வழி நடத்தும் முறையும் மிளிர்கின்றது. எதிர்வரும் முக்கிய மேட்சுகளிலும் இவ்வாறு அவரது சிறந்த பங்களிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம், நம்பலாம்.
விராட் கோலி:
மிக முக்கிய வீரர், எதிரணியினர் அச்சம் கொள்ளும் அனுபவ வீரர் விராட் கோலி. இவர் சிறந்த பேட்ஸ்மன் என்பது கிரிக்கெட் உலகமே அறியும். மேலும், அவரது சமீபத்திய சதங்கள், ஏற்படுத்திய ரிகார்ட்ஸ் பேட்டிங்கில் முழு கவனம் ஆகியவை அபாரம்.
இவரால் குறைந்த ஓவர்களில் அதிக ரன்களை குவித்து தனக்கும், தன் அணிக்கும் பெருமை சேர்க்க முடியும். அதேசமயம் அணியின் தேவைக்கு ஏற்ப நின்று நிதானமாகவும், அதிக நேரமும் ஆடி அணிக்கு வெற்றியை பெற்று தர முடியும்.. சமீபத்தில் (அவரது பிறந்த நாள்) அன்று தென் ஆப்பிரிக்க அணிக்கு, எதிராக ஆடிய ஆட்டம் சிறந்த உதாரணம். தனது கிரிக்கெட் சகாப்தத்தில் மிக முக்கியமான மைல் கல்லை அடைய வேண்டி இருந்தும் (ஒரு நாள் பந்தயங்களில் அவரது 49 வது சதம் எடுக்க வேண்டிய தருணத்திலும்), தனக்காக ஆடாமல், வேகமாக செயல்படாமல் டீமின் தேவை கருதி , விவேகத்துடன் ஆடினார்.
மேலும், இவர் ஒரு சிறந்த பீல்டர். பவுண்டரி எல்லை கோட்டிலும் ரன்கள் போவதை தடுப்பார். சிறந்த கேட்ச்கள் பிடித்து அசத்துவார். தேவைப்பட்டால் பந்து வீசவும் செய்வார். கோலி, சில சமயங்களில் உணர்ச்சி வசப்படக்கூடியவர். நன்றாக பேட்டிங் விளையாடினாலும், வெளியே செல்லும் பந்துகளை கைஆளுவதில் சில சமயம் திணறுவார் (outside the off stump) அதனால் விக்கெட் கீப்பர், ஸ்லிப் பீல்டர்களுக்கு கேட்ச் தந்து விடுவார்.
லோகேஷ் ராகுல்:
விக்கெட் கீப்பிங்கில் இவரது பங்களிப்பு போற்றும் வகையில் உள்ளது. சிறந்த உபயோகமான பேட்ஸ்மன். சில சமயங்களில் அவசரபட்டு பந்தை அடிக்கப்போய் அவுட் ஆவது உண்டு. நின்று ஆடினால் அதிக ரன்களை குவிக்க முடியும்.
சுப்மன் கில்:
சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மன். கேப்டன் ரோஹித் சர்மாவுடன் ஜோடியாக களம் இறங்கி தன் திறமையை வெளிகாட்டுபவர். வேகமாக ஸ்கோர் ஏற உதவுவார். கடந்த சில மேட்சுகளில் இவரது மேம்பட்ட திறமை தெரிய வருகின்றது. சிக்ஸ்ர்கள், பவுண்டரிகள் அடிப்பதில் வல்லவர். சிலநேரங்களில் சிறு தவறுகளால் தனது விக்கெட்டை இழப்பார். மேலும் அதிக டி 20 மேட்சுகளில் ( ஐ பி எல் உள்பட ) ஆடியதன் தாக்கம் காரணமாக அவசரப்பட்டு தேவையில்லாமலும் அவுட் ஆவது இவரது குறை. அதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
ஷ்ரேயாஸ் ஐயர்:
கடந்த சில மேட்ச்சுகளாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். ஒன்று மற்றும் இரண்டு ரன்கள் ஓடி ஸ்கோர் செய்வதில் சிறந்தவர் என்றால், தூக்கி அடித்து பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் எடுப்பதில் சூரர். ஆனால், அதுவே இவரது நிறை மற்றும் குறை. தூக்கி அடிக்கும்போது பீல்டர்கள் எங்கு உள்ளார்கள், எதிர்கொள்ளும் பந்து வீச்சின் தரம் இவற்றை கணித்து தூக்கி அடித்தால் பெரும்பாலும் பவுண்டரியோ அல்லது சிக்ஸரோ நிச்சயம். ஆனால் இவர் அவ்வாறு அடித்துவிட்டு தலையை தூக்கி பார்த்தால் அவுட் ஆவதும் சகஜம். இவர் இந்த முறையில் அதிகமாக அவுட் ஆகியுள்ளார். இதை தவிர்க்க வேண்டும்.
சூர்யகுமார் யாதவ்:
வித்தியாசமான முறைகளில் ஷாட்டுகளை அடிப்பதில் சூரர். ரிவேர்ஸ் ஸ்வீப், நடனம் ஆடும் போஸில் பந்தை பறக்க விடுவது, தேர்ட்மன் வழியாக சிக்ஸர் அடிப்பது என்று அசத்துவார். இவர் களத்தில் ஆடும்வரை ரன்கள் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது.
இவரும் டி 20 பாணி கிரிக்கெட்டினால் பாதிக்கப்பட்டவர். அதனுடைய தாக்கத்தினால் விரைவாக அவுட் ஆகும் வாய்ப்பும் அதிகம்.
ரவீந்திர ஜடேஜா:
ஆல் ரவுண்டராக திகழ்பவர்களுள் மிக முக்கியமான நபர். சிறந்த பீல்டர். உபயோகமான பேட்ஸ்மன். முக்கியமான சிறந்த ஸ்பின் பவுலர். சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுது எல்லாம் தனது சிறந்த பங்களிப்பால் அணியின் வெற்றிக்கு வழி வகுப்பவர். இந்த போட்டியில் இதுவரை இவர் எடுத்த விக்கெட்டுகளே இதற்கு உதரணமாகத் திகழும். நின்று பேட்டிங் செய்வார். வெகு வேகமாக ஓடி ரன்களை குவிப்பார். சில நேரங்களில் விரைவில் அவுட் ஆகிவிடுவார். ஆனால் சூப்பராக பவுலிங், பீல்டிங் செய்து சரி செய்து விடுவார்.
குல்தீப் யாதவ்:
ரவீந்திர ஜடேஜாவைப் போல இடது கை சூழல் பந்து வீசுபவர். முழுமையான ஸ்பின் பவுலர்.விக்கெட்களை எடுப்பதில் வல்லவர். உபயோகமான பேட்ஸ்மேனும்கூட. இந்த போட்டியில் தனது சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறார்.
பும்ரா, சிராஜ், ஷமி:
மூவரும் தங்களது வேக பந்து வீச்சு இடங்களை திறம்பட நிர்வகித்து வருகின்றனர். இந்த போட்டியின் கடந்த சில மேட்சுகளில் இவர்கள் விக்கெட்டுகளை குவித்த விதங்கள் அருமை, அபாரம். எதிரணியினர் இவர்கள் பந்து வீச்சுகளை எதிர் கொள்ள முடியாமால் விக்கட்டுகளை இழந்த காட்சிகள் கண்கள் முன் வந்து செல்கின்றன. இந்திய அணி செமி பைனலுக்கு வந்ததற்கு இவர்களது பவுலிங் திறமையும் முக்கிய காரணம் என்றால் மிகையாகாது.
இவர்களை தவிர இஷான் கிஷன், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா போன்ற ஆட்டக்காரர்களும் உள்ளனர்.
பொதுவாக வெற்றி பெற்று வரும் 11 நபர்கள் கொண்ட குழுவை மாற்ற மாட்டார்கள். தற்போதைய முதல் மற்றும் முக்கிய இலக்கு, எதிர்வரும் முதல் செமி பைனலை இந்திய அணி வெல்ல வேண்டும். முதலில் பேட்டிங் செய்ய வேண்டிய சூழ்நிலை இந்திய அணிக்கு ஏற்ப்பட்டால் 50 ஓவர்கள் முழுமையாக ஆடவேண்டும்.
வைடு, நோ பால்கள் மூலம் ரன்கள் கிடைத்தால் போனஸ்.
அதிகபட்ச ரன்கள் குவித்து எதிரணிக்கு கடுமையான இலக்கை வைக்கவேண்டும். கூடுமானவரை குறைந்த விக்கெட்டுகளையே இழக்க வேண்டும். பவுலிங் செய்யும் சமயத்தில் எல்லா ஆட்டக்காரர்களும் திறமையான பீல்டிங்கை வெளிப்படுத்தி, கேட்சுகள் தவற விடாமல், ரன்களை அதிகம் கொடுக்காமல் இருக்க வேண்டும். வெற்றி பெறமுடியும் என்ற தன்னம்பிக்கையோடு சேர்ந்து விளையாடினால் பைனலுக்கு சென்று நிச்சயம் வெற்றி காண நம் இந்திய அணியால் முடியும்.