தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்தது வங்கதேசம்!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், செவ்வாய்க்கிழமை மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி, வங்கதேசத்தை 149 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
வங்கதேசத்துக்கு இது நான்காவது தோல்வியாகும். ஏற்கெனவே இங்கிலாந்து, நியூஸிலாந்து, இந்தியாவிடம் தோல்வியடைந்த வங்கதேச அணி இப்போது தென்னாப்பிரிக்காவிடமும் தோல்வியை சந்தித்துள்ளது.
முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரரான குயின்டன் டீ காக் அதிரடியாக ஆடி 174 ரன்கள் எடுத்ததும். கிளாஸன் 90 ரன்கள் குவித்ததும் சிறப்பு அம்சமாகும். டீ காக் எடுத்த 174 ரன்களில் 15 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் அடங்கும். கிளாஸன் எடுத்த 90 ரன்களில் 8 சிக்ஸர்களும் 2 பவுண்டரிகளும் அடித்தார். அய்டன் மார்கரம் 60 ரன்கள் எடுத்தார். டேவிட் மில்லர் கடைசிவரை அவுட்டாகாமல் 34 ரன்கள் அடித்தார்.
வங்கதேச பந்துவீச்சாளர்களில் மெஹிதி, ஷோரிபுல், ஷாகிப் தலா ஒரு விக்கெட்டுகளையும், மஹ்மூத் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
அடுத்து விளையாடிய வங்கதேச அணி 46 ஓவர்களிலேயே 233 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்கதேச அணியின் மஹ்முதுல்லா மட்டும் நின்று ஆடி 111 ரன்கள் எடுத்தார். ஆனாலும், இது வெற்றி இலக்கின் அளவை குறைக்க உதவியதே தவிர வேனு எந்த பலனும் இல்லை.
தென்னாப்பிரிக்க பந்துவீச்சில் வங்கதேச விக்கெட்டுகள் வரிசையாக வீழ்ந்தன. ஒரு கட்டத்தில் வங்கதேசம் 145 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
ஜான்சென், வில்லியம்ஸ், ரபாடா தலா இரண்டு விக்கெட்டுகளையும், கோட்ஸீ 3 விக்கெட்டுகளையும் மஹாராஜ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இறுதியில் 149 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் வங்கதேசம் தோல்வி அடைந்தது.