
உலகக் கோப்பை போட்டித் தொடரில் இன்று (அக்.27) தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. கடந்த மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். இனி அடுத்தடுத்து வரும் போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றிபெறாவிட்டால் அரையிறுதிக்குள் நுழையமுடியாது.
அதே நேரத்தில் தென்னாப்பிரிக்க அணி உச்சத்தில் இருக்கிறது. இலங்கைக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க 428 ரன்கள் குவித்ததுடன் 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 311 ரன்கள் எடுத்ததுடன் 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. மேலும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 399 ரன்கள் குவித்து 229 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 382 ரன்கள் எடுத்து 149 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வென்றது. எனினும் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இரண்டு அணிகளும் இதுவரை 82 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் 30 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா 51 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. ஒரு போட்டியில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்காவை 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுறச் செய்தது.
உலகக் கோப்பை ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் ஐந்து முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் 2 முறையும் (2015 மற்றும் 2019), தென்னாப்பிரிக்கா (1992, 1996 மற்றும் 1999) மூன்று முறையும் வென்றுள்ளது.
சென்னை, சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஆடுகளம் பேட்ஸ்மென்களுக்கு சாதகமாக இருக்கும் என்றாலும் சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியுமா? என்பதை பார்க்க வேண்டும்.
முன்பு ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. ஆனால், இப்போது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் அதிரடி ஆட்டக்காரர்கள் கவனமுடன் ஆட வேண்டியிருக்கும்.
எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இதுவரை 27 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 15 முறை முதலில் பேட் செய்த அணியே வென்றுள்ளது. 11 முறை இரண்டாவதாக ஆடிய அணி வெற்றி இலக்கை எட்டியுள்ளது. கடைசியாக நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
வானிலையை பொறுத்தவரை காலையில் மழைத்தூறல்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் ஆட்டம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றே சொல்லப்படுகிறது.
இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெல்வதற்கு 62 சதவீத வாய்ப்புகள் உள்ளதாக கணிப்புகள் கூறுகின்றன. எனினும் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுக்கும் அணி வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது பாகிஸ்தான் முதலில் பேட் செய்தால் அந்த அணிக்கு வெற்றிவாய்ப்பு இருப்பதாகவே அவர்கள் கருதுகின்றனர்.