
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 போட்டியில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. பெங்களூருவில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை, இங்கிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இங்கிலாந்துக்கு இது நான்காவது தோல்வியாகும். அதாவது இதுவரை 5 போட்டிகளில் பங்கேற்ற இங்கிலாந்து 4 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது.
பட்டியலில் 9 வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால் கடுமையாக போராட வேண்டியிருக்கும். அடுத்துவரும் நான்கு போட்டிகளில் வெற்றிபெறுவதுடன், ரன்கள் விகிதத்தை அதிகரித்தால்தான் இது சாத்தியமாகும்.
முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 32.2 ஓவர்களில் 156 ரன்களில் ஆட்டமிழந்தது. அடுத்து விளையாடிய இலங்கை அணி 25.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 160 ரன்கள் எடுத்து இங்கிலாந்தை வீழ்த்தியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களத்தில் இறங்கிய ஜானி பார்ஸ்டோவ் மற்றும் தாவித் மலான் உற்சாகத்துடன் ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் சேர்ந்து 45 ரன்கள் சேர்த்த போது, மலான் 28 ரன்களில், மாத்யூஸ் வீசிய பந்தில் மெண்டிஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஜானி பார்ஸ்டோவ் 30 ரன்களில் ரஜிதா வீசிய பந்தில் தனஞ்செய் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மொயீன் அலியும் 15 ரன்களில் மாத்யூஸ் பந்துவீச்சில் அவுட்டானார். முதல் போட்டியில் விளையாடும் மாத்யூஸ் 5 ஓவர்கள் பந்துவீசி 14 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலங்கை பந்துவீச்சாளர் லாஹிரு குமார, இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் மற்றும் லியம் லிவிங் ஸ்டோன் ஆகிய மூவரையும் வீழ்த்தினர். பென் ஸ்டோக்ஸ் 73 பந்துகளை சந்தித்து 43 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு பவுண்டரிகளும் அடங்கும். கிறிஸ்வோக்ஸ் வீக்கெட்டை வீழ்த்திய ரஜிதா, முக்கியமான வீர்ரான ஜானி பார்ஸ்டோவ் விக்கெட்டையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இலங்கை அணி களத்தில் இறங்கியது. எனினும் தொடக்கத்திலேயே குசால் பெரைரா மற்றும் குசால் மெண்டிஸ் ஆகிய இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தி இங்கிலாந்து பந்துவீச்சாளர் வில்லே அதிர்ச்சி அளித்தார்.
எனினும் அடுத்து களம் இங்கிய பதும் நிசங்கா மற்றும் சதீர சமரவிக்ரம இருவரும் நின்று ஆடி, இங்கிலாந்து அணி பந்தவீச்சாளர்களுக்கு எந்த வாய்ப்பும் கொடுக்காமல் இலங்கை அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்திச் சென்றனர்.
உலக கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் “டக்” அடித்த நிசங்கா, இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 83 பந்துகளை சந்தித்து 77 ரன்களை குவித்தார். மேலும் வெற்றிக்கான ரன்னையும் அவரே எடுத்து கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார்.
சமரசேகராவும் அதிரடியாக விளையாடி 44 பந்துகளில் அரை சதம் எடுத்தார். அவர் 65 ரன்கள் குவித்து கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார். அவர் அடித்த 65 ரன்களில் 7 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். நிசங்கா, சமரவிக்ரமா இருவரும் சேர்ந்து 20.2 ஓவர்களில் 137 ரன்கள் எடுத்தனர்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியை, இலங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இதனிடையே இங்கிலாந்து அணி வரும் 29 ஆம் தேதி லக்னெளவில் உள்ள ஏகனா ஸ்டேடியத்தில் இந்திய அணியை எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.