
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் 36வது ஆட்டத்தில் இன்று நடப்புச் சாம்பியன் இங்கிலாந்துடன் ஆஸ்திரேலியா மோதுகிறது. ஆமதாபாதில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் போட்டி நடைபெறுகிறது. கடந்த முறை நடந்த போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்ததை அடுத்து இங்கிலாந்தின் அரையிறுதிக் கனவு தகர்ந்தது. உலக கோப்பை போட்டியில் இந்த முறை இங்கிலாந்துக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.
இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் சரியாக விளையாடாததே ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியின் தோல்விகளுக்கு முக்கிய காரணமாகும்.
அதே நேரத்தில் ஆஸ்திரேலியா நியூஸிலாந்து அணியை வென்றதன் மூலம் பட்டியலில் முன்னிலையில் உள்ளது. இங்கிலாந்து அணியின் ஜானி பார்ஸ்டோவ் விக்கெட் கீப்பர் என்றாலும் சிறந்த பேட்ஸ்மென். இவர் 6 போட்டிகளில் 141 ரன்கள் எடுத்துள்ளார். ஆனாலும் உலக கோப்பை தொடரில் இவரது திறமை பளிச்சிடவில்லை. இருந்தாலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இவர் தனது திறமையை வெளிப்படுத்தி ஆடக்கூடும்.
ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் சிறந்த பேட்ஸ்மென். தொடக்க ஆட்டக்காரரான இவர் 6 போட்டிகளின் மூலம் 413 ரன்கள் குவித்துள்ளார். அதாவது சராசரியாக 68.83 ரன்கள் எடுத்துள்ளார். இரண்டு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடித்துள்ளார். அதிகபட்சமாக 163 ரன்கள் எடுத்துள்ளார். கடைசி ஐந்து போட்டிகளில் வார்னர் 372 ரன்களை எடுத்துள்ளார். அதாவது சராசரியாக 74.4 ரன்கள் குவித்துள்ளார்.
டிராவிஸ் ஹெட் காயம் காரணமாக பெரும்பாலான போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றாலும் முதல் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 109 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடவுள்ள அவர், தனது திறமையை வெளிப்படுத்தி ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்துக்கு தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டாலும் டேவிட் மலான் இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 236 ரன்கள் எடுத்துள்ளார். மலான் அதிகபட்சமாக 140 ரன்கள் எடுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியில் மார்னஸ் லபுஸ்சாக்னே நம்பத்தகுந்த மிடில் ஆர்டர் பேஸ்மென். வலது கை ஆட்டக்காரரான அவர் இதுவரை 6 போட்டிகளில் 201 ரன்கள் எடுத்துள்ளார்.
இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஆதில் ரஷீத், அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களில் 2-வது இடத்தில் உள்ளார். 6 போட்டிகளில் அவர் 8 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான அவர் உலக கோப்பை போட்டித் தொடரில் 42 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மார்கஸ் ஸ்டோனிஸ் உலக கோப்பை போட்டியில் இன்னும் சிறப்பான ஆட்டத்தை தரவில்லை என்றாலும், ஆல்ரவுண்டர்களான மிட்சல் மார்ஷ், கிளென் மாக்ஸ்வெல் இல்லாத நிலையில் பொறுப்புகளை உணர்ந்து ஆட வேண்டிய கட்டத்தில் இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணியில் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஜம்பா, 6 போட்டிகள் மூலம் 16 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் 6 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளையும், ஹாஸில்வுட் 8 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
ஆஸ்திரேலிய என்னும் ஜாம்பவானை நடப்புச் சாம்பியனானா இங்கிலாந்து வெற்றிகொள்ளுமா என்பது இன்றைய ஆட்டத்தின் முடிவில் தெரிந்துவிடும்.