

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஐசிசி வாரிய கூட்டம் ஜூன் மாத தொடக்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2027 ஆம் ஆண்டு உலக கோப்பை நடைபெறும் இடங்கள், நடைபெறும் நாட்கள் பற்றிய முடிவுகள் எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டத்தின் தொடர்ச்சியாக எடின்பரோவில் இந்த மாத இறுதியில் நடைபெறும், ஐசிசி ஆண்டு பொதுக்கூட்டத்தில் மற்ற நடைமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று தெரிகிறது.
ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பது, கிரிக்கெட் உலகின் திருவிழாவாக கருதப்படும் ஐசிசியின் ஒருநாள் உலக கோப்பை தொடரைத் தான். ஐசிசி நடத்தும் 14-வது ஆண்கள் உலகக் கோப்பை தொடர் , 2027 ஆம் ஆண்டு அக்டோபர் 4 முதல் நவம்பர் 21 வரை நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய துணைக்கண்டத்தில் உள்ள நாடுகள் அனைத்தும் எப்பொழுது உலககோப்பை போட்டிகள் நடைபெறும் என்று மிகுந்த அவளுடன் காத்திருப்பார்கள். அவர்களுக்கு இது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தியாக இருக்கும்.
இந்த முறை ஒருநாள் உலகக் கோப்பையை தென்னாப்பிரிக்கா , ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன. இதற்கு முன்னர் 2003 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவும் ஜிம்பாப்வேயும் இணைந்து உலகக்கோப்பை தொடரை நடத்திய அனுபவம் உள்ளது. 24 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த நாடுகள் தற்போது இணைகின்றன. அத்துடன் நமீபியாவும் முதல் முறையாக இந்த போட்டிகளை நடத்தும் நாடுகளுடன் இணைந்துள்ளது.
இந்த 3 நாடுகளில் அதிக சர்வதேசத் தர மைதானங்களை கொண்டிருப்பதால் தென் ஆப்பிரிக்கா அதிக போட்டிகளை நடத்துகிறது. கேப்டவுன், புளூம்ஃபோன்டைன், செஞ்சுரியன், டர்பன், ஈஸ்ட் லண்டன், கெபெர்ஹா, ஜோகன்னஸ்பர்க் மற்றும் பார்ல் ஆகிய 8 மைதானங்களில் போட்டிகள் நடத்த திட்டமிடப்படுகிறது. ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் குறைந்த போட்டிகளே நடத்தப்பட உள்ளது.
உலகக் கோப்பை தொடரில் 14 அணிகள் பங்கேற்கும் , அவை இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு முதற்சுற்று தொடர் நடைபெறும். பின்னர், இரு குழுவிலும் தலா 3 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சூப்பர் 6 பிரிவில் போட்டிகள் நடைபெறும். அதிலிருந்து 4 அணிகள் அரையிறுதிப் போட்டியில் பங்கேற்கும். அதில் வெற்றி பெற்ற 2 அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும்.
உலகக் கோப்பை தொடரை இதுவரை 6 முறை ஆஸ்திரேலியாவும் ,இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் 2 முறையும் கைப்பற்றியுள்ளன. பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து ஆகிய நாடுகள் தலா ஒருமுறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. திறமையான வீரர்களை கொண்ட அணியாக இருந்தாலும் போட்டியை நடத்தும் தென் ஆப்பிரிக்க நாடு இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை என்ற சோக வரலாறும் உண்டு.
இறுதியாக 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இந்த தொடர் முழுக்க இந்திய அணி,ஒரு போட்டியிலும் தோல்வியை சந்திக்காமல் இறுதி போட்டி வரை சிறப்பாக முன்னேறியது. இறுதிப் போட்டியில் இந்தியா 5 முறை உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவுடன் மோதியது. அந்தப் போட்டியில் இந்தியா மிகக் கடுமையாக போராடியும் வெற்றி வாய்ப்பை இழந்தது.
ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக உலகக்கோப்பை போட்டிகளில் மிக கடுமையான ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.உலகக் கோப்பை தொடர்களில் நிலவும் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை முடிவு கட்ட, இந்த முறை இந்தியா கடுமையாக முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.