ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீர்ர்களான முஜிபுர் ரஹ்மான், ஃபஸல்ஹக் பரூக்கி மற்றும் நவீன் உல் ஹக் ஆகிய மூவரும் 2024 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது. இந்த மூவரும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட ஆட்சேபனை இல்லா சான்றிதழ் வழங்க ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது.
இந்த வீர்ர்கள், தங்களை வருடாந்திர ஒப்பந்தத்திலிருந்து விடுவிக்குமாறு கோரியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இவர்களுக்கு தேசத்தின் நலனைவிட சொந்த நலன் முக்கியமாக போய்விட்டதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கருதுகிறது. இந்த வீர்ர்கள் வர்த்தக ரீதியிலான கிரிக்கெட் லீகுகளில் அதிக ஆர்வம் காட்டியதால் தங்களை வருடாந்திர ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கக் கோரியிருந்தனர்.
மேற்குறிப்பிட்ட மூன்று கிரிக்கெட் வீர்ர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது.
2024 ஐ.பி.எல். போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் இந்த மூன்று ஆப்கன் கிரிக்கெட் வீர்ர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. முஜிபுர் ரஹ்மானை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. நவீன் உல் ஹக் மற்றும் ஃபஸல் பரூக்கி ஆகிய இருவரையும் லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி தக்கவைத்துக் கொண்டுள்ளது.
தனியார் லீக் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்த மூவரும் தங்களை வருடாந்திர ஒப்பந்தங்களிலிருந்து விடுவிக்குமாறு கோரியுள்ளதாக ஆப்கன் கிரிக்கெட் வாரிய குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
நியூஸிலாந்தின் டிரென்ட் போல்ட் மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஃபாப் டீ பிளெஸிஸ் இருவரும் தனியார் லீக் போட்டியில் விளையாடுவதற்காக தங்கள் நாட்டின் வருடாந்திர ஒப்பந்தத்திலிருந்து விலகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு குழுவை அமைத்துள்ளது.