ஐசிசி கனவு அணியில் இடம்பிடித்த 6 இந்திய வீரர்கள்!

ICC T20 Dream Team
ICC T20 Dream Team
Published on

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நடத்திய 9வது டி20 உலகக்கோப்பைத் தொடரின் சாம்பியன் அணியான இந்திய அணியில் இருந்து 6 வீரர்கள் ஐசிசி டி20 கனவு அணியில் இடம் பிடித்துள்ளனர். இது குறித்த கூடுதல் விவரங்களை இப்போது காண்போம்‌.

நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி. 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தொடர் முழுவதிலும் பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் இந்திய அணியின் செயல்பாடு சிறப்பாகவே இருந்தது. எந்தப் போட்டியிலும் ரன் குவிக்காத விராட் கோலி, இறுதிப் போட்டியில் அணிக்குத் தேவையான பங்களிப்பை அளித்திருந்தார்.

எப்போதும் ஐசிசி தொடர்கள் நடந்து முடிந்த பிறகு, களத்தில் விளையாடிய ஒட்டுமொத்த அணியில் இருந்தும் சிறப்பாக செயல்பட்ட 11 வீரர்களைத் தேர்வு செய்து, தனது கனவு அணியை ஐசிசி வெளியிடும். அதே போல் இப்போதும் டி20 கனவு அணியை வெளியிட்டுள்ளது ஐசிசி. இதில் ஆச்சரியம் என்னவென்றால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 6 இந்திய வீரர்கள் ஐசிசி டி20 கனவு அணியில் இடம் பிடித்துள்ளனர். மற்றுமொரு ஆச்சரியமாக இந்த அணியில் ரன் மெஷின் விராட் கோலி இடம் பிடிக்கவில்லை.

ஐசிசி வெளியிட்ட டி20 கனவு அணிக்கு கேப்டனாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரோகித்தைத் தவிர்த்து சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய 5 இந்திய வீரர்களும் ஐசிசி கனவு அணியில் இடம் பிடித்துள்ளனர்.

ஐசிசி டி20 கனவு அணி வீரர்கள் விவரம்:

ரோகித் சர்மா (கேப்டன்), ரஹ்மதுல்லா குர்பாஸ், நிக்கோலஸ் பூரன், சூர்யகுமார் யாதவ், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரஷீத் கான், ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஃபசல் பரூக்கி.

இந்த அணியில் 12வது வீரராக தென்னாப்பிரிக்காவின் ஆன்ரிச் நோர்ஜே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:
ஐசிசி டி20 உலகக் கோப்பை வெற்றிக்கனியை தட்டிப் பறித்தது இந்தியா!
ICC T20 Dream Team

6 இந்திய வீரர்களுக்கு அடுத்தபடியாக, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 3 வீரர்களை ஐசிசி தேர்வு செய்திருப்பது அந்த அணியின் அபரிமிதமான வளர்ச்சியையும், சிறந்த செயல்பாட்டையும் குறிக்கிறது. மேலும் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணியில் இருந்து தலா ஒரு வீரரை ஐசிசி தேர்வு செய்துள்ளது.

2013 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியைக் கைப்பற்றிய இந்திய அணி, அதற்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து ஐசிசி கோப்பைக் கனவை நனவாக்கியுள்ளது. மேலும் ஐசிசி கனவு அணியிலும் இந்தியா தனது ஆதிக்கத்தைத் செலுத்தியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஐசிசி கனவு அணியில் ஆசிய வீரர்கள் தான் அதிகப்படியான ஆதிக்கத்தை செலுத்தியுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com