டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே நாளில் 600 ரன்கள்: சாத்தியம் தானா?

Test Cricket
Test Cricket
Published on

டெஸ்ட் கிரிக்கெட் முன்பை விட தற்போது பல மாற்றங்களைக் கண்டு வருகிறது. தடுப்பாட்டத்திற்கு இருந்த முக்கியத்துவம் இப்போது இல்லை என்றே கூறலாம். டி20 வருகையால் டெஸ்ட் போட்டிகளிலும் அதிரடி தொடங்கி விட்டது. அவ்வகையில் ஒரே நாளில் டெஸ்ட் போட்டிகளில் 600 ரன்களை எடுப்பது என்பது சாத்தியம் தானா என்பதைப் பற்றி விளக்குகிறது இந்தப் பதிவு.

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை டெஸ்ட் போட்டிகள் எப்போதுமே சவாலாகத் தான் இருக்கும். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளைப் போல், டெஸ்ட் கிரிக்கெட்டை அவ்வளவு எளிதாக விளையாடி விட முடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு முழு உடற்தகுதியும், பொறுமையும் அவசியம். இப்போதைய நவீன கால கிரிக்கெட்டில் எவ்வளவு ரன்கள் அடித்தாலும், எதிரணியினர் அதனை மிக எளிதாக துரத்தி வெற்றி பெறுகின்றனர். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை 100 ரன்களை எட்டிப் பிடிப்பது கூட சாதாரண ஒன்றல்ல. தொடர்ந்து 5 நாட்கள் விளையாட வேண்டிய சூழலில் வீரர்கள் பொறுமை காக்க வேண்டியது அவசியமாகும்.

தற்காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டைக் கூட ஒருநாள் போட்டியைப் போன்று சிலர் விளையாடுகின்றனர். குறிப்பாக இங்கிலாந்து அணியின் பேட்டர்கள் அனைவருமே அதிரடியாக விளையாடி வருகின்றனர். இது இவர்களுக்கு முழுமையாக கைகொடுக்கிறதா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பலமான அணிகளுடன் ஆட்டத்தை முன்னெடுத்து இங்கிலாந்து தோல்வியைச் சந்தித்தது. உண்மையைச் சொல்வதென்றால் சிறிய அணிகளுடன் தான் இவர்கள் அதிக ரன்களைக் குவிக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர ஷேவாக் தான் டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியாக ஆடி வந்தார். அவருக்குப் பின் இந்திய அணியில் ரிஷப் பண்ட் அதிரடி காட்டினார். இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ கூட ஒருமுறை ரிஷப் பண்ட் போல் விளையாட நினைக்கிறோம் என்று தெரிவித்து இருந்தார். இருப்பினும், நியூசிலாந்தின் முன்னாள் வீரர் பிரண்டன் மெக்கல்லம் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகே, இங்கிலாந்தின் பேட்டிங் அதிரடியாக மாறியிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
சிக்ஸ் அடிச்சா அவுட்! எந்த நாட்டில் தெரியுமா?
Test Cricket

டெஸ்ட் கிரிக்கெட்டை அனுபவித்து ஆட வேண்டும். இல்லையெனில், குறுகிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க வேண்டி வரும். பொதுவாக டெஸ்ட் போட்டிகளில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 300 ரன்களைக் கடந்தாலே அது நல்ல ஸ்கோர் என்று சொல்லப்படும். இந்நிலையில், வெகு விரைவில் முதல் நாளிலேயே நாங்கள் 600 ரன்களை எடுப்போம் என்று இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் ஆலி போப் எதிரணிகளுக்கு சவால் விடுக்கும் வண்ணம் பேசியிருக்கிறார். ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணி முதல் நாளில் 500 ரன்களைக் கடந்து உலக சாதனை படைத்தது.

இனிவரும் நாட்களில் ஒருவேளை முதல் நாளில் 600 ரன்களை இங்கிலாந்து அணி எடுத்தால் அது கிரிக்கெட் வரலாற்றில் புதிய சகாப்தமாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை. இருப்பினும் இந்தச் சாதனை நிச்சயம் பெரிய அணிகளுக்கு எதிராக நிகழாது என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. வருங்காலத்தில் இங்கிலாந்திடம் சிக்கப் போகும் அந்த எதிரணி எது என்ற உங்கள் கணிப்பை மறக்காமல் சொல்லி விட்டுச் செல்லுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com