நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து கவுதம் கம்பீர் மீது விமர்சனங்கள் எழுகின்றன. இதனால், அவர் பதவிக்கு சிக்கல் வந்துள்ளது.
முன்னாள் இந்திய பயிற்சியாளர் ராகுல் ட்ராவிடிற்கு பிறகு கவுதம் கம்பீர் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பல கட்டுபாடுகளை விதித்தார் என்று சொல்லப்படுகிறது. கவுதம் கம்பீர் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக பயிற்சி அளிப்பார். ஆனால், டெஸ்ட் போட்டியில் அவ்வளவாக அவருக்கு அனுபவம் கிடையாது என்று பலரும் கூறினர்.
அதற்கேற்றவாரு சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஒரு போட்டிக்கூட இந்திய அணி வெற்றிபெறவில்லை. இந்தியா தனது சொந்த மண்ணில், மூன்று டெஸ்ட் போட்டிகளிலுமே தோல்வியடைந்து மோசமாக விமர்சிக்கப்பட்டது.
இதனால், கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருவரும் மோசமாக விமர்சிக்கப்பட்டனர். ரோஹித் ஷர்மா இதற்கு கேப்டன்தான் காரணம் என்று தன்னையே காரணம் காட்டியிருந்தார்.
மேலும் இந்திய ஆடுகளங்கள் தயாரிப்பில் இருந்து அணித்தேர்வு வரை அனைத்திலும் தலைமை பயிற்சியாளரின் தலையீடு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுவே இந்திய அணியின் மோசமான தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் அடுத்து இந்தியா மோதவிருக்கும் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரே கம்பீருக்கு இறுதி வாய்ப்பு என்றும், அப்படி அதிலும் சொதப்பினார் என்றால் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்றும் பிசிசிஐ அதிரடியாக முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக கம்பீர் சிவப்பு பந்து கிரிக்கெட்டிலிருந்து மட்டுமே நீக்கப்பட்டுவார் என்றும், மற்ற தொடர்களில் பயிற்சியாளராக நீடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் பயிற்சியாளராக பொறுப்பேற்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளி வந்துள்ளன. எனவே ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் கம்பீர், ரோகித் சர்மா மற்றும் இந்திய அணிக்கு முக்கிய தொடராக பார்க்கப்படுகிறது.
இனி வரும் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே உலக சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேறும் என்பதால், இந்திய அணி இக்கட்டான சூழலிலேயே உள்ளது.