இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடுவதே இன்று பல இளைஞர்களின் கனவாக இருக்கிறது. போட்டி நிறைந்த கிரிக்கெட்டில் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினால் கூட இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். ஏனெனில் ஏற்கனவே பல வீரர்கள் வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். இந்நிலையில், டெஸ்ட் போட்டியில் முச்சதம் கண்ட இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்ற கருண் நாயர், அணியில் இருந்தே ஓரங்கட்டப்பட்டது ஏமாற்றத்தை அளிக்கிறது.
கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும்; இந்திய அணியின் வெற்றிக்கு பங்களிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் பலரும் இங்கே களம் காண்கின்றனர். ஆனால், அவர்களுக்கான வாய்ப்பு முறையாக கிடைக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை சேப்பாக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடியது. இப்போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் கருண் நாயர் முச்சதம் அடித்து அசத்தினார். 381 பந்துகளைச் சந்தித்த நாயர் 303 ரன்களைக் குவித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார். இவரது சூப்பரான பேட்டிங் மூலம் இந்திய அணி 759 ரன்களைக் குவித்தது மட்டுமின்றி இன்னிங்க்ஸ் வெற்றியையும் பதிவு செய்தது.
இந்திய கிரிக்கெட்டில் வீரேந்திர ஷேவாக்கிற்கு பிறகு டெஸ்டில் முச்சதம் விளாசிய ஒரே வீரர் கருண் நாயர். இவ்வளவு பெரிய சாதனையை செய்த பிறகும் இவருக்கு அணியில் தொடர்ந்து இடம் கிடைக்காதது இன்றுவரை விடையறியாத புதிராகவே உள்ளது. இப்போட்டிக்கு பிறகு அடுத்தடுத்த இன்னிங்ஸில் 26, 0, 23 மற்றும் 5 ரன்களை மட்டுமே எடுத்தார். மொத்தமாக 6 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடிய கருண் நாயர் 62.33 சராசரியுடன், 374 ரன்களைக் குறித்துள்ளார். அதற்கு பிறகு டெஸ்ட் அணியில் இவருக்கான வாய்ப்பு நிராகரிக்கப்பட்டது. முச்சதம் கண்ட நாயகனுக்கு இன்னும் சில வாய்ப்புகளை பிசிசிஐ கொடுத்திருக்கலாம்.
கருண் நாயர் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்து கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் ஆகி விட்டன. தற்போது இவருக்கு 32 வயதாகிறது. இன்னும் விளையாடினால் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் தான் விளையாடுவார். இந்நிலையில், மீண்டும் இந்திய அணியில் இடம் படிப்பதையே இலக்காகக் கொண்டு தளராத நம்பிக்கையுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் கருண் நாயர்.
கடந்த ரஞ்சி டிராபி தொடரில் விதர்பா அணிக்காக நாயர் 690 ரன்களை குவித்துள்ளார். விஜய் ஹசாரே டிராபியில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடித்து தனது ஃபார்மை மீண்டும் நிரூபித்தார். சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் 95 ரன்களை அடித்து அசத்தினார். நார்த்தாம்ப்டன் ஷயர் அணிக்காக இங்கிலாந்தின் குளிர் மிகுந்த காலநிலையில் 11 இன்னிங்ஸ்களில் 487 ரன்களை எடுத்து அசத்தியிருக்கிறார். இதில் 202 ரன்கள் நாட் அவுட் இன்னிங்ஸும் ஒன்று. குளிரான காலநிலையில் இரட்டைச் சதம் அடிப்பது சாதாரண ஒன்றல்ல. சொல்லப்போனால் முன்பை விடவும் தற்போது தான் இன்னமும் அதிக உத்வேகத்துடன் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார் கருண் நாயர்.
தேர்வுக்குழு இவர் மீதும் கவனத்தை திருப்பினால் நன்றாக இருக்கும். கருண் நாயருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா இல்லையா என்பது தெரியவில்லை. இருப்பினும் இவரது இடைவிடாத முயற்சிக்கு வாழ்த்துகள்.