

இந்தியாவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான,3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வந்தது. ஏற்கனவே இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி இருந்தது. இந்தத் தொடர் இந்தியாவில் நடைபெற்றாலும் இதை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தியது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 3 வது டி 20 போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணி சார்பாக களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் , தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினர். 9.5 ஓவர்களில் இந்திய அணி 145 ரன்களை கடந்தது. 35 பந்துகளில் நிதானமாக சாம்சன் 50 ரன்களை எட்டினார். மறுபுறம் மிகவும் அதிரடியாக விளையாடிய அபிஷேக் ஷர்மா 34 பந்துகளில் 11 சிக்சர்களை பறக்க விட்டார் , மேலும் 9 பவுண்டரிகளையும் விளாசி 108 ரன்களை அதிவேகமாக குவித்தார்.
30 பந்துகளில் அதிவேக சதமடித்த அபிஷேக் ஷர்மா, 2017 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ரோஹித் ஷர்மா 35 பந்துகளில் அதிவேக சதமடித்திருந்த சாதனையை முந்தியுள்ளார். இதன் மூலம் சர்வதேச அங்கீகாரம் பெற்ற டி20 அணிகளில் அதிவேக சதம் என்ற சாதனையும் அபிஷேக் படைத்துள்ளார். அடுத்து வந்த இந்திய அணி பேட்ஸ்மேன்களை ஆப்கானிஸ்தான் அணி கட்டுப்படுத்த, ரன் ரேட் பெரிய அளவில் சரிந்து போனது. திலக் வர்மா, ஷ்ரேயாஸ் ஐயர் , சிவம் துபே , இஷான் கிஷன் எல்லாம் சொற்ப ரன்களைக் மட்டும் எடுக்க 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களை குவித்தது.
அடுத்து 222 என்ற இமாலய இலக்கை கடக்க வேண்டிய ஆப்கானிஸ்தான் அணி , அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க முற்பட்டாலும் ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருந்தது. அந்த அணியின் ரஹ்மானுல்லா குர்பாஸ் 15 ரன்களும் , இப்ராஹிம் சத்ரான் 25 ரன்களும் , அஸ்மத்துல்லா ஓமர்சாய் 17 ரன்களும் அதிகபட்சமாக எடுத்திருந்தினர்.
மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் வெளியேற 14.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆப்கான் அணி 94 ரன்களை மட்டுமே குவித்தது. இந்திய அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது. இந்திய அணியின் சார்பில் நிதிஷ்குமார் ரெட்டி மற்றும் ரவி பிஷ்னாய் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை செய்தது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது இரண்டையுமே அபிஷேக் ஷர்மா பெற்றுக் கொண்டார்.
போட்டியின் பரிசு வழங்கும் நேரத்தில் இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் , ஆப்கான் அணியின் கேப்டன் இப்ராஹிம் சத்ரானை மேடைக்கு அழைத்து வெற்றிக் கோப்பையை பகிர்ந்து கொண்டார். மேலும் சாம்பியன் புகைப்படத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்களையும் அழைத்து ஒன்றாக போஸ் கொடுக்க வைத்தார். ஷ்ரேயாஸ் ஐயரின் இந்த செயல் , வளரும் ஒரு அணியின் போராட்டத்தை ஊக்குவிப்பதாகவும் இந்திய அணியின் பெருந்தன்மையை காட்டுவதாகவும் இருந்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக தங்களது உறுதியான மனதினையும் , ஆப்கானுக்கு தங்களது அன்பையும் , மதிப்பையும் காட்டி இந்திய அணி ஊடகங்களுக்கு தீனி போட்டுள்ளது.