இந்திய டென்னிஸ் உலக அரங்கிற்கு கொண்டு சென்ற முன்னோடிகளாக ஆண்களில் பலர் இருந்தாலும், மகளிர் டென்னிஸை பிரபலப்படுத்தியதில் சானியா மிர்சாவுக்குத்தான் முதலிடமெனலாம்.
நடப்பு ஆஸி ஒபன் தொடரே, தான் களமிறங்கும் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியென சானியா அறிவித்து இருப்பதால், இப்போட்டி இந்திய ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தி யுள்ளது.
தவிர, அடுத்த மாதம் நடைபெற இருக்கும் துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற உள்ளார் சானியா!
சர்வதேச டென்னிஸில் 2003ஆம் ஆண்டு கால் பதித்த சானியவுக்கு வயது 36 ஆகிறது. 20 ஆண்டுகள் அயராத உழைப்பு. ஒற்றையர் பிரிவில் அதிகம் சாதிக்கவிட்டாலும், மகளிர் இரட்டையர்; கலப்பு இரட்டையர் பிரிவுகளில் விளையாடி பல கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அசத்தியிருக்கிறார்.
மகளிர் இரட்டையர் பிரிவில்:
ஆஸி ஓபன் 2016; விம்பள்டன் 2015; யு.எஸ்.ஓபன் 2015 ஆகியவைகளில் தலா ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைப் பெற்றுள்ளார். சுவிட்சர்லாந்து வீராங்கனை மார்டினா ஹிங்கிஸீடன் விளையாடி இந்த பட்டங்களையும் வென்றார்.
2011 ஆம் ஆண்டு ரஷிய வீராங்கனை எலனா வெஸ்னினாவுடன் சேர்ந்து பிரெஞ்ச் ஓபன் விளையாடி இறுதி ஆட்டம் வரை முன்னேறினார்.
கலப்பு இரட்டையர் பிரிவில்:
ஆஸி ஓபன் 2009; பிரெஞ்ச் ஓபன் 2012; யு.எஸ்.ஓபன் 2014 இம்மூன்றிலும் தலா ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வசப்படுத்தியுள்ளார். ஆஸி, ப்ரெஞ்ச் ஓபன் பட்டங்களை சக இந்திய வீரர் மகேஷ் பூபதியுடன் இணைந்தும், யு.எஸ். ஓபன் பட்டத்தை பிரேசில் வீரர் புரூனோ சோரெஸ் உடன் சேர்ந்தும் விளையாடிப் பெற்றார்.
விம்பிள்டனில் அரை இறுதிப் போட்டி வரை முன்னேறியவர்.காயம் காரணமாக யு.எஸ்.ஓபனில் விளையாட இயலவில்லை.
சர்வதேச டென்னிஸ் போட்டிகள் தவிர, ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் 2 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் பதக்கங்கள் பெற்றுள்ளார்.
2015 ஏப்ரல் 13ஆம் தேதி இரட்டையர் பிரிவில் விளையாடி நம்பர் 1 இடத்தைப் பிடித்தார் சானியா.
நடப்பு ஆஸி ஓபனில் வெற்றி பெற வாழ்த்துவோம்.
111வது ஆஸி ஓபன் பரிசு மழை!
கடந்த ஆண்டைவிட 3.4% அதிகம் முதல் பரிசிற்கு.
ஆண்கள் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு முதல் பரிசு தலா ` 16.5 கோடி.
இரண்டாவது இடம் பிடிப்பவர்களுக்கு ` 9.25 கோடி.
முதல் சுற்றிலேயே வெற்றி பெறுபவர்களுக்கு தலா ` 60 லட்சம். தொடரின் மொத்தப் பரிசுத் தொகை ` 425 கோடி.
முன்னனி வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் 111ஆவது ஆஸி ஓபன் டென்னிஸ் க்ராண்ட்ஸ்லாம் விளையாட்டு (16.1.2023) முதல் கோலாகல ஆரம்பம் மெல்போர்னில் தொடங்கிவிட்டது.