பிரசவத்திற்குப் பின் பெண்களைத் தாக்கும் போஸ்ட் பார்ட்டம் டிப்ரஷன் (Postpartum Depression)

விழிப்புணர்வுக் கட்டுரை
பிரசவத்திற்குப் பின் பெண்களைத் தாக்கும்
போஸ்ட் பார்ட்டம்  டிப்ரஷன் (Postpartum Depression)

‘ஒரு பிள்ளைக் கனியமுதின் வரவு’ ஒரு குடும்பத்தில் ஏற்படுத்தும் ஆனந்தமும், உற்சாகமும் அளவற்றது. எத்தனை செல்வங்கள் ஒருவருக்கு இருந்தாலும் மக்கள் செல்வம் இல்லை என்றால் அது நிறைவுறாத் தன்மையை சிலருக்கு ஏற்படுத்தும். அதே சமயம் பிரசவத்திற்குப் பிறகு தாயின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களைக் கூர்ந்து கவனிப்பது அவசியம்.

கருவுற்ற காலத்தில் தோன்றும் மனச்சோர்வு:

தாய்மை பெண்ணுக்கு ஒரு வரம்தான். அதில் சந்தேகமில்லை. ஆனால் அது சில சங்கடங்களையும் சேர்த்தே தருகிறது என்பதை எத்தனை பேருக்குத் தெரியும்? ஒரு பெண் கருவுற்ற காலத்தில் இருந்து, தன் மனதையும் உடலையும் பிள்ளைப்பேறுக்குத் தயார் செய்ய வேண்டும். கருவுற்ற ஆரம்பக் காலத்தில் இருந்து, மசக்கை, தலை சுற்றல், வாந்தி என சரியாக உணவு கூட உண்ணமுடியாமல் உடல் ரீதியாக அவளுக்கு எத்தனையோ சிரமங்கள் தோன்றும். நாட்கள் செல்லச்செல்ல  உடல் எடை கூடி, இரவில் சரியான தூக்கமும் இல்லாமல், மனதில் பிரசவத்தைப் பற்றிய எதிர்பார்ப்புடன் கூடிய ஒரு பயத்தையும் சேர்ந்தே சுமக்கிறாள் பெண். வேலைக்குப்போகும் பெண்ணிற்கு, வீட்டு வேலைகளுடன் சேர்த்து அலுவலக வேலையையும் செய்து சோர்ந்து போவாள்.

பிரசவத்திற்குப் பிறகான மனச்சோர்வு:

குழந்தையைப் பெற்றெடுத்த 24 மணி நேரத்திற்குள்ளேயே சில பெண்களுக்கு, புதிய அம்மாவாக தன் கடமையை பொறுப்புடன் செய்ய முடியுமா என்ற பயமும் தடுமாற்றமும் ஏற்படும். தான் ஒரு நல்ல அம்மாவாக இல்லாமல் போய்விடுவோமோ என்ற அவநம்பிக்கை தலையெடுக்கும். தனக்கோ, குழந்தைக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்ற பயம் தோன்றும்.,  24 மணி நேரமும் குழந்தையை விட்டு அகலாமல் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள வேண்டுமே என்ற சலிப்பும் சேர்ந்து கொள்ள, சோர்ந்து போகும் மனநிலையைத் தான் போஸ்ட் பார்ட்டம் டிப்ரஷன் என்கிறார்கள். பெரும்பான்மையான பெண்களுக்கு நான்கைந்து நாட்களிலேயே இந்த பிரச்சனை சரியாகிடும். சில பெண்களுக்கு ஆறு வாரங்களில் இருந்து ஆறுமாதங்கள் வரை நீடிக்கும். அப்படி இருந்தால் உடனே மருத்துவரை ஆலோசித்து சிகிச்சையில் இறங்க வேண்டும்.

போஸ்ட் பார்ட்டம் டிப்ரஷனின் அறிகுறிகள்;

கோபம், இயலாமை, குற்ற உணர்வு, நம்பிக்கையில்லாத் தன்மை, உடல் சோர்வு, பசியின்மை, அல்லது அதீதப் பசி, எரிச்சல், எதிலும் கவனம் இல்லாமை, உடல் எடை கூடுதல் அல்லது குறைதல், தூக்கமின்மை அல்லது அதீத தூக்கம் போன்ற பிரச்சினைகள் பிரசவித்த பெண்களை ஆட்கொள்ளும்.

இதன் விளைவுகள்:

டிக்கடி mood swings எனப்படும் உணர்வு நிலை மாற்றங்கள், காரணமே இல்லாமல் அடிக்கடி அழுதல், தெளிவான சிந்தனை இல்லாமை, முடிவெடுக்கும் திறனற்றுப் போதல், குடும்பம் மற்றும் நண்பர்கள் மேல் ஒரு ஒட்டாத தன்மை நிலவுதல், தான் பெற்ற குழந்தையை பிடிக்காமல் போவது போன்ற விளைவுகளை ஏற்படுத்தும். சில பெண்களுக்கு, தன்னையும் தன் குழந்தையையும் காயப்படுத்திக் கொள்ளத் தோன்றும்.

தீர்வுகள்:

தற்கு தீர்வு, மருந்து மாத்திரையை விட ஒரு பெண்ணிற்கு அவளது தாய், தந்தை, கணவன் மற்றும் கணவன் வீட்டார் அவளை அன்போடும் அக்கறையோடும் கவனித்துக் கொள்ளுதலே. ‘உன்னுடைய புதிய பொறுப்பில் நாங்களும் முக்கியப் பங்கெடுத்துக் கொள்கிறோம்’’ என்ற நம்பிக்கையை அவளுக்கு தருதல் மற்றும் அதன்படி நடத்தல்.

மனச்சோர்வு வரக் காரணங்கள் என்ன?

முன்பெல்லாம் கூட்டு குடும்பமாக இருந்த காலகட்டத்தில் ஒரு குழந்தை பிறந்தால் அந்த வீட்டில் உள்ள வயதான பெண்கள் கையில் தான் குழந்தை பெரும்பான்மையான நேரம் இருக்கும். குழந்தை பசிக்கு அழும்போது மட்டும் பாலூட்ட தாயிடம் தருவர். அதைக் குளிப்பாட்டுவது, அழுதால் வேடிக்கை காட்டுவது, தூங்க வைப்பது, மலஜலம் கழித்தால் சுத்தம் செய்வது போன்ற பணிகளை அவர்கள் செய்து கொள்வர். தற்போது கணவன் மனைவி இருவர் மட்டும் வசிக்கும் குடும்பங்களில் வீட்டு வேலை, குழந்தையை கவனித்தல், சமையல், போன்ற பணிகள், பணிபுரியும் பெண்ணாக இருந்தால் தன் அலுவலக வேலை பற்றிய கவலை, இத்தனையும் சேர்ந்து அந்தப் பெண்ணிற்கு மன அழுத்தமாக உருவெடுத்து, குழந்தை பிறப்பை ஒரு சோதனையாக நினைக்க வைத்து விடுகிறது.

தற்காலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது ஒரு சவாலான விஷயம். இரவில் கண் விழித்து குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் போது டயப்பரோ துணியோ மாற்ற வேண்டும். இதுவே அந்த பெண்ணிற்கு அதிகமான மனச்சோர்வைத் தருகிறது. பாலூட்டும் நேரம் தவிர்த்து, பிரசவித்த பெண்ணின் தாயோ, கணவரோ அல்லது மாமியாரோ அல்லது வீட்டில் இருக்கும் மற்றவர்களோ குழந்தையைக் கவனித்துக் கொள்ள வேண்டும். அந்தப் பெண்ணிற்கு சத்தான ஆகாரங்கள் கொடுத்து பகலில் நன்கு தூங்கச் செய்ய வேண்டும். குழந்தை வளர்ப்பில் குடும்பமே ஈடுபட்டால் அந்த பெண்ணிற்கு மனசோர்வு எளிதாக நீங்கிவிடும்.

மனச்சோர்வை விரட்டி, உற்சாகத்தை மீட்டெடுக்கும் உணவுகள்:

வைட்டமின் சி நிறைந்த பச்சை இலைக் காய்கறிகள், ப்ரோக்கோலி, எலுமிச்சை மற்றும் பப்பாளி, சிட்ரஸ் பழங்கள், மிளகுத்தூள் முளைகட்டிய பயிறு மற்றும் காலிஃப்ளவர் போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை புது அம்மாக்கள் உண்ணலாம். இவை மனச் சரிவைக் குறைத்து நல்ல மனநிலையை ஆதரிக்கும். முந்திரி மனதை ரிலாக்ஸ் ஆக்கும். அதில் உள்ள மக்னீஸியமே அதற்குக் காரணம்.

கோழி, முட்டை, இறைச்சி, மீன், பால், செறிவூட்டப்பட்ட முழு தானியங்கள் மற்றும் அடர் இலை கீரைகள், மற்றும் பாதாம், ஆப்பிள், கேரட், தக்காளி மற்றும் வெண்ணெய் ஆகிய வைட்டமின் ஈ நிறைந்த  உணவுகள், சோயா பனீர், பால், அக்ரூட் பருப்புகள், ஆலிவ் எண்ணெய், வெண்ணெய், ஆளி விதைகள் , மத்தி, டுனா, கானாங்கெளுத்தி மற்றும் சால்மன் மீன், போன்ற, பி 12 உள்ள உணவுகள் மனச்சோர்வைப் போக்கும்.

வாழ்வியலில் மாற்றங்கள்:

புதிய அம்மாக்கள் தங்கள் குழந்தை தூங்கும் போது மட்டுமே தூங்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் புதியதாக பிறந்த குழந்தைகளின் தூங்கும் நேரத்தை கணக்கிடுவது என்பது மிகவும் கடினம். அதனால் ஓய்வு தேவைப்படும் போது அம்மா தாராளமாக தூங்கலாம். தனக்கான நேரத்தை ஏற்படுத்திக் கொண்டு,  பிடித்த பாடலைக் கேட்பது, பிடித்த உணவை ருசிப்பது, புத்தகம் படிப்பது, வாய் விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகளை ரசிப்பது, மற்றும் பிடித்த சில இடங்களுக்கு என்று சென்று  வரலாம். இது மன அழுத்தத்தை குறைத்து மன அமைதியை கொடுக்கும்.

அமைதியான, மகிழ்ச்சியான மனநிலையில் தாய் பாலூட்டும் போது தான், குழந்தைக்கு அதே உணர்வுகளும் தாய்ப்பாலின் சத்துக்களுடன் சேர்ந்து

கிடைக்கிறது. புதிதாக ஒரு குழந்தை பிறக்கும்போது ஒரு தாயும் சேர்ந்தே பிறக்கிறாள் என்பதை குடும்பத்தினர் கருத்தில்கொண்டு அவளைக் கவனமாக பார்த்துக் கொள்ளவேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com