ஆஃப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையே நடைபெறவிருந்த 5 நாள் டெஸ்ட் போட்டி கைவிடப்பட்டிருக்கிறது. 91 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பந்துக்கூட வீசாமல் ரத்து செய்யப்பட்ட போட்டியாக இது அமைந்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான் இந்தியாவில் இந்த டெஸ்ட் போட்டியை நடத்த அனுமதி வாங்கியது. அந்த நிலையில் நொய்டாவில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையே டெஸ்ட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டது. நியூசிலாந்து உடன் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மோதவிருந்தது ஆஃப்கானிஸ்தான். ஆனால், போட்டி நடைபெறுவதற்கு முன் அங்கு சில நாட்கள் அதிகளவு மழை பெய்து வந்தது. இதனால், நொய்டா மைதானத்தில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்றது. இந்த மைதானத்தில் மழை நீர் வடிகால் சரியாக அமைக்கப்படாததால், போட்டியின் முதல் நாள் அன்று மழை பெய்யாத போதும் ஒரு பந்து கூட வீச முடியாத நிலை ஏற்பட்டது.
ஊழியர்கள் மைதானத்தின் நீரை அகற்ற முடியாமல் தடுமாறினர். இதனால், முதல் இரண்டு நாள் மழை இல்லை என்றபோதிலும், போட்டி நடைபெறவில்லை. இந்தநிலையில் மூன்றாவது மற்றும் நான்காவது நாட்களில் நல்ல மழை பெய்ததால், விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. அதேபோல், இன்றும் மைதானத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால், போட்டி கைவிடப்பட்டது. எனவே, ஒரு பந்துக்கூட வீசாமல், இந்த டெஸ்ட் தொடர் கைவிடப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர்,
1.இங்கிலாந்து X ஆஸ்திரேலியா - ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர் – 1890ம் ஆண்டு,
2. இங்கிலாந்து X ஆஸ்திரேலியா - ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர் – 1938ம் ஆண்டு,
3. ஆஸ்திரேலியா X இங்கிலாந்து - மெல்போர்ன் – 1970ம் ஆண்டு,
4. நியூசிலாந்து X பாகிஸ்தான் - காரிஸ்புரூக், டுனெடின் – 1989ம் ஆண்டு,
5. வெஸ்ட் இண்டீஸ் X இங்கிலாந்து - போர்டா, கயானா - 1990 ம் ஆண்டு,
6. பாகிஸ்தான் X ஜிம்பாப்வே - இக்பால் ஸ்டேடியம், பைஸ்லாபாத் – 1998ம் ஆண்டு,
7. நியூசிலாந்து X இந்தியா - கேரிஸ்புக், டுனெடின் – 1998ம் ஆண்டு
என ஏழு முறை மட்டுமே போட்டி கைவிடப்பட்டது. இப்போது இது எட்டாவது முறையாகும்.
இந்திய மண்ணில் இதுபோல நடந்து 91 வருடங்கள் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.