டெங்குவிலிருந்து மீண்ட சுப்மன் கில், ஆமதாபாதில் பயிற்சியில் ஈடுபட்டார்!

Shubman Gill
Shubman Gill
Published on

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்துக்கு முன்னதாக வரவேற்கத்தக்க மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில், ஆமதாபாதில் நரேந்திர மோடி விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நிபுணர்கள் உதவியுடன் பயிற்சியில் ஈடுபட்டதுதான்!

டெங்கு காய்ச்சலிலிருந்து மீண்ட சுப்மன்கில், வியாழக்கிழமை முதல் முறையாக பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார், பின்னர் பீல்டிங் பயிற்சியிலும் நேரத்தை செலவிட்டார்.

சுப்மன்கில் பயிற்சி பெறுவதற்காக தில்லியிலிருந்து இடதுகை பந்துவீச்சு நிபுணர் நுவான் சேனவிரத்னே, புதன்கிழமை ஆமதாபாத் வரவழைக்கப்பட்டார். சுப்மன்கின் பேட்டிங் பயிற்சி செய்வதையும், அங்கும் இங்கும் ஓடி பீல்டிங் செய்வதையும் கண்காணிக்க குழு மருத்துவர் ரிஸ்வான் உடன் இருந்தார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் இரண்டு ஆட்டத்தை டெங்கு காய்ச்சல் காரணமாக சுப்மன்கில் தவறவிட்டார். அதாவது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியிலும், பின்னர் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தில்லியில் நடைபெற்ற போட்டியிலும் இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை. டெங்கு காய்ச்சலுக்காக சென்னையில் சிகிச்சை பெற்ற அவர், குணமடைந்த நிலையிலும் பூரண உடல்நலம் பெற தொடர்ந்து சென்னையிலேயே தங்கி ஓய்வெடுத்தார்.

சென்றவாரம் திங்கள்கிழமை டெங்கு காய்ச்சல் அறிகுறி காரணமாக சுப்மன் கில், சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் அளவு குறைவாக இருந்ததை அடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் செவ்வாய்க்கிழமை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் மருத்துவக் குழு சுப்மன்கில் உடல்நிலை நன்றாக இருப்பதாக கூறி அனுமதி அளித்ததை அடுத்து அவர் ஆமதாபாத் சென்றார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் சுப்மன்கில் இடம்பெறுவாரா என்பது இனிமேல்தான் தெரியவரும்.

இந்த ஆண்டு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய சுப்மன்கில் 5 சதங்கள் அடித்து, 1200 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். விரைவில் அவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், சுப்மன்கில் பூரண குணமடைந்த பின்னர், அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது என்று தெரிவித்திருந்தார்.

“அவர் உடல்நலக்குறைவுடன் இருக்கிறார். உங்களுக்குத் தெரியும், நான் முதலில் மனிதனாக இருப்பதால், அவர் பூரண குணமடைய வேண்டும் என்று நினைக்கிறேன். இன்று இல்லாவிட்டாலும் நாளை அவர் இந்திய அணிக்காக விளையாடுவார். அவர் விரைவில் நோயிலிருந்து மீண்டு வரவேண்டும்” என்று ரோகித் குறிப்பிட்டிருந்தார்.

சுப்மன் கில்லுக்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய இஷான் கிஷன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ரன்கள் ஏதும் எடுக்காமலேயே வெளியேறினார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் 47 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com