இன்றைய வேகமான உலகில் பெரும்பாலானவர்களின் உணவுப் பழக்கம் வெகுவாக மாறி விட்டது. முறையற்ற இதுபோன்ற உணவுப் பழக்கத்தால் உடலில் ஏராளமான நச்சுப் பொருட்கள் உருவாகி, பல உடல் நலப் பிரச்னைகள் ஏற்படும் நிலை உருவாகிறது. இதுபோன்ற உடல் நலப் பிரச்னைகளுக்கு மிகச் சிறந்த நிவாரணமாக விளங்குகிறது சோற்றுக் கற்றாழைச் சாறு.
தினமும் சோற்றுக் கற்றாழைச் சாறு அருந்துவதால், வயிற்றின் ஜீரணப் பாதை சீராகி, உண்ணும் உணவு எளிதாக ஜீரணமாகிறது. இதனால் அஜீரணக் கோளாறுகள் சீர் செய்யப்படுகின்றன. மேலும், இதனால் குடல் சுத்தம் மற்றும் மலச்சிக்கல் பிரச்னைகள் சரியாகின்றன.
இன்றைக்குப் பலருக்கும் இருக்கும் பொது உடல் நலப் பிரச்னை மூட்டுவலி. தினமும் வெறும் வயிற்றில் சோற்றுக் கற்றாழைச் சாறு அறுந்துவதால் மூட்டுகள் வலு பெறுகின்றன. மேலும், மூட்டு தசைகளில் ஏற்படும் வலி, கட்டி, வீக்கம், சுளுக்கு போன்றவற்றுக்கு நல்ல நிவாரணமும் கிடைக்கிறது. சோற்றுக் கற்றாழை சாற்றை வெறும் வயிற்றில் அதிகாலை உண்டு வர, வயிற்றில் உள்ள புண்கள் விரைவில் ஆறும். அது மட்டுமின்றி, வயிற்றெரிச்சலும் குணமாகும்.
இந்த சோற்றுக் கற்றாழைச் சாற்றை அருந்தும் நாட்களில், உணவில் காரம், புளியைத் தவிர்க்க வேண்டும். அரை உப்பு சேர்த்த உணவை உண்ண வேண்டும். இப்படிப் பத்து நாட்கள் தொடர்ந்து இந்த உணவு முறையை கடைபிடிக்க, வயிறு சம்பந்தமாக பெரும்பாலான பிரச்னைகளும் தீர்ந்து விடும். வயிற்றுப்போக்கு காலங்களில் அதனைக் குறைக்கவும் சோற்றுக் கற்றாழை சாறு உதவுகிறது. அது மட்டுமின்றி, உடலுக்குத் தேவையான சக்தியை தருவதிலும், உடல் எடையை ஒழுங்குபடுத்துவதிலும் இதன் பங்கு மகத்தானதாக உள்ளது.