அடடா.. என்ன அர்ஜன்ட்? அர்ஜன்டினா அதிர்ச்சித் தோல்வி!

கால்பந்து
கால்பந்து
Published on

கத்தார் நாட்டில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து தொடரின் சி பிரிவு லீக் ஆட்டத்தில், உலகின் நம்பர் ஒன் சாம்பியனான அர்ஜென்டினா அணி, சவுதி அரேபியா அணியிடம்  அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

நேற்று அர்ஜென்டினா மற்றும் சவுதி அரேபியாவுக்கு இடையிலான போட்டி நடந்தது. உலகத் தர வரிசைப் பட்டியலில் 4-வது இடத்திலுள்ள அர்ஜென்டினா அணி, உலக தரவரிசையில் 53-வது இடத்தில் உள்ள சவுதி அரேபியாவை எதிர்கொண்டது.

ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கேப்டன் லியோனல் மெஸ்ஸி அபாரமாக கோல் அடிக்க, அர்ஜென்டினா 1-0 என முன்னிலை பெற்றது. ஆனால் அதன் பிறகு அர்ஜென்டினா அணி சற்று தொய்வடைய, அந்த சந்தர்ப்பத்தை சவுதி அரேபியா நன்கு பயன்படுத்திக் கொண்டது.

சவுதி அரேபியா வீரர்கள் சலேஹ் அல்ஷெரி 48-வது நிமிடத்திலும், அல்தாவ்சரி 53-வது நிமிடத்திலும் கோல் போட்டு அசத்தினர். இதனால் சவுதி 2-1 என முன்னிலை பெற, அந்நாட்டு ரசிகர்களின் ஆரவாரத்தில் அரங்கம் அதிர்ந்தது. இதை கொஞ்சமும் எதிர்பாராத அர்ஜென்டினா வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதைத் தொடர்ந்து, பதில் கோல் அடிக்க அவர்கள் கடுமையாக முயற்சித்த நிலையில், சவுதி வீரர்கள் தற்காப்பு ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி அதை முறியடித்தனர். இதையடுத்து அர்ஜென்டினா 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. சவுதி அணி சி பிரிவில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் அர்ஜென்டினா அணி அடுத்த லீக் ஆட்டங்களில் மெக்சிகோ, போலந்து அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றால் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com