விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாத வகையில் நடந்து முடிந்திருக்கிறது ஃபிஃபா உலகக் கோப்பை போட்டிகளின் இறுதிச்சுற்று. தென்னமெரிக்க அர்ஜென்டினா அணி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.
இரவு சுமார் எட்டரை மணிக்கு பிரான்ஸ், அர்ஜென்டினா அணிகளுக்கிடையிலான போட்டி தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய 22வது நிமிடத்தில் தனக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார் மெஸ்ஸி. அதற்கடுத்த சுமார் பத்து நிமிடங்களில் அந்த அணியின் அடுத்த கோல் போடப்பட்டது. கோலை எடுத்த டி மரியா முகமெல்லாம் மலர இரு கை விரல்களையும் ஆட்டீன் வடிவில் ஆக்கிக் கொண்டு தன் சாதனையைப் பதிவு செய்தார்.
ஆட்டம் தொடங்கி 78 நிமிடங்கள் ஆனவரை அர்ஜென்டினா வெற்றிப் பாதையை நோக்கி சந்தேமில்லாமல் போய்க் கொண்டிருந்தது. பிரான்ஸ் அணி திணறிக் கொண்டிருந்தது. ஆனால் திருப்புமுனை ஆட்டத்தின் 79வது நிமிடத்தில் நிகழ்ந்தது. தனக்குக் கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றினார் பிரான்ஸ் வீரர் எம்பாபே.
இது நடந்த இரண்டே நிமிடங்களில் அடுத்த திருப்புமுனை. பிரான்ஸ் வீரர் எம்பாபே இரண்டாவது கோலை அடித்தார். அப்போது இரு அணிகளும் 2-2 கணக்கில் சமமாக நின்றன. எனவே கூடுதலாக அரைமணி நேரம் வழங்கப்பட்டது.
இதில் அர்ஜென்டினா அணி தனது மூன்றாவது கோலை அடித்தது. அதாவது மெஸ்ஸி தனது இரண்டாவது கோலை அடித்தார்.
பின்னர் தனக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி எம்பாப்பேவும் தனது அணிக்கான மூன்றாவது கோலை அடித்தார்.
இப்போது மீண்டும் இரு அணிகளும் சமநிலைக்கு வர, பெனால்டி ஷுட் அவுட் முறை தொடங்கியது. அர்ஜென்டினா தரப்பில் மெஸ்சி, டைபாலா, பரேதஸ், மான்டியல் கோல் ஆகியோர் கோல் அடித்தனர். பிரான்ஸ் சார்பில் எம்பாப்வே, கோலோ முவானி மட்டும் கோல் அடித்தனர். ஆக 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது.
35 வயது மெஸ்ஸி தான் கலந்து கொள்ளும் இறுதி உலகக் கோப்பைப் பந்தயம் இதுவே என்று கூறியுள்ளார். பல ஆண்டுகள் அவர் பங்குபெற்ற பார்சிலோனா க்ளப்பிலிருந்து அவர் வெளியேறும் நிலை ஏற்பட்டது. கத்தாரிலிருந்து அவர் மியாமிக்குச் செல்வார் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் சில காலம் அவர் ஏதாவதொரு க்ளப்பில் சேர்ந்து கொள்வார் என்றும் அது அவரது ஓய்வுக் காலத்திற்கான ஒத்திகை என்றும் கூறப்படுகிறது.
மற்றொரு பிரபல வீரரான போர்ச்சுகல் அணியைச் சேர்ந்த 37 வயதான கிறிஸ்டியன் ரொனால்டோ தனது ஓய்வை இன்னமும் அறிவிக்கவில்லை. ஆனால் அவரது இடமும் கேள்விக் குறியாகியிருக்கிறது.
பல இளம் கால்பந்து வீரர்கள் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் தங்கள் முத்திரையைப் பதித்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான விஷயம்.
உலகக் கோப்பையை இம்முறை பிரான்ஸ் வென்றிருந்தால் அது வேறொரு சாதனையை செய்திருக்கும். கடந்த அறுபது ஆண்டுகளில் எந்த நடப்புச் சாம்பியனும் தொடர்ந்து இரண்டாம் முறை கோப்பையை பெற்றதில்லை. சென்ற முறை உலக சாம்பியனாக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட பிரான்ஸ் இம்முறை இறுதிச்சுற்றை அடைந்தாலும் அர்ஜென்டினாவிடம் தோற்று விட்டதால் அந்த சாதனை நடைபெறவில்லை.
************