டிஎன்பிஎல் இறுதிப்போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றியது. போட்டி முடிந்த பிறகு, தமிழக வீரரின் ஃபீல்டிங் குறித்து மிகவும் பாராட்டி பேசியுள்ளார் கேப்டன் அஸ்வின். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.
இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பது பலருடைய கனவாக இருக்கிறது. முன்பெல்லாம் ரஞ்சிக் கோப்பை மற்றும் இராணிக் கோப்பைகளே இந்திய அணிக்குள் நுழைவதற்கான துருப்புச் சீட்டாக இருந்தது. ஆனால் தற்போது ஐபிஎல் மற்றும் டிஎன்பிஎல் போன்ற உள்ளூர் தொடர்கள் இந்திய அணிக்குள் நுழைய பேருதவியாக இருக்கின்றன. இந்நிலையில் தமிழக அளவில் நடைபெற்ற 8வது டிஎன்பிஎல் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதன்முதலாக கோப்பையைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
8வது டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், கோவை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை மட்டுமே எடுத்தது. பின்னர், 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணி, 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றியை தட்டிப் பறித்தது. பேட்டிங்கில் 52 ரன்களையும், கட்டுக்கோப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் வெறும் 13 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்த அஸ்வின் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
போட்டியின் முடிவில் பேசிய அஸ்வின், தொடக்கத்தில் சில தடுமாற்றங்களைச் சந்தித்தாலும், இறுதியில் கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. டிஎன்பிஎல் கோப்பையைக் கைப்பற்றியதில் சரத்குமாருக்கும் அதிக பங்குண்டு. இவரை மைதானத்தில் எங்கு நிறுத்தினாலும், ஜான்டி ரோட்ஸ் போல பறந்து பறந்து பந்துகளைப் பிடித்து சிறப்பாக ஃபீல்டிங் செய்தார் எனவும் தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்க அணியின் மிகச் சிறந்த ஃபீல்டர் ஜான்டி ரோட்ஸ். உலக அளவில் ஃபீல்டிங்கிற்கு மிகவும் பெயர் போனவர் இவர் தான். இவருக்குப் பிறகு மற்ற அணிகளில் பல வீரர்கள் சிறப்பாக ஃபீல்டிங் செய்தாலும் கூட ஜான்டி ரோட்ஸூடன் ஒப்பிடவே முடியாது. இப்படிப்பட்ட நிலையில் இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் விளையாடிய சரத் குமாரை ஜான்டி ரோட்ஸூடன் ஒப்பிட்டு பேசுவதைப் பார்க்கும் போது, தமிழகத்தில் கிரிக்கெட் விளையாட்டு வளர்ந்திருப்பதை உணர முடிகிறது.
கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஒரு அணி பேட்டிங் மற்றும் பௌலிங்கில் மட்டும் சிறப்பாக செயல்பட்டால் போதாது. ரன்களைக் கட்டுப்படுத்தவும், கேட்ச்களை தவறவிடாமல் எதிரணியை அவுட் செய்யவும் ஃபீல்டிங் மிகவும் முக்கியமானது. ஒரு அணி ஃபீல்டிங்கில் சொதப்பி வெற்றியை இழந்த பல போட்டிகளை நாம் பார்த்துள்ளோம். ஆகையால், தமிழக வீரர் சரத் குமாரின் ஃபீல்டிங் திறத்தை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.