ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேபாளத்தை 238 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது. பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் அதிரடியாக எடுத்த சதமும், இஃப்திகார் அகமதுவின் சிறப்பான ஆட்டமும் அணியின் வெற்றிக்கு உதவின.
மூல்தனில் நடைபெற்ற போட்டியில் டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆஸம், முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களான ஃபக்கர் ஜமான் மற்றும் இமாம் உல் ஹக் இருவரும் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஆட்டமிழந்தனர். அப்போது பாகிஸ்தான் 6.1 ஓவர்களில் 25 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்திருந்தது.
எனினும் கேப்டன் பாபர் ஆஸம் மற்றும் விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான முகமது ரிஸ்வான் இருவரும் சரிவை தடுத்து நிறுத்தினர். இருவரும் சேர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்தனர். இந்த நிலையில் 44 ரன்களில் ரிஸ்வான் அவுட்டானார்.
பின்னர் பாபர் ஆஸம், இஃப்திகாருடன் சேர்ந்து ஆடினார். இருவரும் சளைக்காமல் ஆடி தனித்தனியாக சதம் எடுத்தனர். இருவரும் சேர்ந்து 214 ரன்கள் குவித்தனர்.
50 ஓவர் போட்டிகளில் ஆசிய கோப்பை வரலாற்றில் 150 ரன்கள் இலக்கை எட்டிய இரண்டாவது வீர்ர் என்ற பெருமையை பாபர் ஆஸம் பெற்றார். இதற்கு முன் இந்தியாவின் விராட் கோலி இந்த சாதனையை படைத்துள்ளார்.
இஃப்திகார்- பாபர் ஆஸம் இருவரும் ஐந்தாவது விக்கெட்டுக்கு நின்று ஆடி 214 ரன்கள் குவித்தனர். ஆசிய கோப்பை போட்டியில் இதுவும் ஒரு சாதனையாகும். இஃப்திகார் 71 பந்துகளில் 109 ரன்கள் குவித்து அவுட்டாகாமல் இருந்தார். அவர் அடித்த சதத்தில் 11 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடங்கும். இதையடுத்து பாகிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் எடுத்தது.
அடுத்து நேபாள அணி களத்தில் இறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான குஷால் புர்தெல், கேப்டன் ரோகித் பாதல் இருவரும் களத்தில் இறங்கிய வேகத்திலேயே அவுட்டாகி பெவிலியனுக்குத் திரும்பினர். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி இருவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அடுத்து ஆட வந்த ஆஸிப் ஷேக்கும் நஸீம் ஷா வீசிய பந்தில் அவுட்டானார். இதையடுத்து நேபாளம் 14 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது.
நேபாளத்தின் ஆட்டம் தொடக்கத்திலேயே மோசமாக இருந்த நிலையில் சோம்பால் காமி மற்றும் ஆரிப் ஷேக் இருவரும் 59 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். எனினும் வேகப்பந்து வீச்சாளர் ரவூப் இருவரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். காமி 28 ரன்னும், ஆரிப் 26 ரன்களும் எடுத்தனர்.
21-வது ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸ் களத்தில் இறங்கி தீபேந்திர சிங் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து ஷாதாப்கான் வீசிய பந்தை அடிக்க போய் ஜமானிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் 17 வயதான குல்ஷன் ஜா. ஷாதாப் வீசிய பந்தை சமாளிக்க முடியாமல் நேபாள் வீர்ர்கள் அடுத்தடுத்து அவுட்டாயினர். முடிவில் 23.4 ஓவர்களில் 104 ரன்களுக்கு நேபாளம் வீழ்ந்தது.
இதையடுத்து பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் நேபாள அணியை வென்றது.