ஆசியக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும், இந்திய அணியின் பேக்கப் வீரராக 18வது நபராக சஞ்சு சாம்சன் இணைத்துக்கொள்ளப்பட்டு இருக்கிறார். ஆசியக் கோப்பைக்கான ஒருநாள் தொடர் முழுவதும் இந்தியாவிலேயே நடைபெற உள்ள சூழலில், இந்திய மைதானங்கள் பெரும்பாலும் சுழற்பந்து வீச்சுக்கே சாதகமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
இந்த நிலையில்தான் இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் இந்த தேர்வு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அதுமட்டுமின்றி, அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியில் இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் என இருவரும் தேர்வு செய்யப்பட்டு இருப்பது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி, ‘ஒரே அணியில் இரண்டு இடதுகை சுழற்பந்து வீச்சாளர்கள் தேவையா? அந்த ஒரு இடத்தில் பேட்டிங் மற்றும் பௌலிங் செய்யக்கூடிய ரவிச்சந்திரன் அஸ்வின் அல்லது வாஷிங்டன் சுந்தர் இருவரில் ஒருவரை தேர்வு செய்திருக்கலாமே’ என்ற கருத்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரவலாக வைக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறப்பான சராசரியை வைத்திருக்கக்கூடிய சஞ்சு சாம்சன் 18வது பேக்கப் வீரராக தேர்வு செய்யப்பட்டு இருப்பது பெரும்பாலானோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், ஒரு நாள் போட்டிகளில் சமீப காலமாகவே தடுமாறிவரும் சூரியகுமார் யாதவ் இந்த 17 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றிருப்பதும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
இந்நிலையில், இந்த விமர்சனங்கள் குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், ‘இந்திய அணி தேர்வு செய்யப்பட்டு விட்டது. இனி அஸ்வின் பற்றி யாரும் பேசி சர்ச்சைகளை உருவாக்கக் கூடாது. இதுதான் நம்முடைய அணி. உங்களுக்கு இந்த அணி பிடிக்கவில்லை என்றால் நீங்கள் இந்தப் போட்டிகளை பார்க்காதீர்கள். சிலரைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என்று குறை கூறுவது தவறான மனநிலை. இந்த அணியால் உலகக் கோப்பையை வெல்ல முடியும். விலக்கப்பட்ட எந்த வீரரும் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூற முடியாது என்று நம்புகிறேன்’ என்று அவர் கூறி இருக்கிறார்!
‘பிடித்தால் பாருங்கள்; பிடிக்காவிட்டால் பார்க்காதீர்கள்’ என்று அடாவடியாகப் பேசி இருக்கும் சுனில் கவாஸ்கரின் இந்த சர்ச்சைப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. ‘ரசிகர்கள் கிரிக்கெட் விளையாட்டைப் பார்க்காவிட்டால், பிறகு யாருக்காக இந்தப் போட்டிகளை நடத்துகிறார்கள் என்பதை கவாஸ்கர் கொஞ்சம் புரிந்துகொள்ள வேண்டும். ரசிகர்கள் இல்லாமல் இவர்கள் யாருமே கிடையாது’ என்று பலரும் தங்கள் கருத்துக்களை வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.