வண்ண நிகழ்ச்சிகளுடன் நிறைவுற்றது ஆசிய விளையாட்டுப் போட்டி!

Asian Games 2023 closing ceremony
Asian Games 2023 closing ceremony
Published on

சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி வண்ணமயமான நிகழ்வுகளுடன் ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு வந்தது.

சீனாவில், ஹாங்ஸு நகரில் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மொத்தம் 16 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,407 பேர் பங்கேற்றனர். இதில் 40- வகையான போட்டிகள் நடத்தப்பட்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

கோவிட் தொற்று போட்டி காரணமாக ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஓராண்டு தள்ளிவைக்கப்பட்டது. ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கு சீனா 8 ஆண்டுகளாக உழைத்துள்ளது. இந்த போட்டியை நடத்த 30 பில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிய போட்டியின்போது சீனாவின் தேசிய கீதம் 201 முறை ஒலிக்கப்பட்டது. அதாவது சீனா பதக்கம் வென்றபோதெல்லாம் தேசிய கீதம் ஒலித்தது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சீனா கிரிக்கெட் மற்றும் கபடி ஆகிய இரு போட்டிகள் தவிர அனைத்து போட்டிகளிலும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

ஆசிய போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்த சீனா, 201 தங்கம் உள்பட 383 பதக்கங்களை கைப்பற்றி தொடர்ந்து 11-வது முறையாக பதக்கப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

இந்தியா சார்பில் 660 வீர்ர்கள் பங்கேற்று முதன் முறையாக 28 தங்கம் உள்ளிட்ட 107 பதக்கங்களுடன் வரலாறு படைத்தது.

நிறைவுநாள் நிகழ்ச்சியில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தாற்காலிக தலைவர் ராஜா ரண்தீர் சிங், சீன ஒலிம்பிக் கமிட்டி தலைவர் காவோ ஜிடான், ஹாங்ஸு நகர மேயர் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

நிறைவுநாள் விழாவையொட்டி நடைபெற்ற அணிவகுப்பில் இந்தியாவின் சார்பில் ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் மூவர்ணக் கொடியை ஏந்திவர, பதக்க வேட்டை நடத்திய இந்திய வீர்ர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். பின்னர் நடன நிகழ்ச்சி, லேசர் காட்சி நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து சீன ஒலிம்பிக் கமிட்டி தலைவர் காவோ ஜிடான், ஆசிய ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ராஜா ரண்தீர் சிங் உரையாற்றினர். ஆசிய போட்டிகளை சிறப்பாக நடத்த உதவிய ஹான்ஸு நகர மக்களுக்கும், ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. ஆசிய விளையாட்டுப் போட்டி முடிவுற்றதாக முறைப்படி அறிவிக்கப்பட்ட பின் டிஜிட்டல் ஜோதி அணைக்கப்பட்டு, ஆசிய கொடியும் இறக்கப்பட்டது.

சீனாவில் 19 வது ஆசிய விளையாட்டு போட்டி வெற்றிகரமாக முடிவுபெற்றதை அடுத்து 2026 ஆம் ஆண்டு 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளை ஜப்பான் நடத்த உள்ளது. இப்போட்டிகள் ஐச்சி மற்றும் நகோயா நகரங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் மூன்றாவது முறையாக ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் 1958 –இல் டோக்கியோவிலும், 1994 ஆம் ஆண்டு ஹிரோஷிமாவிலும் ஹிரோஷிமாவிலும் ஆசிய போட்டிகள் நடைபெற்றுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com