ஆசிய விளையாட்டு: ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ராவுக்கு தங்கம்! 81 பதக்கங்கள் வென்று இந்தியா சாதனை!

Neeraj Chopra
Neeraj Chopra

சீனாவில் ஹாங்ஸு நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இதுவரை இல்லாத அளவாக 81 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. புதன்கிழமை நடைபெற்ற போட்டிகளில் 3 தங்கங்களை வென்ற இந்தியா இதுவரை 18 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.

ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா மற்றும் கிஷோர் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். 4X400 மீட்டர் ரிலே மற்றும் கலப்பு அணிகளுக்கான போட்டிகளில் இந்தியா தங்கம் வென்றது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

ஈட்டி எறிதலில் நடப்பு சாம்பியனான நீரஜ் சோப்ரா, தங்கப்பதக்கம் வென்று தனது நிலையை தக்கவைத்துக் கொண்டுள்ளார். 88.88 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்து நீரஜ் தங்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு இந்திய வீரரான கிஷோர் ஜேனா, 87.54 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். 85 மீட்டர் தொலைவு என்ற இலக்கை எட்டியதன் மூலம் இருவரும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஆடவர் 4X400 மீட்டர் ரிலே போட்டியில் இந்திய அணியின் முகமது அனாஸ், அமோஜ் ஜேகப், அஜ்மல் முகமது மற்றும் ராஜேஷ் ரமேஷ் பந்தய தூரத்தை 3 நிமிடம் 1.58 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றனர்.

மகளிர் 4X400 மீட்டர் ரிலே போட்டியில் வித்யா, அய்ஸ்வர்யா, பிராச்சி மற்றும் சுபா ஆகியோர் அடங்கிய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

வில்வித்தையில் கலப்பு காம்பவுண்டு பிரிவில் இந்தியாவின் ஜோதி சுரேகா வென்னம் மற்றும் ஓஜாஸ் தேவ்தலே, தென்கொரியாவின் சோ சாவோன் மற்றும் ஜோ ஜஹுன் ஜோடியை 159க்கு 158 என்ற கணக்கில் வென்று தங்கத்தை தட்டிச் சென்றது.

ஆடவர் 5000 மீட்டர் தடகளப் போட்டியில் இந்தியாவின் அவினாஷ் சபிளே வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 13 நிமிடம் 21.09 விநாடிகளில் கடந்து இரண்டாவதாக வந்தார். இது அவருக்கு இரண்டாவது பதக்கமாகும். ஏற்கெனவே 3,000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் அவர் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

மகளிர் 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் ஹர்மிலான் பைன்ஸ் பந்த தூரத்தை 2 நிமிடம் 3.75 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இது அவர் பெற்றுள்ள இரண்டாவது பதக்கமாகும்.

குத்துச்சண்டை போட்டியில் 75 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன், சீனா வீராங்கனை லீ கியானை எதிர்கொண்டார். போட்டி கடுமையாக இருந்த நிலையில் லவ்லினா தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கத்தை வென்று திருப்தி அடைந்தார்.

ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்தியா, கொரியாவை 5க்கு 3 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது.

பாட்மின்டன் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி, இந்தோனேசியாவின்  லியோ ரோலி கர்னான்டோ மற்றும் டோனியல் மார்டின் ஜோடியை வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

முன்னதாக நடைபெற்ற மகளிர் மற்றும் ஆடவருக்கான ஒற்றையர் போட்டியில் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பி.வி.சிந்து மற்றும் ஹெச்.எஸ்.பிரணாய் இருவரும் காலிறுதிக்கு தகுதிபெற்றனர்.

எனினும் மகளிர் இரட்டையர் பிரிவில் டிரெஸ்ஸா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்தி ஜோடி. கொரியாவின் கிம் சோயியாங் மற்றும் கொங் ஹியோங் ஜோடியிடம் 21க்கு 15, 18க்கு 21 மற்றும் 21க்கு 13 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறியது.

இதேபோல கிடம்பி ஸ்ரீகாந்த், ஜப்பானிய வீரர் கொடை நரோகாவிடம் 16க்கு 21, 17க்கு 21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com