ஆகஸ்ட் 29 - தேசிய விளையாட்டு தினம்! விளையாட்டுகள் உடல் மற்றும் மனம் இரண்டையும் இணைக்கும் பாலம்!

National Sports Day
National Sports Day
Published on

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி. அந்த ஹாக்கி விளையாட்டில்  சிறப்பாக விளையாடி 1928,1932,1936 ஆகிய மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து இந்தியாவிற்கு தங்கப் பதக்கத்தை பெற்று தந்த ஹாக்கி விளையாட்டின்  ஜாம்பவான் மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்தநாளான ஆகஸ்ட் 29ஆம் தேதிதான் ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு நாளாக கொண்டாடப்படுகிறது.

மக்களிடையே விளையாட்டின் ஆரோக்கியமான பலன்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், விளையாட்டுத்துறையில் சிறப்பாக  பங்காற்றிய  வீரர்களை கௌரவப்படுத்தி அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2012 ஆம் ஆண்டு முதல்  இந்தியாவில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த விளையாட்டு நாளன்று விளையாட்டுத்துறையில் சிறப்பாக விளையாடி மகுடம் சூடிய வீரர்களுக்கு குடியரசு தலைவரின் கைகளால் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது  மற்றும் மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களை கண்டறிந்து  நட்சத்திரமாக ஜொலிக்க வைத்த பயிற்சியாளர்களை கௌரவிக்கும் வகையில் துரோணாச்சாரியார் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறது.

தேசிய விளையாட்டு நாளின்  நோக்கம் :

சிறந்த விளையாட்டு வீரரான தியான் சந்த்யை கௌரவப்படுத்தி மரியாதை செய்வதற்காகவும், நம்முடைய வாழ்க்கையில் தொன்றுதொட்டு வரும் விளையாட்டுகளைப் பற்றியும், அதன் நன்மைகளைப் பற்றியும் விழிப்புணர்வு  ஏற்படுத்துவதற்காகவுமே இந்நாள் கொண்டாடப்படுகிறது.

அனைத்து வயதினரிடமும் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை விளையாட்டுக்கள் மூலமாக ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாக இருக்கிறது. இத்தினத்தன்று பள்ளி மற்றும் கல்லூரிகளில் அதிக அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. மேலும் தடகள, குழு விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 

நம்முடைய வாழ்க்கையில் விளையாட்டின் பங்கு:

விளையாட்டுக்கள் என்பது உடலை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மனதையும் ஆரோக்கியமாக வைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டையும் இணைக்கும் இணைப்பு பாலமாக விளையாட்டுகள் உள்ளன. நம்முடைய பண்டைய விளையாட்டுக்களான பரமபதம், பல்லாங்குழி இவற்றையெல்லாம் இன்றைய குழந்தைகளுக்கு நாம் கற்றுத் தரும்போது குழந்தைகளின் கவனிப்பு திறன், கணிப்பு திறன், சிந்தனை திறன்  ஆகியவை மேம்படுவதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் நிறைய விளையாடுங்கள்; வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்!
National Sports Day

விளையாட்டுக்கள் மூலம் கிடைக்கும் நற்பலன்கள் :

குழந்தைகளை நன்கு விளையாட வைப்பதன் மூலம் அவர்களுடைய  தசை மற்றும் எலும்பு வளர்ச்சி, நரம்பு வளர்ச்சி ஆகியவை வலுப்பெறுகின்றன. விளையாடும் போது உடலுக்கு அதிக அளவிலான ஆக்சிஜன் அனுப்பப்பட்டு நுரையீரலின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. விளையாடும் குழந்தைகளுக்கு நல்ல பசி உணர்வு எடுப்பதோடு உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வியர்வையாக வெளியேற்றப்படுகிறது. குழுக்களாக சேர்ந்து விளையாடும் போது ஒருவருக்கொருவர் நட்புணர்வு மேம்பட்டு  விட்டுக்கொடுத்தல், கூட்டு உழைப்பு போன்ற பண்புகள் வளர்கின்றன. தோல்விகளை ஏற்றுக்கொள்ளுதல், உற்று நோக்குதல், ஒழுக்கம், தன்னம்பிக்கை போன்ற பண்புகளை விளையாட்டுக்களின் மூலம் வளர்த்தெடுக்க முடியும். விளையாடும் போது குழந்தைகளின் மனநிலை உற்சாகமாவதோடு அவர்களின் சிந்தனை திறனும் மிகச் சிறந்த அளவில் மேம்படுகிறது.

எனவே இன்றைய நாளில் நாமும் நம்முடைய குழந்தைகளை தாராளமாக விளையாட  வைக்கலாமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com