
கிரிக்கெட்டில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை விடவும் சவால் நிறைந்தது டெஸ்ட் போட்டிகள் தான். ஏனெனில் தொடர்ந்து 5 நாட்களுக்கு களத்தில் விளையாடுவது என்பது சற்று கடினமான ஒன்று. இந்நிலையில் காயத்தில் சிக்காமல் முழு உடற்தகுதியுடன் வீரர்கள் விளையாடுவது மிக முக்கியம். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான பிங்க் பால் டெஸ்ட் போட்டிகளில், உலக அணிகள் பெற்ற வெற்றிகளின் விவரங்களை அலசுகிறது இந்தப் பதிவு.
இன்றைய டெஸ்ட் கிரிக்கெட்டில் பல மாற்றங்கள் வந்து விட்டன. அதில் ஒன்று தான் பகல் இரவு டெஸ்ட் போட்டி. பகலிரவில் நடைபெறுவதால் வீரர்களுக்கு பந்து தெளிவாக தெரிய வேண்டும் என்பதற்காக இப்போட்டியில் பிங்க் நிறப் பந்து பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக ஒருநாள் போட்டிகள் தான் பகலிரவு ஆட்டமாக நடைபெறும். டெஸ்ட் போட்டியில் இத்தகைய மாற்றம் கடந்த சில ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு, பெரும் வரவேற்பையும் பெற்றது. இதில் ஆச்சிரியமான உண்மை என்னவென்றால், இதுவரை நடந்துள்ள 22 பிங்க் பால் டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டி மட்டுமே 5 நாட்கள் வரை நடைபெற்றது. மேலும் 2 போட்டிகள் 2 நாட்களுக்குள்ளேயே முடிந்தும் விட்டன. அனைத்து பிங்க் பால் டெஸ்ட் போட்டிகளும் சமனில் முடியாமல், வெற்றி தோல்வி என முடிவு கிடைத்துள்ளது.
பிங்க் நிறப் பந்துகள் கணிக்க முடியாத வகையில் இருக்கும் என்பதால், இப்போட்டிகளில் பொதுவாக பந்துவீச்சாளர்களின் கை தான் ஓங்கி நிற்கும். இருப்பினும் பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்று, 'பிங்க் பால் டெஸ்ட் போட்டிகளின் ராஜாவாக' திகழ்கிறது ஆஸ்திரேலிய அணி. ஆஸ்திரேலியா இதுவரை விளையாடிய 12 பிங்க் பால் டெஸ்ட் போட்டிகளில் 11 போட்டிகளில் வெற்றி, 1 போட்டியில் தோல்வி என முதலிடத்தில் உள்ளது. அடுத்தபடியாக இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள் மற்றும் 1 தோல்வியைப் பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணி 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகள் மற்றும் 5 தோல்விகளைப் பெற்றுள்ளது. இலங்கை அணி 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகள் மற்றும் 2 தோல்விகளைப் பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி மற்றும் 4 தோல்விகளைப் பெற்றுள்ளது. பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா 4 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி மற்றும் 3 தோல்விகளைப் பெற்றுள்ளன. தென்னாப்பிரிக்கா அணி 2 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி மற்றும் 1 தோல்வியைப் பெற்றுள்ளது. வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் தலா 1 போட்டியில் விளையாடி, இரு அணிகளும் தோல்வியையே சந்தித்துள்ளன.
பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த டாப் 2 வீரர்களும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதலிடத்தில் மார்னஸ் லபுசேன் 14 இன்னிங்க்ஸில் 4 சதங்கள் மற்றும் 3 அரைசதங்களுடன் 894 ரன்களைக் குவித்திருக்கிறார். அடுத்த இடத்தில் ஸ்டீவன் ஸ்மித் 1 சதம் மற்றும் 5 அரைசதங்களுடன் 760 ரன்களைக் குவித்திருக்கிறார். அதிகளவில் சொந்த மண்ணிலேயே பிங்க் பால் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிதால் தான் ஆஸ்திரேலியா பிங்க் பால் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி வாகை சூடி வருகிறது என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.