
உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கையை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்கதேசம். வங்கதேச அணியில் ஷாகிப் அல் ஹஸன் மற்றும் நஜ்மல் ஷான்டோ இருவரும் நின்று ஆடி அரை சதம் அடித்து வங்கதேசத்தின் வெற்றிக்கு வழி வகுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 2025 ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு தகுதிபெறும் நம்பிக்கையை பெற்றுள்ளது வங்கதேசம். உலக கோப்பை புள்ளிப்பட்டியலில் வங்கதேசம் 7 வது இடத்தைப் பெற்றுள்ளது. உலக கோப்பை ஒருநாள் போட்டி வரலாற்றில் இலங்கையை வங்கதேசம் வென்றது இதுவே முதல் முறையாகும்.
முதலில் விளையாடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்கள் எடுத்தது. 280 ரன்கள் எடுத்தால்தான் வெற்றி என்ற நிலையில் களத்தில் இறங்கிய வங்கதேச அணி 41.1 ஓவர்களிலேயே 7 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 280 ரன்கள் குவித்து வெற்றிபெற்றது.
இலங்கை அணியில் பதும் நிசங்காவும், குசல் பெரைராவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ஆனால், வங்கதேசத்தின் ஷோரிபுல் வீசிய முதல் ஓவரிலேயே நான்கு ரன்கள் எடுத்த நிலையில், முஷ்பிகுரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். எனினும் அடுத்து வந்த குசல் மெண்டிஸ், பதும் நிசங்காவுடன் சேர்ந்து 61 ரன்கள் சேர்த்தார். 12 வது ஓவரில் மெண்டிஸ் ஷாகிப் பந்து வீச்சில் ஷோரிபுல்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
நிசங்கா 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டான்ஸிம் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அவர் எடுத்த 41 ரன்களில் 8 பவுண்டரிகள் அடங்கும்.
சதீர சமரவிக்ரமவும் சரித் அஸ்லங்காவும் இணைந்து 63 ரன்கள் சேர்த்தனர். எனினும் 25-வது ஓவரில் சமரவிக்ரம 41 ரன்கள் எடுத்தபோது ஷாகிப் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இந்த நிலையில் ஆல்ரவுண்டரான ஆஞ்சலோ மாத்யூஸ், ஆடுகளத்திற்கு தாமதமாக வந்ததால் நேரமாகிவிட்டதை காரணம் காட்டி அவுட்டானதாக நடுவரால் அறிவிக்கப்பட்டார். சர்வதேச போட்டியில் பேட்ஸ்மென் ஒருவர் ஆடுவதற்கு முன்னரே அவுட்டானதாக அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இதைத் தொடர்ந்து அஸ்லங்கா, தனஞ்சய டிசில்வாவுடன் சேர்ந்து 78 ரன்கள் சேர்த்தார். தனஞ்செய் 34 ரன்களில் மெஹிதி பந்துவீச்சிலும், அடுத்து மஹேஷ் தீக்ஷணா 21 ரன்களில் ஷோர்புல் பந்துவீச்சிலும் அவுட்டாயினர். அஸ்லங்கா மட்டும் நின்று ஆடி 108 ரன்கள் குவித்தார். அவர் எடுத்த 108 ரன்களில் 6 பவுண்டரிகளும் 5 சிக்சர்களும் அடங்கும்.
இறுதியில் இலங்கை 49.3 ஓவர்களில் 279 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்கதேசத்தின் டான்ஸிம் 3 விக்கெட்டுகளையும் ஷோரிபுல் மற்றும் ஷாகிப் தலா 2 விக்கெட்டுகளையும் மெஹ்தி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வங்கதேசம் களத்தில் இறங்கியது. ஆனால், மதுசங்கவின் பந்துவீச்சில் தொடக்க ஆட்டக்காரர்களான டான்ஸிட் ஹஸன் 9 ரன்களிலும் லிட்டன் தாஸ் 23 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர். அடுத்து ஆட வந்த ஷாகிப், நஜ்முல் ஷன்டோ இருவரும் சேர்ந்து ரன்களை குவிக்கத் தொடங்கினர். இருவரும் கூட்டாக 169 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். எனினும் ஷாகிப் 82 ரன்கள் எடுத்த நிலையில் மாத்யூஸ் பந்து வீச்சில் அவுட்டானார். நஜ்முல் 90 ரன்கள் எடுத்திருந்தபோது அவரும் மாத்யூஸ் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார்.
இந்த நிலையில் தீக்ஷணாவும் மதுசங்கவும் சிறப்பாக பந்துவீசி வங்கதேச அணி வீரர்களுக்கு நிர்பந்தத்தை ஏற்படுத்தினர். இதையடுத்து முஷ்பிகுர் ரஹீம் 10 ரன்களில் வெளியேறினார். அடுத்து முகமதுல்லாவும் 22 ரன்களில் அவுட்டானார்.
மெஹ்தி ஹஸன் 3 ரன்களிலேயே அவுட்டானார். ஆனால், தெளஹித் ஹிரிதோய் மற்றும் டான்ஸிம் இருவரும் வங்கதேசத்தின் வெற்றியை உறுதி செய்தனர். இலங்கை பந்துவீச்சாளர் மதுசங்க 3 விக்கெட்டுகளையும், தீக்ஷணா, மாத்யூஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து வங்கதேசம் 282 ரன்கள் குவித்து, இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இனி அடுத்து வங்கதேசம் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணியை சந்திக்க உள்ளது. இலங்கை அணி வரும் நவ. 9 ஆம் தேதி பெங்களூரில் நியூஸிலாந்து அணியை எதிர்கொள்கிறது.