

ஐசிசி நடத்தும் மகளிருக்கான 2026 டி20 உலக கோப்பை தொடரை இங்கிலாந்து நடத்த உள்ளது. டி20 உலக கோப்பை தொடர் ஜூன் 12-ஆம் தேதி தொடங்கி ஜூலை 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பத்தாவது டி20 உலக கோப்பை தொடரான இதில் இந்தியா , இலங்கை, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், இங்கிலாந்து , நியூசிலாந்து , அயர்லாந்து , ஸ்காட்லாந்து நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், சவுத் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.
இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் உலகக் கோப்பை சாம்பியனான இந்திய மகளிர் அணி, கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய எழுச்சியை பெற்றுள்ளது. தொடர்ச்சியாக பல வெற்றிகளை பெற்று பார்வையாளர்களை தங்கள் பக்கமும் ஈர்த்துள்ளனர்.
தற்போதைய இந்திய அணி ஹர்மன் பிரித் கவர் தலைமையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒரு பக்கம் அணியில் துடிப்பான இளம் வீராங்கனைகளும், அதே நேரத்தில் ஹர்மன்பிரீத் கவுர் , ஸ்மிருதி மந்தனா , ஜெமிமா ரோட்டரிக்ஸ் போன்ற அனுபவம் வாய்ந்த வீராங்கனைகளும் அணிக்கு வலு சேர்க்கின்றனர்.
அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி:
2026 உலகக் கோப்பை தொடரில் பங்குபெறும் அணிக்கு கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர், துணை கேப்டனாக ஸ்மிருதி மந்தனா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தொடக்க ஆட்ட வீராங்கனைகளாக ஷபாலி வர்மா மற்றும் யாஸ்திகா பாட்டியா களம் இறங்குவார்கள்.
நடு வரிசையில் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), பார்தி புல்மாலி ஆகியோர் விளையாட உள்ளனர். பவுலிங் மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடும் ஆல் ரவுண்டர்களாக தீப்தி சர்மா, நந்தனி சர்மா , ஸ்ரேயங்கா பாட்டில், அர்ஷ்தீப் கவுர் ஆகியோர் உள்ளனர். அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களாக ஶ்ரீ சாரணி, ரேணுகா சிங் தாக்கூர், ராதா யாதவ், அருந்ததி ரெட்டி கிரந்தி கவுட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஐசிசி டி20 மகளிர் உலகக் கோப்பை தொடர் 2009 ஆம் ஆண்டு தொடங்கியது. அந்த ஆண்டின் முதல் உலகக் கோப்பையை இங்கிலாந்து மகளிர் அணி கைப்பற்றியது. அதன் பின்னர் தொடர்ச்சியாக 3 முறை ஆஸ்திரேலிய மகளிர் அணி டி20 உலக கோப்பையை கைப்பற்றியது. 5 ஐந்தாவது உலக கோப்பையை மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.
அதன் பின்னர் மீண்டும் 3 முறை தொடர்ச்சியாக ஹாட்ரிக் உலக கோப்பையை ஆஸ்திரேலியா அணி வென்று காட்டியது. இதுவரை ஆஸ்திரேலிய அணி மட்டும் 6 உலக கோப்பையை வென்றுள்ளது. இறுதியாக டி 20 உலகக் கோப்பையை நியூசிலாந்து அணி கைப்பற்றி உள்ளது. உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணி கடுமையாக ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் , சமீப கால இந்திய அணி புதிய எழுச்சியை பெற்றுள்ளது.
2020 ஆம் ஆண்டு இறுதி போட்டிக்கு இந்திய மகளிர் அணி தகுதி பெற்றிருந்தது , ஆயினும் அந்த முறை கோப்பையை ஆஸ்திரேலியாவிடம் இழந்தது. ஒரு நாள் உலக கோப்பையை இந்திய மகளிர் அணி தங்கள் வசமாக்கியது போல் , டி20 உலகக் கோப்பையும் வெல்வாரர்கள் என்று இந்தியாவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.