நாம் வழக்கமாக நன்கு பழுத்த பப்பாளி பழத்தையே சாப்பிட்டு வருகிறோம். பழுக்காத பச்சை பப்பாளியிலும் ஏராளமான சத்துக்கள் நிரம்பி காணப்படுகின்றன அது தெரியுமா உங்களுக்கு? பப்பாளி பழம் ருசியின் காரணமாக அனைவராலும் விரும்பப்படுகிறது. பப்பாளிப் பழம் மட்டுமின்றி, பழுக்காத பச்சை பப்பாளியும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பழுக்காத பப்பாளி காயை ஜூஸ் செய்து குடிப்பதால் கொலஸ்ட்ரால் குறைகிறது. அதோடில்லாமல் பொட்டாசியம், நார்ச்சத்து, மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் ஈ வைட்டமின் சி ஆகியவையும் நிறைந்துள்ளது.
பச்சைப் பப்பாளி தமனிகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதனால் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவும் குறைகிறது. இதன் காரணமாக இதய நோய், பக்கவாதம் ஏற்படும் அபாயமும் குறைகிறது.
இவை தவிர பச்சை பப்பாளிகாயை உண்பதால் சருமத்திற்கு பல நன்மைகள் ஏற்படுகிற்து. பச்சை பப்பாளி சொரியாசிஸ், முகப்பரு, தழும்புகள், தோல் சிவத்தல் ஆகிய பல பிரச்னைகளை குறைக்கிறது. பச்சை பப்பாளியை மசித்து காயங்கள் மீது போடுவார்கள். இது தொற்றுநோயைக் குறைக்க உதவும்.
பப்பாளி செரிமானத்தை தூண்டும். இதில் பாப்பைன் என்ற செரிமான நொதி உள்ளது. இது இரைப்பை பிரச்னையை அறவே தடுக்கிறது. குடல் எரிச்சல், வயிற்றில் அதிகப்படியான சளி ஆகிய பிரச்னைகளையும் குறைக்கவல்லது.
உடல் எடை இழப்புக்கு பச்சை பப்பாளி பயனுள்ளதாக இருக்கும். ஆரோக்கியமான எடை இழப்பை ஊக்குவிக்கும் கலவைகள் இதில் உள்ளன. கலோரிகள் குறைவு; நார்ச்சத்து நிறைந்தது என்பதால் உடல் எடை இழக்க விரும்பும் நபர்கள் இதை நம்பி உண்ணலாம். இந்த இரண்டு பண்புகள் உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை கொடுக்கும். எடை அதிகரிக்கும் அபாயத்தையும் குறைக்க உதவும்.
பப்பாளியில் உள்ள பல ஊட்டச்சத்துக்கள் பெண்களுக்கு பெரும் நன்மையை அளிக்கிற்து. பப்பாளியின் இலைகள் மாதவிடாய் வலியைப் போக்க உதவுகிறது. அது எப்படி என்கிறீர்களா? பப்பாளி இலை, புளி, உப்பு ஆகியவை சேர்த்து அரைத்து அதனுடன் தண்ணீர் சேர்த்து சாப்பிட்டால் மாதவிடாய் வலியில் நிவாரணம் பெறலாம். பப்பாளி இலைச்சாறு உடல் சூட்டை சமன்படுத்தும் வல்லமை கொண்டது.
ஆஸ்துமா, கீழ்வாதம், மற்றும் முடக்கு வாதம் ஆகிய நோயாளிகளுக்கு பச்சை பப்பாளி நன்மை பயக்கும். இதில் உள்ள அழற்சி பண்புகள் உடலை வலுப்படுத்த உதவுகிறது. புகைப்பிடிப்பவர்களின் நுரையீரல் வீக்கத்தைக் குறைக்கும் வைட்டமின் ஏ இதில் உள்ளது என்பது சிறப்பு.