
சீனி துளசியின் பிறப்பிடம் தென் அமெரிக்கா. இதன் தாவரவியல் பெயர் 'ஸ்டீவியா ரிபோடயானா' இது பராகுவே, பிரேசில் நாடுகளில் அதிகம் வளர்கிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் முதலில் அறிமுகமானது. இந்தச் செடி 3 அடி வரை வளரும். மணல் கலந்த களிமண் இதன் வளர்ச்சிக்கு ஏற்றது.
வீடுகளில் இச்செடியை தொட்டியில் வளர்க்கலாம். மூன்று மாதங்களிலேயே பலன் தர ஆரம்பித்து விடும். இனிப்பு துளசி இலையில் கார்போஹைட்ரேட், மெக்னீசியம், கால்சியம், வைட்டமின் என ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கு இது வரப்பிரசாதம். இந்தச் செடியின் தண்டு மற்றும் இலைகள் இனிப்பாக இருக்கும். காபி டீ யில் சர்க்கரைக்கு பதில் நாலு இலைகளை போட்டால் போதும். சுகர் டேஸ்ட்டை விட சூப்பராக இருக்கும்.
மேலும் இரண்டு இலைகளை தினமும் மென்று சாப்பிட்டால் தோல் வியாதிகள் மறையும். கொலஸ்ட்ரால் குறையும். வாய்ப்புண் மற்றும் வாய் துர்நாற்ற பிரச்சனைகள் நீங்கும். ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். வயிற்றுப்போக்கு பிரச்சனையை குணமாக்கும். 'ஆண்டி பாக்டீரியா'வாக வினை புரியும். இதில் ஜீரோ கலோரி உள்ளது. மேலும் அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. தோல் வியாதி நீக்கும் மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
இதிலிருந்து, மாத்திரை, எண்ணெய் மற்றும் விதவிதமாய் ஸ்வீட் தயாரிக்கின்றனர். சோடா போன்ற பானங்களில் கலந்தும் பயன் படுத்துகின்றனர். வயிற்று உப்புசம் போக்க, ஜப்பானில் இப்பொடியை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பயன்படுவதால் இச்சீனித் துளசி உலக நாடுகளில் எல்லாம் புகழடைந்து வருகிறது.
முதிர்ந்த இலைகளை எட்டு மணி நேரம் வெயிலில் உலர்த்தி பாட்டிலில் அடைத்து வைத்து அவ்வப்போது பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு செடி ஐந்து ஆண்டுகளுக்கு பலன் தரும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை இலைகளை அறுவடை செய்து பயன் படுத்தலாம். இந்த இலை கலந்து தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம், சாக்லேட், அல்வா என அனைத்து ஸ்வீட் வகைகளும் அமோக விற்பனையாகிறது. நாமும் இனிப்பு பொங்கல், கேசரி, அப்பம் என இனிப்பு சேர்க்கும் அனைத்திலும் பயன்படுத்தி ஆரோக்கியம் பெறலாம்.
நோய் நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்.
என்பதை நினைவில் நிறுத்தி இது போன்ற பொருட்களின் பயன்பாடுகளை அறிந்து பயன்படுத்துவோமாக!