புஜ்ஜிபாபு கிரிக்கெட் தொடர் நாளை மீண்டும் துவக்கம்! யார் இந்த புஜ்ஜிபாபு?

புஜ்ஜிபாபு கிரிக்கெட் தொடர் நாளை மீண்டும் துவக்கம்! யார் இந்த புஜ்ஜிபாபு?

ல ஆண்டுகளுக்குப் பிறகு புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த போட்டியை மீட்டெடுப்பதென்பது இந்திய கிரிக்கெட் சமூகங்களை ஒன்றிணைத்து, நட்புணர்வை வளர்த்து, கிரிக்கெட் விளையாட்டின் பாரம்பரியத்தைப் போற்றும் என்பதில் சந்தேகமில்லை.

கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களில், கிரிக்கெட் விளையாட்டின் மிகச்சிறந்த நினைவுகளுக்கு மத்தியில் இந்த புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரின் சிறப்புமிக்க கதை உள்ளது. இந்த பெயரைக் கேட்டதுமே முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மனதில் ஏக்கமும் ஆர்வமும் எழும்பும் எனலாம். இது ஒரு பழமையான கிரிக்கெட் போட்டியாகும். இந்தியாவில் காலனித்துவ காலத்திலிருந்தே கிரிக்கெட் போட்டிகள் கலாச்சாரத்தின் அடித்தளமாக இருந்திருக்கின்றன. தற்போது இந்திய கிரிக்கெட் என்பது உலகளவில் ஓர் அடையாளமாக இருக்கும் சமயத்தில், புஜ்ஜி பாபு என்ற வரலாற்று சிறப்புமிக்க தொடரைப் பற்றி நம் அனைவரும் தெரிந்துகொள்வது அவசியம்.  

புஜ்ஜி பாபு தொடரின் வரலாறு: புஜ்ஜி பாபு போட்டி ரஞ்சிக்கோப்பையை விட பழமையானது. சொல்லப்போனால் ஒரு நூற்றாண்டுக்குப் மேல் பழமையானது. இது 1908ல் புஜ்ஜி பாபு என்று அழைக்கப்படும் 'மொதவரபு வெங்கட மகிபதி நாயுடு' காலமான ஒரு வருடத்திற்குப் பிறகு, 1909-10ல் முதன்முதலில் நடத்தப்பட்டது. புஜ்ஜி பாபுவின் மூன்று மகன்களான எம்.பாலையா, சி.இராமசாமி மற்றும் வெங்கடராமனுஜுலு  ஆகியோர், அவர்களின் தந்தையின் நினைவாக நடத்தப்பட்ட போட்டி, கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக உள்ளூர் அணிகளை மட்டுமே கொண்டிருந்தது. 

1960களில் இது அகில இந்திய தொடராக மாறியது. அங்கிருந்து இந்த போட்டி பிரபலமடைந்து, 1971ஆம் ஆண்டு புஜ்ஜி பாபு தொடரில் சுனில் கவாஸ்கர் முதன்முதலில் விளையாடுவதை சென்னையிலிருந்த ரசிகர்கள் பார்த்தனர். பின்னர் இந்தத் தொடர் மேலும் பிரபலமடைந்து இந்தியாவின் பல நட்சத்திர வீரர்களும் இத்தொடரில் விளையாடி புகழ் பெற்றனர். இந்தத் தொடரில் ஒரு போட்டி பொதுவாக மூன்று முதல் நான்கு நாட்கள் வரை விளையாடப்படும். 

பல சதாப்தங்களாக புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடர் ஓர் தொடக்கநிலை வளர்ச்சியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. மேலும் இளம் திறமைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் போட்டியாகவும் பார்க்கப்பட்டது. இதை ஒரு போட்டி என்று சொல்வதை விட இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த கிரிக்கெட் பாரம்பரியத்துக்கும் உள்ளூர் கிரிக்கெட் திறமைகளுக்கும் பெருமை சேர்த்தது என்றே சொல்லலாம். 

புஜ்ஜி பாபு போட்டியின் தேவை: காலத்தின் கட்டாயத்தால், நவீன கிரிக்கெட்டின் பரிணாம வளர்ச்சியால் புஜ்ஜி பாபு போன்ற பாரம்பரிய போட்டிகள் மறக்கப்பட்டன. குறிப்பாக 20 ஓவர் கிரிக்கெட் மற்றும் இந்தியன் பிரிமியர் லீக் ஆகியவற்றின் வருகையானது ரசிகர்கள் மற்றும் ஸ்பான்சர்களின் கவனத்தை ஈர்த்தது. இதனால் பாரம்பரிய கிரிக்கெட் கலாச்சாரம் திசை திரும்பியது. இருப்பினும் நெடுங்காலமாக கிரிக்கெட் போட்டிகளை உயிருடன் வைத்திருந்த புஜ்ஜி பாபு தொடரின் தேவைகுறித்த கேள்விகள் எழுந்து வந்தன. 

முதலில் இத்தொடரின் முக்கியத்துவம் என்பது கிரிக்கெட் வரலாற்றோடு இணைக்கப்பட்டிருப்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இப்போட்டியின் பொற்காலத்தைக் கண்டவர்களுக்கு அதை மீண்டும் காண்பதற்கான ஏக்கத்தை இது அதிகரித்துள்ளது. இந்தத் தொடர் கிரிக்கெட் பாரம்பரியத்தின் அடையாளமாக இருப்பதால், கிரிக்கெட் மைதானங்களில் தங்களுக்கான பாதையை செதுக்கிய வீரர்களுக்கு ஓர் மரியாதை வழங்கும் விதமாக இந்தத் தொடரை நடத்தலாம். 

புஜ்ஜி பாபு போட்டியின் முக்கியத்துவம் கிரிக்கெட் துறையின் மகத்தான வளர்ச்சியை நமக்கு எடுத்துரைக்கிறது. இதுபோன்ற பாரம்பரிய போட்டிகள், வளர்ந்து வரும் திறமையாளர்களுக்கு தங்களின் திறமையை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. பவர் ஹிட்ங் மற்றும் குறுகிய காலத்தில் ஆதிக்கம் செலுத்திய போட்டிகளுக்கு மத்தியில், புஜ்ஜி பாபு கிரிக்கெட் போட்டிகள் பொறுமை, விடாமுயற்சி  போன்ற குணங்களை வளர்கிறது. 

சர்வதேச கிரிக்கெட்டை மட்டுமே சிறந்த போட்டிகளாகப் பார்க்கும் நபர்களுக்கு, இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க உள்ளூர் போட்டிகள், சொந்த நாட்டின் உணர்வையும் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தும் என நம்புவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com