
இந்திய கிரிக்கெட் அணியின் பிஷன் சிங் பேடி திங்கள்கிழமை தமது 77 வயதில் காலமானார். கடந்த இரண்டு வருடங்களாகவே உடல்நலக்குறைவால் பேடி அவதிப்பட்டுவந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் அவர் முழங்கால் வலிக்கு அறுவைச்சிகிச்சை செய்துகொண்டார். அவருக்கு மனைவி அஞ்சு, நேஹா மற்றும் அங்கத் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்தியாவின் சுழற்பந்து வீச்சு வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தியவர் பிஷன் சிங் பேடி. மேலும் இந்தியாவின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்பட்டு வந்தவர்.
இடதுகை சுழற்பந்து வீச்சாளராக 1967 ஆம் ஆண்டில் இந்திய அணியில் தமது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி 1979 ஆம் ஆண்டு வரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 266 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பத்து ஒரு நாள் போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
22 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக விளையாடியுள்ளார். ஈ.ஏ.எஸ். பிரசன்னா, பி.எஸ்.சந்திரசேகர் மற்றும் எஸ்.வெங்கடராகவன் ஆகியோருடன் இணைந்து இந்தியாவின் முதல் ஒருநாள் போட்டி வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தார் பேடி. 1975 உலக கோப்பை போட்டியில் கிழக்கு ஆப்பிரிக்காவை 120 ரன்களுக்குள் கட்டுப்படுத்த உதவியது பிஷன் சிங் பேடியின் சிறப்பான பந்துவீச்சுதான்.
1969-70 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் பேடி 21 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இங்கிலாந்துக்கு எதிராக 25 விக்கெட்டுகளையும், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 18 விக்கெட்டுகளையும், இங்கிலாந்துக்கு எதிராக மேலும் 22 மற்றும் 25 விக்கெட்டுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 31 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார்.
அமிர்தரஸில் பிறந்த இவர், 370 போட்டிகளில் விளையாடி 1,560 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். 1970-ம் ஆண்டு பிஷன் சிங் பேடிக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது.
1990-களில் இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார். இந்திய அணியில் இருந்து விலகிய பிறகு, பேடி சில மாநில அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்தார். 1992-93 சீசனில் பஞ்சாப் அணி, ரஞ்சி டிராபி கோப்பையை வெல்வதற்கு காரணமாக இருந்தவர் பிஷன்சிங் பேடி.
கடந்த சிலமாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு சிகிச்சைபெற்று வந்த பிஷன் சிங் பேடி, திங்கள்கிழமை காலமானார்.
கிரிக்கெட் உலகத்தைச் சேர்ந்த பலர் பேடி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். “பிஷன் சிங் பேடியின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. கிரிக்கெட் உலகில் அவர் ஆற்றிய பங்கு மகத்தானது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளர் ஜெய்ஷா, தமது இரங்கல் செய்தியில், “இந்திய கிரிக்கெட் அணி, தலைசிறந்த முன்னாள் வீரரை இழந்துள்ளது. சுழற்பந்து வீச்சில் அழியாத முத்திரையை பதித்தவர். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் கேப்டனும் இடதுகை சுழற்பந்துவீச்சாளருமான பிஷன் சிங் பேடி இப்போது நம்மிடையே இல்ல. அனைவராலும் அவர் நினைவுகூரப்படுவார். அவரது இழப்பு கிரிக்கெட் உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகுர் தெரிவித்துள்ளார்.