2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர்! இதுவரை ஆதிக்கம் செலுத்திய நாடு எதுவென்று தெரியுமா?

brazil team Champion
Fifa foot ball word cupImage credit: Sportsbyte & ESPN
Updated on

உலகம் முழுக்க அதிக ரசிகர்கள் கொண்ட புகழ்பெற்ற விளையாட்டாக முதலிடத்தில் இருப்பது கால்பந்து தான். ஆனால், இந்தியாவில் மட்டும், இந்தியாவில் மட்டுமல்ல அதன் அண்டை நாடுகளிலும் கோலோச்சுவது என்னவோ கிரிக்கெட் தான். பொதுவாக வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களை மற்ற நாட்டவர்கள் கிண்டல் செய்வது, கால்பந்து விளையாட்டு பற்றி தெரியாததை வைத்து தான்.

இந்தியாவிலும் கால்பந்து அணி இருக்கிறது. பெரும்பாலும் அது தகுதிச்சுற்றுகளில் நுழைவது இல்லை. இதற்கு இந்தியர்களும் இந்திய அரசாங்கமும் கால்பந்தை பெரிதாக கண்டு கொள்ளாததும் ஒரு காரணம். அதே நேரம் நீண்ட காலமாக கம்யூனிஸ்ட்களின் ஆட்சியில் இருந்த மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் கால்பந்து மீதான ஆர்வம் சற்று அதிகம் தான்.

Summary

சர்வதேச அளவில் கால்பந்து போட்டிகளுக்கு வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். இவர்களின் வெறி என்னவென்றால் பல நேரங்களில் தங்கள் அணி தோற்று விட்டால், அந்த மைதானத்தையே கலவர பூமியாக்கி விடுவார்கள். ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து தொடர்பான கலவரங்கள் மிகவும் அதிகம். இங்கு ஊர்களுக்குள் ஏரியா சண்டை போல, அங்கு கால் பந்து தொடர்பாக சண்டை நடைபெறுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் அதிக புகழ் பெற்றிருந்தாலும் கால்பந்து உலகில் ஆதிக்கம் செலுத்துவது என்னவோ தென் அமெரிக்க நாடான பிரேசில் தான். எந்த ஒரு நாடும் பிரேசில் அளவிற்கு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் வெற்றிகளை குவித்தது இல்லை. இறுதியாக 2002 இல் தான் பிரேசில் அணி ஃபிஃபா உலகக்கோப்பையை வென்றது. தற்போது உலக கோப்பையை வெல்வதற்கு அது காத்திருக்கும் காலம் கால் நூற்றாண்டை தொடவுள்ளது.

இந்த முறை எப்படியும் உலக கோப்பையை கைப்பற்றி, தங்களின் பழைய கால்பந்து உலக வல்லரசு நிலையை எட்ட வேண்டும் என்று பிரேசில் திட்டமிட்டுள்ளது. பிரேசில் அணி இதுவரை ஃபிஃபா உலகக் கோப்பையை 5 முறை வெற்றி பெற்று, அதிக உலக கோப்பையை பெற்ற நாடாக சாதனை செய்துள்ளது. பிரேசில் 1958, 1962, 1970, 1994 மற்றும் 2002-ஆம் ஆண்டுகளில் கால்பந்து உலக கோப்பையை வென்றுள்ளது.

ஒரு தென் அமெரிக்க நாட்டின் ஆதிக்கத்தை வீழ்த்துவதற்கு ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனியும் இத்தாலியும் கடுமையாக போராடி வந்துள்ளன. இந்த இரண்டு நாடுகளும் தலா 4 முறை உலக கோப்பையை வென்று பிரேசில் சாதனை அருகில் நெருங்கி உள்ளன. இன்னும் ஒரு முறை உலக கோப்பையை பெற்று விட்டால் இவர்கள் பிரேசில் அணியின் சாதனையை சமன் செய்து விடுவார்கள்.

இவர்களுக்கு அடுத்ததாக இன்னொரு தென் அமெரிக்கா நாடான அர்ஜென்டினா 3 முறை உலக கோப்பையை வென்றும், தற்போதைய சாம்பியன் அணியாகவும் இருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் பிரான்ஸ் 2 முறை உலக கோப்பை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இங்கிலாந்து ,ஸ்பெயின் , உருகுவே ஆகிய நாடுகள் பல ஒரு முறை உலக கோப்பையை வென்றுள்ளன.

1970-ல் மெக்சிகோவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடர் தான் ,இதுவரை நடந்ததில் சிறந்த தொடராக அறியப்படுகிறது. பீலே , ஜெய்ர்சின்ஹோ, ரிவெலினோ மற்றும் கார்லோஸ் ஆல்பர்டோ ஆகியோர் இடம்பெற்ற பிரேசில் அணி, ஒரு போட்டியில் கூட தோற்காமல் இறுதியில் உலக கோப்பையை வென்றது. 3 முறை சாம்பியன்கள் என்ற பெருமையுடன் ஜூல்ஸ் ரிமெட் உலகக் கோப்பை அவர்களுக்கு நிரந்தரமாக வழங்கப்பட்டது. அதன் பின்னர்தான் தற்போதைய ஃபிஃபா உலகக் கோப்பை என்ற புதிய உலகக் கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டது.

2026 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை மீண்டும் பிரேசிலை ராஜாவாக மாற்றுமா? பிரேசிலின் சாதனையை ஜெர்மனியும் இத்தாலியும் சமன் செய்யுமா? அல்லது மற்ற நாடுகள் கோப்பையை வெல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com