'புதிய காற்றை சுவாசிக்கிறேன்': ரிஷப் பண்ட் நெகிழ்ச்சி!

'புதிய காற்றை சுவாசிக்கிறேன்': ரிஷப் பண்ட் நெகிழ்ச்சி!

ந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும் அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் கடந்த 30ம் தேதி டில்லியிலிருந்து உத்தரகாண்டில் உள்ள தனது சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தபோது, சாலை விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்தார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், தற்போது உடல் நலம் தேறி வருகிறார். அவர் முற்றிலும் உடல் நலம் பெற இன்னும் ஆறு மாத காலம் ஆகும் என்று டாக்டர்கள் கூறிவிட்டதால், இந்த ஆண்டில் வரும் பெரும்பாலான கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

அதிலும் முக்கியமாக, இந்த வருடம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடர் முழுவதும் அவர் விளையாட வாய்ப்பே இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இது தவிர, இந்த வருடம் அக்டோபர், நவம்பம் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்களிலும் அவர் விளையாட மாட்டார் என்றே தெரிகிறது. ஏனென்றால் அதற்குள் அவர் உடல் தகுதியை எட்டுவது சந்தேகமே என்று கிரிக்கெட் வாரிய வட்டாரச் செய்திகள் கூறுகின்றன. மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வரும் தகுதியை ரிஷப் பண்டின் உடல் நிலை பெற்று விட்டாலும், அவரது உடல் காயங்கள் முழுமையாக ஆறும் வரை அவர் ஓய்வில்தான் இருக்க வேண்டும் என்று அவருக்குச் சிகிக்சை அளித்த மருத்துவக் குழுவினர் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது ரிஷப் பண்ட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது முகம் காட்டாத ஒரு படத்தையும் செய்தி ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அந்தப் படத்தில் அவர் வெளியே அமர்ந்து இயற்கையை ரசிப்பது போன்று காணப்படுகிறார். அதோடு அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘புதிய காற்றை சுவாசிப்பதை ஆசிர்வதிக்கப்பட்டவனாக நான் உணர்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரிதும் வைரலாகி வருகிறது. மேலும், அதைப் பார்க்கும் ரசிகர்கள், ‘விரைவில் நீங்கள் பூரண குணம் பெற்று இந்திய அணிக்காக மீண்டும் ஆடுவீர்கள்’ என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com