தற்போது கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் நடந்து கொண்டிருக்கும் கத்தாரின் தேசிய விலங்கு அரேபியன் மறிமான் (the Arabian oryx). பார்ப்பதற்கு புஷ்டியான ஆடு போலவே இருக்கும். ஆனால் அதன் இரண்டு நீண்ட கொம்புகள் இது மான் என்பதை உணர்த்தும். 1970களில் இது கிட்டத்தட்ட உலகில் இருந்து அழிந்து விட்டது எனலாம். ஆனால் விலங்கியல் பூங்காக்களில் இதை பத்திரமாக பாதுகாக்கப்பட்டு இனப்பெருக்கம் செய்யப்பட்டு 1980லிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அதிக எண்ணிக்கைக்கு வந்துவிட்டன.
கால்பந்து குறித்த கட்டுரையில் ஏதோ ஒரு மானைப் பற்றி எழுதக் காரணம் இருக்கிறது. இம்முறை உலக போட்டியில் ஸ்பெயினும் மொரோக்கோவும் மோதவிருந்த நிலையில் இவற்றில் ஸ்பெயின் அணி வெற்றி பெறும் என்று கூறியிருக்கிறது அரேபியன் மறிமான் ஒன்று. தற்போது இருக்கும் ஒவ்வொரு போட்டிக்கான இரு தேசிய அணி கொடிகள் அடங்கிய தொட்டியில் தனக்கான உணவை போடுவார்கள். இரண்டு ஜோடிகளும் சம தூரத்தில் இருக்கும். எந்த தொட்டியை அந்த மான் தேர்ந்தெடுக்கிறது அந்த நாட்டு அணிதான் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை. இப்படித்தான் ஸ்பெயின் வெற்றி பெறும் என்று ஜோதிடம் கூறியது அரேபியன் மறிமான். ஆனால் அது பொய்த்துவிட்டது.
இது பொய்ப்பதற்கு முன் அந்த மானின் ஜோதிடத்தை நகைச்சுவையாக எண்ணி ஒதுக்கி விடாமல் சிலர் சீரியசாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஒரு பின்னணி உண்டு.
2010 கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் நடந்தபோது தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது பால் என்று பெயரிடப்பட்ட ஆக்டோபஸ். ஜெர்மனியிலுள்ள கடல்வாழ் மையம் என்ற இடத்தில் வசித்த இந்த ஆக்டோபஸ் ஜெர்மனி பங்கேற்ற ஒவ்வொரு போட்டியிலும் எந்த அணி வெல்லும் என்பதைக் கணித்துச் சொன்னது. அரையிறுதிச் சுற்றில் ஜெர்மனி தோற்கும் என்பதையும் கணித்தது. போட்டி நடைபெறும்போது பல ஜெர்மானியர்கள் சுரத்தில்லாமல் காட்சி அளித்தனர். காரணம் பால் மீது கொண்ட நம்பிக்கை. இறுதிச் சுற்றில் ஸ்பெயின்தான் வெற்றி பெறும் என்ற இந்த ஆக்டோபஸின் கணிப்பும் சரியானது. நெதர்லாந்தை வீழ்த்தி உலகக்கோப்பையை ஸ்பெயின் தட்டிச்சென்றது.
ஆக்டோபஸுக்குப் பேசும் சக்தி உண்டா என்ன? அது எப்படிக் கணிக்கும்? இரண்டு ஒரே அளவுள்ள கண்ணாடிப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். போட்டியில் பங்கு பெறும் ஒவ்வொரு நாட்டின் தேசியக் கொடியும் ஒவ்வொரு பெட்டியில் இருக்கும். இரண்டிலும் ஆக்டோபஸுக்கான உணவு இருக்கும். ஆக்டோபஸை அவற்றின் அருகே விடுவார்கள். அது எந்த பெட்டியின் மீது அந்த ஆக்டோபஸ் படர்கிறதோ அந்தப் பெட்டியில் உள்ள கொடியை தேசியக் கொடியாகக் கொண்ட நாட்டு அணிதான் போட்டியில் வெற்றி பெறும்.
இம்முறை எந்த அணி ஜெயிக்கும் என்று அந்த ஆக்டோபஸ் கணிக்க முடியாது. காரணம் 2010 இல், தனது இரண்டரை வயதில், இறந்து விட்டது என்பதுதான் பதில். அதன் நினைவாக ஒரு சிறிய நினைவாலயத்தையும் கட்டியிருக்கிறார்கள்.
அரேபிய மறிமானின் ‘ஜோதிடம்’ பொய்த்துவிட்டது. ஸ்பெயின் மொராக்கோவுடனான மோதலில் வெற்றி பெற்வில்லை. பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-0 கணக்கில் மொராக்கோ வெற்றி பெற்றுவிட்டது.
கடந்த இரு நாட்களில்...
சுவிட்சர்லாந்து அணியை 6-1 கோல் கணக்கில் தோற்கடித்து கடைசி அணியாக கால் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது போர்ச்சுகல்.
இன்று உலகத் தரவரிசையில் எட்டாம் இடத்தில் உள்ள நெதர்லாந்து அணி உலகத் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள அர்ஜென்டினா அணியுடன் காலிறுதிச் சுற்றில் மோதுகிறது.
இன்று உலகத் தரவரிசையில் பன்னிரண்டாம் இடத்தில் உள்ள க்ரோவேஷியா அணி உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள பிரேசில் அணியுடன் காலிறுதிச் சுற்றில் மோதுகிறது.