ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியில் விராட் கோலி இடம்பெற்றுள்ளார். கடந்த 2023 நவம்பர் மாதத்துக்குப் பிறகு டி20 ஒருநாள் போட்டியில் விராட் கோலி இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூத்த தேர்வுக்குழு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறும் வீர்ர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த போட்டிகளுக்கு ரோகித் சர்மாவே கேப்டனாக இருப்பார். ஆனால், அணியில் விராட் கோலி சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட தொடர் வருகிற 11 ஆம் தேதி மொஹாலியில் தொடங்குகிறது. இரண்டாவது போட்டி 14 ஆம் தேதி இந்தூரிலும் கடைசி டி20 ஒருநாள் போட்டி பெங்களூருவிலும் நடைபெறுகிறது. வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ள டி20 உலக கோப்பைப் போட்டிக்கு முன்னதாக நடைபெறும் கடைசி டி20 போட்டித் தொடராகும் இது.
இந்திய அணியில் ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், ரவி விஷ்ணோய், குல்தீப் யாதவ், அர்ஷதீப் சிங், அவேஷ் கான் மற்றும் முகேஷ் குமார் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணியில் இளம் வீர்ர்களும், அனுபவம் வாய்ந்த வீர்ர்களும் இடம்பெற்றுள்ளனர். ஆனால், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் இடம்பெறவில்லை. அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் இருப்பதால் அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
2022 உலக கோப்பை போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. அவர்கள் இருவரும் 50 ஓவர் போட்டிகளிலேயே கவனம் செலுத்தி வந்தனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் அவர்கள் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவர்கள் தொடர்ந்து ஓய்வில் இருந்தனர். 2024 டி20 உலக கோப்பை போட்டிக்கு அவர்கள் தேவை என்பதால் ஓய்வு கொடுக்கப்பட்டதாக கருதப்பட்டது. ஆனால், இப்போது திடீரென அவர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் இருவரும் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. 2023 உலக கோப்பை போட்டியிலிருந்தே அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. தென்னாப்பிரிக்க போட்டியின் போது காயம் அடைந்ததால் சூர்யகுமார் ஓய்வில் இருக்கிறார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு கேப்டன் இப்ராகிம் ஜர்தான் தலைமையில் 16 பேர் அடங்கிய குழு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இக்ரம் அலிகில் (விக்கெட் கீப்பர்), ஹஸ்ரத்துல்லா ஜஜாய், ரஹ்மத் ஷா, நஜ்புல்லா ஜர்தான், முகமது நபி, கரீம் ஜனத், அமனுல்லா உமர்ஜாய், ஷராப்புதீன் அஷ்ரப், முஜிபுர் ரஹ்மான், ஃபஸல் ஹக் பரூக், பரீத் அகமது, நவீன் உல் ஹக், நூர் அகமது, முகமது சலீம், குவாய் அகமது, குல்புதீன் நயீப் மற்றும் ரஷீத்கான் இடம்பெற்றுள்ளனர்.