
இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க கிளாசிக்கல் செஸ் போட்டியான குவாண்ட்பாக்ஸ் 3-வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் ரீஜென்சி ஓட்டலில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த போட்டி இன்று (ஆகஸ்ட் 6-ம்தேதி) முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது. இம்முறை போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பரிசுத் தொகையும் ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இந்தப் போட்டி ஆசியாவின் முக்கிய செஸ் நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மாஸ்டர்ஸ் மற்றும் சாலஞ்சர்ஸ் என இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும். இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.
கடந்த 2024 சேலஞ்சர்ஸ் பிரிவில் கோப்பை வென்றதால் இந்தியாவின் பிரணவ் இம்முறை மாஸ்டர் பிரிவில் களம் இறங்குகிறார்.
இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் கிராண்ட்மாஸ்டர்களான இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி, விதித் குஜராத்தி, கார்த்திகேயன் முரளி, கடந்த ஆண்டு சேலஞ்சர்ஸ் பிரிவில் சாம்பியனான பிரணவ், நிஹால் சரின், அமெரிக்காவை சேர்ந்த அவோன்டர் லியாங் மற்றும் ராய் ராப்சன், நெதர்லாந்தை சேர்ந்த அனிஷ் கிரி, ஜெர்மனியை சேர்ந்த வின்சென்ட் கீமர், நெதர்லாந்தை சேர்ந்த ஜோர்டென் வான் பாரஸ்ட் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர்.
‘ரவுண்ட் ராபின் லீக்’ முறையில் நடைபெறும் இந்த போட்டி 9 சுற்றுகள் கொண்டதாக நடத்தப்படுகிறது. இதன் முடிவில் முதலிடத்தை பிடிப்பவர் சாம்பியன் பட்டத்தை வென்றதாக அறிவிக்கப்படுவார்.
மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வீரருக்கு ரூ.25 லட்சமும், 24.5 ஃபிடே சர்க்யூட் புள்ளிகளை பெறுவார். இந்த புள்ளிகள் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு தகுதி பெறுவதற்கு முக்கியமானதாகும். 2-வது இடத்தை பிடிப்பவருக்கு ரூ.15 லட்சமும், 3-வது இடத்தை பிடிக்கும் வீரருக்கு ரூ.10 லட்சமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. கடைசி இடத்துக்கு தள்ளப்படுபவருக்கு ஆறுதல் பரிசாக ரூ.1.80 லட்சம் கிடைக்கும்.
இந்தியாவின் சர்வதேச மாஸ்டர் ஹர்ஷ் வர்தன், கிராண்ட்மாஸ்டர்கள் ஆர்யன் சோப்ரா, பிரனேஷ், இனியன், ஆர்.வைஷாலி, அதிபன் பாஸ்கரன், ஹரிகா, அபிமன்யு புரானிக், லியோன் லூக் மென்டோன்கா, தீப்தயன் கோஷ் ஆகிய வீரர், வீராங்கனைகள் சேலஞ்சர்ஸ் பிரிவில் பங்கேற்று விளையாட உள்ளனர்.
சேலஞ்சர்ஸ் பிரிவில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 9-வது மற்றும் இறுதி சுற்று முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர் மகுடம் சூடுவார். சேலஞ்சர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வீரருக்கு ரூ.7 லட்சம் பரிசுத்தொகையும், 2026-ம் ஆண்டு மாஸ்டர்ஸ் போட்டியில் விளையாடுவதற்கான இடமும் வழங்கப்படும்.
சேலஞ்சர்ஸ் பிரிவில் 2-வது மற்றும் 3-வது இடம் பிடிக்கும் வீரர்களுக்கு முறையே ரூ.4 லட்சமும், ரூ.3¼ லட்சமும் பரிசாக வழங்கப்படும். கடைசி இடம் பெறுபவருக்கு ரூ.1 லட்சம் கிடைக்கும்.
இந்த போட்டிகள் தினமும் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெறும். மேலும் இந்த போட்டியை நேரில் காண்பதற்கான டிக்கெட்களை 'புக் மை ஷோ' என்ற இணையதளம் வாயிலாக பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி விஐபி டிக்கெட் ரூ.3,500-க்கும், சாதாரண டிக்கெட் ரூ.750-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.