

ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையே ஐபிஎல் 2023 16வது சீசன் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இன்று இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
ரசிகர்களின் பொழுதுபோக்கில் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருப்பது விளையாட்டுப்போட்டிகள். கால்பந்து, கபடி, கிரிக்கெட் என பல விளையாட்டுப் போட்டிகள் இருக்கும் நிலையில், இந்தியாவில் அதிகளவில் ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு என்றால் அது கிரிக்கெட்தான். இதற்கான ரசிகர் பட்டாளம் என்பது லட்சத்தில் அல்ல... கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு இந்தியாவில் கிரிக்கெட் என்பது மிக முக்கிய விளையாட்டாக பார்க்கப்பட்டு ரசிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வருடந்தோறும் ஐபிஎல் போட்டிகள் நடந்துவரும் நிலையில், தற்போது ஐபிஎல் 2023, 16வது சீசன் போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன.
இந்நிலையில், அகமதாபாத்தில் நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றிபெற வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கும் வேளையில், திருவாரூரைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர், சென்னை அணி இறுதிப்போட்டியில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழபாலம் முதல்சேத்தி மாரியம்மன் கோவில் திருவிழாவில், அந்த ரசிகர் அலகு குத்தி, தனது வேண்டுதலை நிறைவேற்றியுள்ளது அனைவரையும் பிரமிப்படைய வைத்துள்ளது.
இறுதிப் போட்டியானது சென்னை அணி மற்றும் குஜராத் அணிக்கிடையே நேற்றே நடந்திருக்கவேண்டும். ஆனால், மழை குறுக்கீட்டால், ரிசர்வ் டே விதிப்படி இன்று அகமதாபாத்தில் வைத்து நடைபெறுகிறது. இன்றும் மழை வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், முடிவு எப்படி இருக்கும் என்பதையும் சற்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.